புத்திர பேறு அளிக்கும் பெருங்களூர் வம்சோத்தாரகர்!

முற்காலத்தில் பெருங்களூர் கிராமம் முல்லைப் புதர்களைத் தன்னகத்தே கொண்டு மனதை மயங்க வைக்கும் மதுரமான மணத்தை எந்நேரமும் பரப்பிக் கொண்டிருந்ததால் இது முல்லை வனம் என்று அழைக்கப்பட்டது
புத்திர பேறு அளிக்கும் பெருங்களூர் வம்சோத்தாரகர்!

முற்காலத்தில் பெருங்களூர் கிராமம் முல்லைப் புதர்களைத் தன்னகத்தே கொண்டு மனதை மயங்க வைக்கும் மதுரமான மணத்தை எந்நேரமும் பரப்பிக் கொண்டிருந்ததால் இது முல்லை வனம் என்று அழைக்கப்பட்டது. இந்த கிராமத்தின் தனிச்சிறப்பு கொண்ட சிவன் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்ட காரணத்தால் இது சோழலிங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
வம்சோத்தாரகர் என்று அழைக்கப்படும் இறைவனின் இத்திருக்கோயில் பெருங்களூரின் மிக முக்கியமான கோயிலாகும். இங்கு அன்னை பாராசக்தி மங்களாம்பிகை, மங்களநாயகி மற்றும் செளந்தர்யநாயகி என்ற நாமங்களில் விளங்குகிறார். இந்த கோயில் சிறப்பை பறைசாற்றும் நிகழ்ச்சி சோழர் காலத்தில் நிகழ்ந்துள்ளது. சோழ அரச பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு புத்திர பாக்கியம் அருளும்படி இறைவன் சிவனை வேண்டி நின்றான். இறைவன் அவனை கிழக்கு நோக்கி ஒரு சிவலிங்கமும்; மேற்கு நோக்கி ஒரு சிவலிங்கமுமாக இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு வாழ்த்தி அருளினார்.
அவ்வண்ணமே அவனும் மேற்கு நோக்கிய சிவலிங்கத்தை பெருங்களூர் கிராமத்திலும் கிழக்கு நோக்கிய சிவலிங்கத்தை மேற்கு சோழலிங்கப்புரத்திலும் பிரதிஷ்டை செய்து, தான் இரு லிங்கங்களுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு இருவரையும் மனம் மெய் ஒன்று சேர வேண்டி நின்றான். இறைவன் மனம் மகிழ்ந்து அவனுக்கு ஆண் வாரிசுகளைத் தந்து அருளினார். சோழனுக்கு புத்திர பேற்றை தந்து அருளிய காரணத்தினாலேயே இறைவன் "வம்சோத்தாரகர்' என்றும் "குலோத்துங்க நாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த கோயிலின் மேற்குப் பகுதியில் ஓர் அழகிய குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கும் கோயிலுக்கும் நடுவில் வன்னிமரம் ஒன்று காணப்படுகின்றது. இந்த வன்னிமரத்தின் கீழ் விநாயகர், நாகர், அய்யனார் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பிள்ளையார், சுப்பரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அன்னை துர்க்கை, பைரவர் ஆகியோர்களுக்கு தனியாக சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோயிலின் பிரதான வாயில் அமைந்துள்ள கிழக்குப் பக்கத்தில் அன்னை மங்களாம்பிகாவிற்கான தனிச்சந்நிதி காணப்படுகிறது. அன்னை மங்களாம்பிகா சந்நிதிக்கு நேர் எதிரே நவக்கிரகங்களின் சந்நிதி அமைந்திருந்தது. சமீபத்தில் கோயில் புதுப்பிக்கும் பணி நடந்த பொழுது இந்த நவக்கிரக சந்நிதி பிரகாரத்திற்கு மாற்றப்பட்டது.
கோயிலின் முக்கிய திருவிழாக்கள் வைகாசி மாதத்திலும், ஆடி மாதத்திலும் பத்து நாள்களுக்கு நடைபெறுகின்றன. பெருங்களூர் கிராமத்தில் நிலவி வருகின்ற ஒரு பழக்கம் இன்றும் கூட நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பக்கத்து கிராமங்களிலிருந்து திருவிழாவில் கலந்துகொள்ள வரும் மக்களும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மக்களும் அன்பான உழைப்பிற்காக வெற்றிலை பாக்கு தந்து கெüரவிக்கப் படுகிறார்கள்.
அருள்மிகு மங்களாம்பிகை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் பூ மாலைகள் சார்த்தும் பெண்களின் குடும்பங்கள் வாழையடி வாழையாக வம்ச விருத்தி அடையும். அதுபோல இங்கே மிகவும் சிறப்புப் பெற்றது பிள்ளைத் தத்து! திருமணமாகியும் குழந்தை இல்லாத தம்பதியினர் இங்கே வந்து குழந்தை வேண்டி நேர்த்திக்கடன் வைத்து செல்கிறார்கள். குழந்தைப் பிறந்தவுடன் இங்கே வந்து பிள்ளையை தத்து கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்களூர், புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் தலம் உள்ளது.
- பொ.ஜெயச்சந்திரன்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com