சொர்க்கத்தில் சுக வாழ்வு 

உலகில் வாழும் மனிதனின் உயரிய இலக்கு மறுமையில் சொர்க்கத்தில் சுகமாக வாழ்வதே. சொர்க்கத்தில் சுக வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்பதை எழில்மறை குர்ஆனின் 39}20 ஆவது வசனம்,
சொர்க்கத்தில் சுக வாழ்வு 
Published on
Updated on
2 min read

உலகில் வாழும் மனிதனின் உயரிய இலக்கு மறுமையில் சொர்க்கத்தில் சுகமாக வாழ்வதே. சொர்க்கத்தில் சுக வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்பதை எழில்மறை குர்ஆனின் 39}20 ஆவது வசனம், " எவர் ஏக இறைவனுக்கு அஞ்சி நடக்கின்றனரோ அவர்களுக்கு மேலான இடமுண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் இருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடும். இவ்வாறே அல்லாஹ் வாக்களிக்கிறான். அல்லாஹ் அவனின் வாக்குறுதியில் மாற மாட்டான் என்று கூற 9}72 ஆவது வசனம் உறுதி செய்கிறது. 
குர்ஆனின் விரிவுரை விளக்க நூல் இப்னு கதீரில் அல்லாஹ் சொர்க்கத்தில் ஏற்படுத்தியிருக்கும் உயர்தரமான வாழ்விடங்கள் அழகிய கட்டடங்களாக இருக்கும். வெள்ளி தங்க கிண்ணங்களிலும் கோப்பைகளிலும் பால் மற்றும் பருகும் பானங்கள் பரிமாறப்படும். உற்சாகமான நறுமணம் கமழும். சொர்க்க கட்டடங்களின் தரையில் முத்துகளும் மரகத கற்களும் கிடக்கும். மணல் இல்லாமல் குங்கும பூக்கள் பரவி கிடக்கும். சொர்க்கத்தில் நுழைந்தவர் இந்த இன்பங்களைத் துய்ப்பர். சோர்வின்றி சுகமாக இருப்பர். அவரின் ஆடைகள் அழுக்கடையாது. அவரும் இளமை மாறி முதுமை அடைய மாட்டார். 
சொர்க்கவாசிகளின் சுகமான வாழ்வைச் சுருக்கமாக கூறுகின்றன 88}10 முதல் 16 ஆவது வசனங்கள். மேலான சொர்க்க பதியில் இருக்கும் செழிப்பான முகங்கள் யாதொரு வீண் சொற்களையும் செவியுறாது. சொர்க்கத்தில் வற்றாது ஓடும் ஒரு சுனை உண்டு. அதில் உயர்ந்த இருக்கைகளும் இருக்கும். கெண்டிகளும் வைக்கப்பட்டிருக்கும். திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் பண்ட பாத்திரங்கள் வெள்ளியால் ஆனவை. வேறு இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் பாத்திரங்கள் தங்கத்தினால் ஆனவை. அங்கு வாழ்வோரின் கண்கள் ஒளிமிக்கவை.
சொர்க்க இருப்பிடங்கள் குறித்த குர்ஆனின் வசனங்கள் அடியார்கள் அதனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அம்முயற்சிகள் நற்செயல்களே. அந்நற்செயல்களில் முதலாவது அல்லாஹ்வின் மீது அசையாத மாறாத நம்பிக்கை கொள்வது. வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்துவது. 2}82 ஆவது வசனம் எவர் உண்மையாக நம்பி நற்செயல் செய்கிறாரோ அவரே சொர்க்கவாசி. அதில் அவர் என்றென்றும் தங்குவர் என்று உரைக்கிறது. நற்செயல் புரியும் நல்லோர்களுக்குரிய பயனைப் பன்மடங்கு பெருக்கி தரும் பேராளன் அல்லாஹ்வின் அருளால் அந்நல்லோர் சொர்க்கத்தில் சுகமாக நிம்மதியாக நிலையாக வாழ்வார்கள்.
உங்களின் பொருள்களும் பிள்ளைகளும் உங்களை இறைவனிடத்தில் நெருக்கமாக்கி வைக்காது. இறையச்சத்தோடு நற்செயல்கள் செய்ததற்குப் பதில் அவர்களுக்கு இரட்டிப்பு கூலி கிடைக்கும். அவர்கள் சொர்க்க மாளிகைகளில் கவலையின்றி களிப்பாய் இருப்பார்கள் என்று 34}37 ஆவது வசனம் கூறுகிறது. உலக செல்வங்கள் பொருள்கள் மீது தீரா மோகம் கொண்டு மாயும் வரை மாறாதிருப்போர் மறுமையில் சொர்க்க மாளிகைகளில் சுகமாக வாழ்வர்.
இறைதூது பெற்ற இனிய நபி (ஸல்) அவர்கள் அதனை எடுத்துரைத்து மக்களைத் திருத்த தன் உடல் உழைப்பு பொருள் செல்வம் அனைத்தையும் அல்லாஹ்விற்காக அர்ப்பணித்த அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கு சொர்க்கத்தில் கோணல் இல்லாது நேர்த்தியாக அமைக்கப்பட்ட முத்து மாளிகை இருக்கும்.
இறைவனைத் தொழும் இனிய இல்லம் கட்டுவோருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான். அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த புண்ணிய பள்ளிகளைக் கட்டுவோர், பராமரிப்போர், பழுது பார்ப்போர், தூய்மை படுத்துவோர், புனரமைப்போரை அல்லாஹ் சொர்க்கத்தில் கண்ணியப் படுத்துகிறான்.
காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று தொழுவோருக்கு உரிய இடத்தைத் தயார் செய்கிறான் தயாளன் அல்லாஹ். தொடர்ந்து கடமையான தொழுகையோடு உபரி (கூடுதல்) தொழுகை தொழுவோருக்கும் வீடுகளைத் தயார் செய்கிறான் நாம் நாளும் தொழும் அல்லாஹ்.
அழகிய நற்குணம் உடையோருக்கும் சொர்க்கத்தில் உரிய வாழ்விடம் கிடைக்கும். உண்மையை உறுதியாக உரைப்போருக்கும் நகைச்சுவையாக கூட பொய் பேசாதவருக்கும் சொர்க்கத்தின் மையப் பகுதியில் இருப்பிடம் இருக்கும். வீண் வாக்குவாதம் செய்யாதவருக்கு சொர்க்கத்தின் வெளிப்பகுதியில் வீடு கிடைக்கும். சொர்க்க அறைகளில் உள்ளிருந்து வெளியில் பார்க்க முடியும். வெளியிலிருந்தும் உள்ளே பார்க்க முடியும். 
ஒரு கிராமவாசி சொர்க்கத்தில் சுக வாழ்வு யாருக்குக் கிடைக்கும் என்று கேட்டார். அவருக்கு சொல்லப்பட்ட பதில். உயர்தரமான பேச்சைப் பேசுபவர், ஏழைகளுக்கு உணவு அளிப்பவர், நோன்பு நோற்பவர், இரவில் மனிதர்கள் உறங்கும் வேளையில் எழுந்து தொழுபவர், மக்களுக்கு நன்மை செய்பவர், வளியவர்களுக்கு உதவுபவர், நோயாளிகளை விசாரித்து வேண்டிய உதவிகளை விழைந்து செய்து நோய் தீர, இறைஞ்சுபவர்களுக்குச் சொர்க்கத்தில் சுகமாய் வாழும் உறைவிடம் உத்திரவாதம். 
வாழ்வின் இனிய துன்பங்களைச் சமமாக சகித்துக்கொண்டு அன்றாடப் பணிகளைத் தொய்வின்றி தொடர்பவர் அனைத்தும் அல்லாஹ்வின் அருள் என்ற நம்பிக்கையில் செயல்படுபவர் சொர்க்கத்தில் சுகமாய் வாழ்வர் என்று வான்மறை குர்ஆனின் 29}58, 59 ஆவது வசனங்களில் வாக்களிக்கிறான் அல்லாஹ்.
26}85 ஆவது வசனம் பாக்கியம் நிறைந்த சொர்க்கத்தின் வாரிசு உரிமைக்கு உரியவனாக என்னை ஆக்கி வைப்பாயாக என்று இறைவனை இறைஞ்ச இயம்பும் வண்ணம் அல்லாஹ்வைத் தொழுது தொடர்ந்த நற்செயல்களைச் செய்து செய்த செயல்களுக்கு உரிய பயனாய் பாக்கியம் நிறைந்த சொர்க்கத்தின் வாரிசுகளாக ஆகி சுகமாய் வாழ வல்லோன் அல்லாஹ் அருள்புரிவானாக.
- மு.அ. அபுல் அமீன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com