பொருநை போற்றுதும்! - 17

நீரில் செப்பு (தாமிரம்) கலந்திருப்பதாலேயே, பொருநை நல்லாள், தாமிரவருணி என்றும் அழைக்கப்படுகிறாள். செப்பு என்னும் உலோகத்தோடு இந்த ஆற்றின் கரைகளுக்கிருக்கும் தொடர்பு, உலகமறிந்தது.
பொருநை போற்றுதும்! - 17
Updated on
3 min read

நீரில் செப்பு (தாமிரம்) கலந்திருப்பதாலேயே, பொருநை நல்லாள், தாமிரவருணி என்றும் அழைக்கப்படுகிறாள். செப்பு என்னும் உலோகத்தோடு இந்த ஆற்றின் கரைகளுக்கிருக்கும் தொடர்பு, உலகமறிந்தது. ஆனந்த தாண்டவம் ஆடுகிற நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில், திருநெல்வேலியே தாமிர சபை செப்பம்பலம். தவிரவும், ராஜவல்லிபுரத்திற்கு அருகில், கிராமம் ஒன்றுக்கே, "செப்பறை‘ என்று பெயர். இங்கெழுந்தருளியிருக்கும் பெருமானும், அழகிய கூத்தர்! நம்மாழ்வார், தாம் திருநாடு அலங்கரிக்கும் தருணம் வந்தபோது, பொருநை நீரெடுத்துக் காய்ச்சும்படி மதுரகவியாழ்வாரைப் பணித்த வரலாறும் நமக்குத் தெரியும். அவ்வாறு காய்ச்சி வந்த முதல் திருமேனியை, "பவிஷ்யதாசார்யார்' (இனி வரவிருக்கும் வருங்கால ஆசான்) என்று அடையாளம் காட்டிவிட்டு, மீண்டும் அவ்வாறே நீரெடுத்துக் காய்ச்சும்படிக் கூற, இம்முறை, நம்மாழ்வாரின் திருமேனியே உருவெடுத்தது. இவ்வாறு கிட்டிய திருமேனிகள் இரண்டு... ஒன்று, அப்போதைய நிலையில் பவிஷ்யதாசார்யாராகத் திகழ்ந்து, பின்னர் தோன்றி ஸ்ரீ வைணவ தரிசனத்திற்கு பெருவழி காட்டியவருமான ஸ்ரீ ராமானுஜருடைய திருமேனி; மற்றது, ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருமேனி. இவ்விரண்டுத் திருமேனிகளும், ஆழ்வார் திருநகரி திருக்கோயிலில் இப்போதும் வழிபாட்டில் உள்ளன. 

மாலையே மகளானாள்: இவ்வாறு தாமிரம் என்னும் உலோகத்தால் தாமிரவருணி என்னும் பெயர் கொள்ளும் பொருநைத் தாய்க்கு, மேலும் பற்பல திருநாமங்களைத் தாமிரவருணி மஹாத்மியம் என்னும் நூல் தருகிறது. தவிரவும், இவள் நதியாக உருவான வரலாற்றையும் வெகு விமரிசையாக விவரிக்கிறது. 

ஹிமவான் என்னும் மலையரசனின் தலைநகரமான ஓஷதிப்பிரஸ்தம். ஹிமவானுடைய மகள் பார்வதியாகத் திருவவதரித்திருந்த அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் திருமண வைபவம் களைகட்டியிருந்த நேரம். சர்வேச்வரியான ஆதிசக்தி தேவி, தேவலோகத்து வாடா மலர்களின் மாலையொன்றைப் பார்வதிக்குப் பரிசளித்தாள். கணவரின் கரங்களைப் பற்றியபடி நின்ற புதுமணப்பெண் பார்வதி, அதனைத் தன்னுடைய நாதருக்கு அணிவித்தாள். 

திருமணத்திற்கு வந்த விருந்தினர்களால் பூமியின் வடபகுதி தாழ்ந்து, அதைத் தொடந்து நடக்கும் நிகழ்வுகள்... அரை மனதோடு அகத்தியர் தென் திசை நோக்கிப் புறப்பட, தமது கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிய சிவனார், அகத்தியரிடம் அதைத் தர... மாலையோ மங்கையாக உருவெடுத்தது. அழகுகளின் சங்கமமாக, சர்வாபரண பூஷிதையாக நின்ற இம்மங்கையைக் கண்டு அனைவரும் அதிசயித்தார்கள்; தத்தம் பொலிவையெல்லாம் இவள் காலடியில் அர்ப்பணித்தார்கள். தேவர்களும் நதிதேவதைகளும் இவளுக்குப் பற்பல பரிசுகளையும் மங்கலங்களையும் வழங்கினார்கள். 

நிதிம் லப்தவைவ நிர்தன:  - தரித்திரனுக்குச் செல்வம் கிட்டியதைப் போல் அகத்திய பத்தினி லோபாமுத்திரை குதூகலித்தாள். அகத்தியரும் லோபாமுத்திரையும் இக்கன்னிகையைத் தங்களின் மகளாக ஸ்வீகரித்து, அன்பையெல்லாம் பொழிந்து தாம்ரபர்ணி (செந்நிறமாகப் பொலிபவள்), தாம்ரா, மணிகர்பா (மணிகளை-ரத்தினங்களைத் தருபவள்), பரா (அனைத்துக்கும் உயர்ந்தவள்) என்று வாயாரப் போற்றி மகிழ்ந்தார்கள். இவளையும் அழைத்துக் கொண்டு தென் திசைக்குப் பயணித்தார்கள். தென்மலையான மலைய மலையை அடைந்தார்கள். முன்னரே சிவபெருமான் தனக்கு அருள் செய்தபடி, தாம்ரா தன்னுடைய மகளாக வேண்டும் என்று மலையராஜன் ஆசைப்பட்டான். மலையத்தின் திரிகூடப் பகுதியில், சித்திரசபை நடராஜரைத் தரிசித்த பின்னர், அனைவரும் அங்கு தங்கினர். 

மகளுக்கொரு மங்கலத் துயிலெடை: மறுநாள் அதிகாலை. தம்முடைய செல்வ மகளான தாமிரவருணிக்கு சுப்ரபாதம் பாடித் துயிலெழுப்பினார் அகத்தியர். 

அம்ப தாம்ரú மஹாதேவி லோகானுக்ரஹ காரிணி
ஸூப்ரபாதா நிசா க்ருத்ஸ்னா ப்ரபுத்தா பவ சோபனே
அனாதி சாம்பவீ கண்ட கனகாம்புஜ மாலிகே
மஹாமணி ப்ரஸþர்மாத: ப்ரபுத்தா பவ சோபனே
அவளின் தோற்றத்தினையும் பெருமைகளையும் கூறியே வாழ்த்துகிறார்.
சிவ பக்திமாயே புண்யே விஷ்ணுபக்தி ப்ரவாஹினீ
ப்ரஹ்ம சக்தி ரஸாஸி தவம் உத்திஷ்டாம் அம்ருதவாஹினீ
அன்னதா வஸூதா பூரி புண்யதா மஜ்ஜதாம் ந்ருணாம்
 த்வமேவ பரமா சக்தி: ப்ரஸீத மலயாத்மஜே 

""சிவபக்தியில் உருவாகி, விஷ்ணு பக்தியில் பெருகி, பிரம்ம சக்திச் சாறாக உள்ளவளே! எழுந்திராய். அமிர்தம் பெருக்குபவளே, உன்னில் நீராடுபவர்களுக்கு அன்னமும் செல்வமும் புண்ணியமும் தருபவளே, நீயே உயர்சக்தியும் ஆவாய், மலையன் மகளே, ஆசீர்வதிப்பாய்' என்று பாடி, நதிப்பெண்ணாக இவள் உருவானால் நன்மைகள் பெருகும் என்பதாக உணர்த்தினார். மாமுனியின் பாடல் கேட்டு தாமிரா துள்ளியெழ, இவள் கால் சலங்கையின் ரத்தினங்கள் சிதறின. சிதறிய ரத்தினங்கள் ஒன்றில், இவளின் பிம்பம் பளபளக்க, பல நிறங்கள் பளபளத்த அந்த ரத்தினத்தை நதியாகும்படிப் பணித்தாள்.  வண்ணங்கள் பல பளபளத்ததால், சித்திரச் சிறப்பு கொண்டு உருவான அந்நதி, சித்திரா நதி என்னும் பெயர் பெற்றது. இவ்வாறு சித்திரா நதி உருவான நாள், சித்திரா பெளர்ணமி நன்னாள். 

திரிகூடப் பகுதியிலிருந்து, மலையத்தின் சிவசைலப் பகுதிக்கு அனைவரும் சென்றனர். அங்கு அத்ரி முனிவர் வந்து சேர்ந்து கொண்டார். 
யத் அம்பு பானனோ மர்த்யா: சிரம் ஜீவந்தி அரோகிண:
யத் தீர்த்தாப்லுத தேஹஸ்ய மோக்ஷலக்ஷ்மீ கரஸ்திதா 

-  "உன்னுடைய நீரைப் பருகியவர்கள், அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடுவர்; உன்னில் தமது தேகத்தை மூழ்கி ஸ்நானம் செய்பவரின் கரங்களில், மோக்ஷலட்சுமி திகழ்வாள்' என்று அத்ரி முனிவர் தொழ, தன்னிலிருந்து மற்றுமொரு நதியை உருவாக்கிய தாமிரா, அதை அங்கிருந்தே ஓடும்படிச் செய்தாள். "பற்பல நன்மைகளையும் செயல்படுத்துபவள்' என்னும் பொருளில், அந்நதி, கடனா (கடயதி -செயல்படுத்துபவள்) என்னும் பெயர் பெற்றது. தாமிராவிற்கு இளையவள் என்பதால் "தாம்ரானுஜா' என்றும் சிவசைலப் பகுதிக்காரி என்பதால் சிவசைலவதி என்றும்கூட பிற பெயர்கள் உண்டு. 

தன்னுடைய இளைய சகோதரிகளைப் பாயச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தாமிரா துள்ளல் நடை பயில, அனைவரும் ஹயக்ரீவர் தவம் செய்துகொண்டிருந்த குகைப் பகுதிக்குச் சென்றனர். தாமிராவைக் கண்ணுற்ற ஹயக்ரீவர் வெகுவாகக் களித்தார். தாமும் இவளைத் துதித்தார்.

அஸ்யா: ப்ரதிஷ்டிதோ மூர்த் நி சங்கரோ லோக சங்கர:
ஹ்ருதயே வர்த்ததே ப்ரஹ்மா லலாடே கருடத்வஜ:  

- "இந்த தேவியின் கேசத்தி, உலக நன்மைகளை வழங்கும் பரமேச்வரன் வீற்றிருக்கிறார்; இவளின் இதயத்தில் பிரம்மாவும் நெற்றியில் திருமாலும் வாசம் செய்கின்றனர்.'

 ஏனாம் ஆஸ்ரித்ய தீர்த்தானி லபந்தே தீர்த்தாம் புன:        
ஸர்வே தேவாஸ் ச மந்த்ராஸ் ச காயத்ர்யா ஸாக மத்ர ஹி
அனயா தார்யதே லோகம் பால்யதே பாபகஹ்வராத்

-'தீர்த்தங்கள் யாவையும் இவளை அடைந்து தங்களின் தீர்த்தத் தன்மையை மீண்டும் அடைகின்றன; தேவர்களும் காயத்திரி உள்ளிட்ட மந்திரங்களும் இவளிடமே உள்ளனர். (இவளால்) உலகம் தாங்கப்படுகிறது; பாவங்களிலிருந்து காக்கப்படுகிறது.'

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com