

தெண்ணீர் வயல் தொண்டை நாடு நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் வாக்கிற்கிணங்க செல்வம்மலி குன்றத்தூரில் அவதரித்தார் சேக்கிழார். சேக்கிழாருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருண்மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த காரணத்தால் கோவூர்கிழார் என வழங்கி அதுவே பின்னர் சேக்கிழார் ஆனது.
சேக்கிழாரின் தந்தை பெயர் வெள்ளியங்கிரி என்பதும் தாயார் அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாக உள்ளன. அவரது தம்பியின் பெயர் திருஞான சம்பந்தரின் திருப்பெயராகிய "பாலறாவாயர்' என்பதாகும். இளம் வயதிலேயே கல்வி, ஒழுக்கம், பக்தி ஞானம் ஆகியவற்றில் தலைசிறந்து காணப் பெற்றமையினால் இவரது புலமையும் புகழும் சோழ மன்னனின் செவிகள் வரை பாய்ந்தது. தக்கோரை அனுப்பி, வரவழைத்து கெüரவம் தந்து தலைமை அமைச்சராக்கி "உத்தம சோழப்பல்லவன்' என்னும் பட்டம் தந்து அதிகார உரிமைகளை வழங்கினான்.
அமைச்சுரிமை பெற்ற சேக்கிழார் பெருமான் கும்பகோணத்துக்கு அருகில் தங்கினார். இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத ஈசன் திருவடிகளை தினந்தோறும் காலையும், மாலையும் போற்றும் வண்ணம் திருநாகேசுரத்து ஈசன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார். சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சுரம் போலவே தமது ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்ற பெயரால் ஆலயம் அமைத்து தினசரி ஆறுகால பூஜைகள் செய்திட வேண்டுவன செய்தார்.
மன்னன் சைவத்திலிருந்து மாற விரும்பியபோது சைவத்தின் பெருமையையும், சிவபெருமானின் பேரருளையும், அடியார்களின் சேவை மற்றும் தியாக வரலாறுகளையும் மன்னர் சற்று சிந்தித்தால் நலம் என்று எடுத்துரைத்தார் சேக்கிழார். மன்னனும் சேக்கிழாரின் அன்பில், எடுத்துச் சொல்லும் தாயன்பில் பெரிதும் உளம் வைத்து, அப்படியானால் இதனை விடச் சுவையான வரலாறும் உளதோ? எனக் கேட்டான். சேக்கிழாரும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்ந்த அற்புத நாயன்மார் பெருமக்களின் வரலாற்றினை சிறிது எடுத்துரைத்தார். தேசமும் மக்களும் நல்வழி செல்ல வேண்டின் தாங்கள் எனக்கு எடுத்துரைத்த இச்சிறப்பான தகவல்களை ஏன் ஒரு முழு நூலாக ஆக்கித் தரக்கூடாது என வினவினார்.
தேசம் உய்வு பெற, சைவம் தழைத்திட ஈசனின் கட்டளையாகவே சேக்கிழார் அதனைக் கருதினார். அடியார்கள் வரலாற்றினை ஈசனருளால் பாடித்தருகிறேன் என உரைத்தார்.
மன்னனும் மிக மகிழ்ந்து அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து தந்தார். சேக்கிழார் பெருமானும் தில்லையம்பதி சென்று ஆடல் வல்லானையும், அன்னை சிவகாமியையும் வணங்கி நூல் எழுத அருள் கேட்ட போது அம்பல வாணனே "உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்து அருளினார். சேக்கிழார் பெருமானும் "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கி, "அடியார் புகழ் நின்றது உலகெலாம்' என நிறைவு செய்தார்.
மன்னனும் மனம் மகிழ்ந்து அரங்கேற்றம் செய்திட தில்லைக்கு வந்தான். சைவ அடியார் பெருமக்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார் சேக்கிழார் பெருமான். நடராஜப் பெருமானுக்கு உகந்த சித்திரைக் திருவாதிரையில் தொடங்கி, சித்திரைத் திருவாதிரையிலேயே நிறைவு செய்தார்.
திருக்கயிலையில் தொடங்கி, திருக்கயிலேயே நிறைவெய்துமாறு திருத்தொண்டர் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை வகை, தொகை நூல்களாகக் கொண்டு பதிமூன்று சருக்கங்களோடு 4286 பாடல்களாக அமைக்கப்பெற்று திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் அரங்கேற்றப் பெற்றது.
மாமன்னன் அநபாயச் சோழன் சேக்கிழாரை யானை மீது அமரச்செய்து தான் அவர் பின்னால் அமர்ந்து தானே தன்னிரு கைகளால் அவருக்கு கவரி வீசி நன்றியினைப் புலப்படுத்தினார்.
மன்னன் பணி தவிர்த்து, மன்றிலாடும் ஈசன் பணியே பணியாய்க் கொண்டு தில்லையிலே வாழ்ந்து தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூசத்திருநாளில் தில்லை நாதனின் திருவடிகளில் கலந்தார். தமிழைப் போற்றும் ஒவ்வொருவருக்கும் பெரியப் புராணத்தைப் பரவச் செய்வோம் எனும் உறுதி மொழியை இந்த நன்னாளில் ஏற்போம்
- இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.