பொருநை போற்றுதும்! - 16

கல்லிடைக்குறிச்சி வேதாந்தம் பாகவதர் என்று வெறுமே வாயால் சொன்னால் போதும், நாத இன்பம் உடலிலும் உள்ளத்திலும் நிறைந்துவிடும் என்று நெல்லைக்காரர்கள் சிலாகிப்பது வழக்கம். பிரம்மஸ்ரீ முத்து சாஸ்திரிகளுக்கும் 
பொருநை போற்றுதும்! - 16
Updated on
3 min read

கல்லிடைக்குறிச்சி வேதாந்தம் பாகவதர் என்று வெறுமே வாயால் சொன்னால் போதும், நாத இன்பம் உடலிலும் உள்ளத்திலும் நிறைந்துவிடும் என்று நெல்லைக்காரர்கள் சிலாகிப்பது வழக்கம். பிரம்மஸ்ரீ முத்து சாஸ்திரிகளுக்கும் பிச்சம்மாளுக்கும் 1875 -ஆம் ஆண்டு வேதாந்தம் பிறந்தார். திருவாவடுதுறை திருமடத்தின் ஆகம சாஸ்திர குருவாகத் தந்தையார் திகழ்ந்ததால், காவிரிக்கரையில்  இவருடைய சிறு வயது சங்கீதத்திலும் ஹரிகதையிலும் அபார தேர்ச்சி பெற்று, பல்லோருடைய பாராட்டுகளையும் இவர் பெற்ற நிலையில், தந்தையார் காலமாகிவிட, வேதாந்தம் கல்லிடைக்குறிச்சிக்குத் திரும்பினார். பின்னர் கும்பகோணத்திற்குக் குடியேறினார். 

இவருடைய கச்சேரிகள் எப்போதுமே "ஃபுல் பெஞ்ச்'  வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, கொன்னக்கோல், மோர்சிங், டோலக், கெத்து ஆகிய பக்கவாத்தியங்களுடனான ஃபுல் பெஞ்ச்; குறைந்தது 6 மணிநேரம்; இரண்டு தனி ஆவர்த்தனங்கள். தமிழ்ப் பாடல்களை நிறையப் பாடுவார். மைக் இல்லாமல் நடைபெறுகிற கச்சேரிகளில் (அந்தக் காலத்துக் கச்சேரிகள் அப்படித்தானே), கூட்டமான கூட்டத்தில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவருக்கும், கடைசி மங்களம் வரைக்கும் தெளிவாகக் கேட்கும்படி கனமான சரீரத்தில் பாடுவார். 

ஸ்ரீ வித்யா உபாசகக் குடும்பத்தைச் சேர்ந்த வேதாந்த பாகவதர், முத்துசுவாமி தீக்ஷிதரின் நவாவரணக் கிருதிகளை, தம்முடைய மைத்துனர் அனந்தகிருஷ்ணையர் உதவியுடன் நூலாக வெளியிட்டார். தீக்ஷிதர் கிருதிகளையும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரிதக் கீர்த்தனைகளையும் கச்சேரிகளில் அதிகமாகப் பயன்படுத்தினார். இவருடைய அசாதாரணத் திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு, இவருடைய கச்சேரியில், யாருக்கும் தெரியாமல் ஒருமுறை தம்புரா சுருதியை ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் கூட்டி வைத்தாராம். விஷயம் தெரியாமல் கச்சேரியைத் தொடங்கிய வேதாந்த பாகவதர், சுருதி அதிகம் என்று தெரிந்தபின்னரும், எந்தத் தடங்கலும் இல்லாமல் கச்சேரியை அற்புதமாகப் பாடி முடித்தாராம். மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, ஓடி வந்து கட்டித் தழுவினாராம் முத்தையா பாகவதர். சென்னையில் ஒருமுறை, 3 ஸ்தாயிகளில் பாடுவது ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கு மட்டுமே கைவரும் என்று ஹிந்துஸ்தானி இசை வித்தகர் நஸருதீன்கான் சவால் விட்டுவிட, அதற்கு பதிலடி கொடுக்கும்படி டைகர் வரதாச்சார்யார் வேண்ட, அன்று மாலையே 3 ஸ்தாயிகளில் மிக ஜோராகப் பாடினாராம் வேதாந்த பாகவதர். 

சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய இவர், ஸ்லோகங்கள் பலவற்றுக்கும் மெட்டமைத்து ஸ்ரீ லலிதாம்பிகையின் திவ்ய சரிதத்தை ஹரிகதையாகச் செய்திருக்கிறார். இசை கற்பவர்கள் மட்டுமல்லாமல், நிபுணர்கள்கூட எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ஆலாபனை, ராகம் தானம், நிரவல், கல்பனாஸ்வரம் போன்றவற்றுக்கு ஸ்வர தாளக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். 1940 -இல் அமரரான வேதாந்த பாகவதரின் பெயர், கல்லிடைக்குறிச்சிக்குத் தனியொரு இசை அந்தஸ்தைத் தந்துவிட்டது. 

வேதாந்த பாகவதரிடம் குருகுலவாசம் செய்து, குருவுடன் பாடி, குருவின் காலத்திற்குப் பின்னர் தீக்ஷிதக் கீர்த்தனைகளைப் பலருக்கும் கற்றுக் கொடுத்துப் பரவச் செய்த பெருமகனார் கல்லிடைக்குறிச்சி எச். மகாதேவ பாகவதர்.  

கல்லிடைக்குறிச்சியின் மற்றுமொரு இசைச் செல்வர், டாக்டர் ஈ.எஸ். சங்கரநாராயண ஐயர்(1881-1947). தொழிலால் மருத்துவராகவும், எழுச்சியால் தேசப் போராட்ட வீரராகவும், ஆர்வத்தால் விளையாட்டு வீரராகவும் விளங்கிய இவர், நல்லதொரு வாக்கேயக்காரராகவும் சிறந்தார். ரக்தி ராகங்களிலும் அபூர்வ ராகங்களிலும், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளிலும் பல்வேறு கீர்த்தனைகளையும் நவக்கிரகக் கீர்த்தனைகளையும் ஏகாதசக் கீர்த்தனைகளையும் யாத்துள்ளார். "சங்கர நாராயண' என்னும் முத்திரையுடன் பாடல்கள் இயற்றிய இவர், பால கங்காதர திலகரின் சரித்திரத்தைத் "திலகர் விஜயம்' என்னும் பெயரில் ஹரிகதையாகவும் செய்துள்ளார். 

இளங்குயிலின் இசைப் புதுமை இலக்கியத்துக்கும் இசைக்கும் விலை காணமுடியாத பங்களிப்பைத் தந்துவிட்டு தன்னுடைய இருபத்தாறாவது வயதிலேயே இயற்கையோடு கலந்தது தமிழ்க்குயில் ஒன்று. பொருநைப் பகுதியின் இந்தக் குயிலின் பூர்விகம், சங்கரன் கோவிலுக்கும் கரிவலம்வந்த நல்லூருக்கும் அருகிலுள்ள சின்னஞ் சிறிய ஊரான சென்னிகுளம். 

சென்னவ ரெட்டியாருக்கும் ஓவு அம்மாளுக்கும் 1865 -ஆம் ஆண்டு பிறந்த அண்ணாமலை, சென்னிகுளத் திண்ணைப் பள்ளிகூடத்தில் படிக்கும்போதே அபாரமான ஞாபக சக்தியோடு விளங்கினார். இருப்பினும், இலக்கணப் பாடங்களிலோ பொறுப்பான பணிகளிலோ மனம் செல்லவில்லை. வீட்டில் வேலை ஏதோ சொன்னபோது அதைச் செய்யாமல், மீண்டும் வீட்டுக்கு வருவதற்கு அச்சப்பட்டுக் கொண்டு, அருகிலிருந்த சேற்றூர் ஜமீந்தார் அரண்மனைக்குப் போய்விட்டார். இலக்கியப் புலமையும் வாய்ச் சாலாக்கும் கொண்டிருந்ததால் சேற்றூர் ஜமீனிலேயே தங்கினார். இங்கு, முகவூர் மீனாட்சிசுந்தரக் கவிராயரிடம் நெருங்கிய பழக்கம் ஏற்பட, அவருடனே தமிழ் கற்பதற்காகத் திருவாவடுதுறைக்குச் சென்றார். உ.வே.சாமிநாதையரிடத்தில் நன்னூலும் மாயூரப் புராணமும் பாடம் கேட்டார். செய்யுள் நுணுக்கங்களும் கவி பாடும் திறனும் அண்ணாமலைக்கு இயல்பாக இருந்ததாக உ.வே.சா குறிப்பிடுகிறார். ஊருக்குத் திரும்பிய பின்னர், பற்பல கவிதைகளை இயற்றிச் சந்தச் சுவையோடும் மெட்டமைதியோடும் பாடிக் காட்டுவார். இதனால், ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவர், ராஜவல்லிபுரம் வள்ளல் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிக் கவிராயர் நெல்லையப்பப் பிள்ளை ஆகியோரின் அணுக்கத் தொடர்பு கிட்டியது. 

அக்காலகட்டத்தில் வீரகேரளம்புதூரில் வசித்துவந்த ஜமீன்தாருக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான நட்பு வேகமாகவும் ஆழமாகவும் வளர்ந்தது. சிருங்கார ரசம் மிக்க பாடல்கள் பலவற்றை ஜமீன்தார்மீது பாடினார். இப்படிப்பட்ட நட்புக்கிடையே, கிருத்திகை விசேஷத்திற்காகக் கழுகுமலை முருகப்பெருமானுக்குத் தாம் பால்காவடி எடுக்கப்போவதாகச் செப்பிய மருதப்பத் தேவர், அதற்காகச் சிந்துப் பாடல் பாடித் தரவேண்டும் என்றும் அண்ணாமலை ரெட்டியாரிடம் வேண்டுகோள் வைத்தார். ஏற்கெனவே முருகபக்தராகவும் கழுகுமலை பக்தராகவும் திகழ்ந்த ரெட்டியாருக்கு, இதுவே உந்துசக்தியாக மாற, 

சென்னிகுளநகர் வாசன் தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் செப்பும்
செகமெச்சிய மதுரக் கவி அதபுய வரையில் புனை
தீரன் அயில் வீரன் 

- என்னும் காவடிச் சிந்து களை கட்டியது. 

"சிந்து' என்பது இலக்கியப் பாடல் வகைகளில் ஒன்று. பல்லவி, அநுபல்லவி, சரணங்கள் மூன்று ஆகிய பாகங்களோடு, நாட்டுப்புறச் செய்திகள், தெம்மாங்குப் பாடல்கள் ஆகியவற்றின் தன்மைகளைக் கொண்டு இது விளங்கும். ஆனால், ரெட்டியாரின் காவடிச் சிந்து, சற்றே மாறுபட்டுக் கண்ணிகளைக் கொண்டுள்ளது. "இவருக்குக் (ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்பத் தேவரால்) கொடுக்கப்பட்ட ஆடையாபரணங்கள் அதிகம். மேற்படி ஊற்றுமலையார் கழுகுமலைக்குக் காவடி எடுத்துச் சென்றபொழுது, அவருக்குச் சிரம பரிகாரமாக இவரால் பாடப்பட்டதுதான் காவடிச் சிந்து. காவடிச் சிந்தின் முறை ஏற்பட்டது இவராலேதான்', என்று இதுபற்றிப் பதிவு செய்கிறார் உ.வே.சா. காவடிச் சிந்து தவிர, வீரைத் தலபுராணம்,  வீரைச் சிலேடை வெண்பா, வீரை அந்தாதி, வீரை நவநீத கிருஷ்ணன் பிள்ளைத் தமிழ், கோமதி அந்தாதி, சங்கரன்கோவில் திரிபு அந்தாதி, ஊற்றுமலைத் தனிப் பாடல்கள் ஆகியவற்றையும் ரெட்டியார் இயற்றியுள்ளார் (வீரை என்பது வீரகேரளம்புதூர்). 

காவடிச் சிந்து என்னும் புதிய இலக்கிய- இசை வகையைத் தந்து, தமிழ்ச் சாரலுக்குத் தனிக் குளிர்ச்சியைத் தந்துவிட்டார் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com