

பாங்குக்குப் பதில் கூறுவதால் ஏற்படும் ஏராள நன்மைகளைக் கருதி அல்லாஹ்வின் அளவில் அழைப்பவருக்குப் பதில் கூறி அவரை விசுவாசிக்க விளம்பும் விழுமிய குர்ஆனின் 46- 31 ஆவது வசனம் அடிப்படையில் அமைந்ததே பாங்குக்குப் பதில் கூறும் பழக்கம். பாங்குக்குப் பதில் உரைப்பதால் உண்டாகும் பயன்களைப் பற்றி நயனுடைய நபி (ஸல்) அவர்கள் நவின்றவை. (1) பாங்குரைப்பவர் உரைக்கும் ஒவ்வொரு சொற்றொடரையும் திரும்ப கூறுபவர் சொர்க்கம் செல்வார். அறிவிப்பவர்- உமர் (ரலி) நூல்-முஸ்லிம், அபூதாவூத்.
(2) பாங்குக்குப் பதிலுரைத்து பாங்கு முடிந்ததும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அல்லாஹ் தனித்தவன். இணை துணை இல்லாதவன். அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று உறுதியாக உரைத்து அத்திருத்தூதர் இயம்பிய இஸ்லாமிய நெறியை ஏற்றுக் கொள்கிறேன் என்று இறைவனிடம் உறுதியளிக்கும் துஆவை ஓதுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர் ஸஃதுப்னு அபூவக்காஸ் (ரலி). நூல் - முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸஈ.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாங்கொலியைச் செவியுற்றதும் அவ்வொலியின் ஒவ்வொரு சொற்றொடர் முடிவிலும் வஅன- நானும் நானும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- அபூதாவூத். பாங்கைச் செவியுறுபவர் மொழிபவர் மொழிவது போன்று மொழிய பகர்ந்தார்கள். அறிவிப்பவர்- அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ. நன்மையை நாடி நாளும் தவறாது ஏழு ஆண்டுகள் பாங்கு ஒலிப்பவருக்கு நரகத்தை விட்டு விடுதலையை விதித்து விடுகிறான் அல்லாஹ். அறிவிப்பவர்- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- திர்மிதீ. பாங்கு ஒலிப்பவர்கள் மறுமையில் கண்ணியம் மிக்கவர்களாக இருப்பர். அறிவிப்பவர் }முஆவியா (ரலி) நூல்- முஸ்லிம்.
பாங்கு கவலைக்கு அருமருந்து என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை நடைமுறையில் கடை பிடித்து வெற்றி கண்டதாக விளம்புகிறார் அலி (ரலி). தொழுகைக்கு அழைக்கும் பாங்கு சொல்லி முடிந்ததும் மீண்டும் தொழுகை துவக்கத்தைக் குறிக்கும் இகாமத் இயம்பும் முன் ஓதப்படும் துஆ (இறைவேட்டல்) மறுக்கப்படாது ஏற்கப்படும் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் எழில் மொழியை அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ.
பாங்கொலிக்கும் குரல்வளம் இருந்தால் பாங்கொலித்தும் இல்லாதவர்கள் பாங்குக்கு உரிய பதிலைப் பாங்காய் கூறி பாங்கு முடிந்ததும் துஆ ஓதி தூயோன் அல்லாஹ்வின் நேயத்தைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.