காலமும் நேரமும் காளி தேவியின் கையில்..!

"காளி தேவி' காலசொரூபி! காலத்தை கணிப்பவள். "எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருவேன்' என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதை அப்படியே முழுமையாக செய்து
காலமும் நேரமும் காளி தேவியின் கையில்..!
Updated on
2 min read

"காளி தேவி' காலசொரூபி! காலத்தை கணிப்பவள். "எங்கே எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே அப்போது நான் வருவேன்' என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்னதை அப்படியே முழுமையாக செய்து காட்டுபவள்தான் "காளி தேவி!' அதர்மம், எங்கே தலைவிரித்தாடுகிறதோ அங்கே அழிவை ஏற்படுத்துவாள். மோசக்காரர்களை நாசம் செய்வாள். அக்கிரமக்காரர்களை காலம் ,நேரம் பார்த்து அடியோடு அழித்துவிடுவாள். நல்லவர்களுக்கு நன்மையே செய்வாள் அந்த மஹாகாளி.
 தட்சன் நடத்திய யாகத்தில் சென்று கலந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள் மஹேஸ்வரி. பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள். மறுத்தார் மஹேஸ்வரன். இருந்தும் யாகத்துக்குச் சென்றாள் உமாதேவி. அங்கே தட்சனால் அவமானப் படுத்தப் பட்டாள். கோபம் கொண்ட உமாதேவி யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். பரமேஸ்வரன் தேவியை உயிர்த்தெழ செய்தார். அப்போது உயிர் பெற்ற தேவி ஒரு பயங்கரமான உருவத்துடன் பத்து அவதாரங்களாக பத்து மஹா வித்யைகளைத் தோற்றுவித்தாள்.
 அதில் முதலாவது வித்யையே, "காளி' தேவி. மயானத்தில் ஒரு சவத்தின்மேல் கழுத்தில் கபால மாலை, சிவந்த கண்கள், நீட்டிய நாக்கு, ஒரு கையில் வெட்டப்பட்டத் தலை, மறுகையில் வாள் என்று பத்து கைகளுடன் காட்சி அளித்தாள்.
 மஹாகாளி பார்ப்பதற்குப் பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டாலும் பக்தனிடத்தில் ஒரு தாயைப்போன்று பரிவு, பாசமுடன் இருந்து அருள்பாலிக்கிறாள். காளிதேவி மிகவும் சுறுசுறுப்பானவள். எப்போதும் தாமதத்தை விரும்பாதவள். யமனையே தன் வசப்படுத்தி வைத்திருப்பவள். எதிலும் அச்சமில்லை என்பது அவளது கொள்கை. உலகத்தின் காலப்பரிமாணத்தைக் குறிப்பவள் இந்த காளிதேவி. இவள் மாகாளி, பிடாரி, பத்ரகாளி, அங்காளி என்று கிராம தேவதையாக இருந்து அருள்பாலிப்பவர்.
 இந்த காளி தேவியை உபாசனை செய்தவர்களில் மிக முக்கியமானவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
 மஹாராஷ்ட்ரா மன்னன் "சிவாஜி' இந்த காளிதேவியை வணங்கிவிட்டுத்தான் போருக்குப் செல்வான். வரும்போது வெற்றியோடு திரும்பி வருவான்.
 மகாகவி பாரதியார் காளிதேவி குறித்து அருமையாகப் பாடி இருக்கிறார்.
 மந்திரங்களுக்கு தலைவி என்பதால் பல மந்திரவாதிகள் காளிதேவியைத் துதித்து மந்திர சக்திகளைப் பெற்றுள்ளனர்.
 அக்காலத்து மன்னர்கள் பலர் காளிக்கு பல கோயில்களைக் கட்டி வைத்துவிட்டுப் போயிருக்கின்றனர்.
 காளிதேவியின் அருளைப் பெற்ற கவி காளிதாஸ் காளிதேவியின் மீது அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர், காளியின் 12 விதமான உபாசனை முறைகளை "சித்கன
 சந்திரிகை' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 "தேவி மஹாத்மியம்' காளிதேவியை அன்னை பராசக்தியாக, துர்க்கையாக கூறுகிறது."துர்க்கா', " சப்தசதி' நூல்கள் காளியின் ஆற்றலை விரிவாகக் கூறுகிறது. திருப்புகழில் காளிதேவியை பலவாறாகப் புகழ்ந்து பாடுகிறார் அருணகிரியார்.
 காளியின் பீஜாசரம் "க்ரீம்' என்பதாகும். காளிதேவியின் உபாசனத்தினால் மனதில் அதீத தைரியம், வாக்கில் நல்ல கல்வி வன்மை, எதையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தன்மை, நிகரற்ற செல்வம், நோய்நொடியற்ற நல்ல வாழ்க்கை ஆகியவை அமையப் பெறும்.
 ஓம் அஸ்யஸ்ரீ மஹாகாளி மஹாமந்தரஸ்ய:
 பைரவிருஷி: விராட்சந்தக:
 ஸ்ரீ தக்ஷிண காளி தேவதா:
 ஹ்ரீம் பீஜம் ஹும் சக்தி ஸ்வாகா: கீலகம்!
 - நவராத்திரி நந்நாளில் இம்மந்திரத்தைச் சொல்லி காளிதேவியை பூஜித்தால் முழுமையான பலனை அடையலாம்.
 - ராமசுப்பு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com