சேரகுலவல்லியை மணந்த அரங்கன்!

சேரநாட்டில் தோன்றியவர் குலசேகர ஆழ்வார் ஆவார். இவர் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
சேரகுலவல்லியை மணந்த அரங்கன்!
Updated on
2 min read

சேரநாட்டில் தோன்றியவர் குலசேகர ஆழ்வார் ஆவார். இவர் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
 உரிய வயதில் இவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த இவரது தந்தை திடவிரதன், வானப்பிரஸ்தம் என்னும் தவ வாழ்வை மேற்கொள்வதற்காகக் காட்டிற்குச் சென்றுவிட்டார்.
 அரசப் பொறுப்பை ஏற்ற குலசேகரர் தமக்குப் பிறந்த மகனுக்கு "திடவிரதன்' என்ற தம் தந்தையின் பெயரையே சூட்டினார். தம்முடைய மகளுக்கு "சேரகுலவல்லி' என்று பெயரிட்டார். இப்பெண் குழந்தை ஸ்ரீமந் நாராயணனின் தேவியரில் ஒருவரான நீளாதேவியின் அம்சமாகப் பிறந்தவள். "இளா' என்ற வடமொழிப் பெயரும் இத்திருமகளுக்கு இடப்பட்டது.
 இளம் வயதிலேயே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்தி பூண்டு விளங்கிய குலசேகரருக்கு, அரச பதவி ஒரு பெரும் பாரமாகவே இருந்தது. தம்முடைய அரண்மனையில் தினமும் பண்டிதர்களைக் கொண்டு புராண இதிகாசக் கதைகளைக் கேட்டு வருவது இவரது வழக்கம். இவரது மகள் சேரகுலவல்லியும் சிறுவயதிலிருந்தே அப்புராணக்கதைகளைக் கேட்டுக் கேட்டு பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள்.
 ராமாயணக் கதையைக் கேட்கும்போதெல்லாம் ஆழ்வாரின் மனம் அதிலேயே ஒன்றிவிடும். ஸ்ரீ ராமபிரான் வாழ்ந்த காலத்தில் தாமும் வாழ்வதாகவே நினைத்துக் கொள்வார்.
 ஒருநாள் ராமாயணக் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது, "தண்டகாரண்ய வனத்தில் ஸ்ரீ ராமபிரான் தனியாக நின்றுகொண்டு, ஆயிரக்கணக்கான அரக்கர்களோடு போரிட்டார்!' என்று சொன்னதைக் கேட்ட ஆழ்வார், ஸ்ரீ ராமபிரானுக்கு உதவுவதற்காக உடனடியாகக் கிளம்பும்படி தமது படைகளுக்கு ஆணையிட்டார். விஷயம் எல்லை மீறுவதை உணர்ந்த பண்டிதர் சமயோசிதமாகச் சிந்தித்து, "ராமபிரான் தனி ஒருவராகவே அத்தனை அரக்கர்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டார்!' என்று கூறிக் கதையை முடித்துக் கொண்டதால், ஆழ்வாரும் அமைதியாகி ஆசனத்தில் அமர்ந்துகொண்டாராம்.
 இதேபோன்று, ராமபிரான் சமுத்திரக் கரையில் நின்று, தனது படைகள் இலங்கை செல்வதற்காகக் காத்திருந்தார் என்ற ராமாயண நிகழ்வைக் கேட்டதும் குலசேகராழ்வார் தமது கப்பற்படையைத் திரட்ட ஆணையிட்டாராம். இதைப்போன்ற பல நிகழ்ச்சிகள் உண்டு.
 அரசாட்சி நிர்வாகம் செய்வதை விட அரங்கனின் பக்தர்களோடு இவர் அதிக நேரம் செலவழித்ததைக் கண்ட இவரது மந்திரிகள் அரண்மனைக்கு வரும் பக்தர்கள் மீது திருட்டுப் பழிசுமத்தினார்கள். இதனால் மனம் நொந்த குலசேகரர் தன் மகன் திடவிரதனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, பெருமாள் கோயில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் யாத்திரையாகச் சென்றார். உடன் தம்முடைய மகள் சேரகுலவல்லியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
 திருமலை, தில்லைத் திருச்சித்திரகூடம், திருவரங்கம், திருவித்துவக்கோடு உள்ளிட்ட பல திருத்தலத்து எம்பெருமான்களைப் போற்றி இவர் பாடிய திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் "பெருமாள் திருமொழி' என்று அழைக்கப் படுகின்றன. "படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனோ' என்று திருமலை ஸ்ரீநிவாசப் பெருமானை நோக்கி இவர் பாடியதால், திருமலையில் மட்டுமின்றி, திவ்வியதேசங்களில் உள்ள அனைத்துப் பெருமாள் சந்நிதிகளின் முதற்படிகளும் "குலசேகரன் படி' என்று அழைக்கப்படுகின்றன. பக்தர்கள் அப்படியை மிதிக்காமல் தாண்டிச் செல்வது வழக்கம்.
 ஸ்ரீரங்கத்தில் நீண்ட காலம் தங்கி வழிபட்டவர். இவர் செய்த திருப்பணிகளின் காரணமாக திருவரங்கக் கோயிலின் மூன்றாம் சுற்று "குலசேகரன் சுற்று' என்று அழைக்கப்படுகின்றது.
 பெரியாழ்வார் தம்முடைய மகளான ஸ்ரீ ஆண்டாளைத் திருவரங்கநாதனுக்கு மணமுடித்தது போலவே, குலசேகராழ்வாரும் தம்முடைய மகள் சேரகுலவல்லியையும் அப்பெருமானுக்கே மணமுடித்துக் கொடுத்தார். அந்த இனிய மங்கல நிகழ்வு ஒரு ஸ்ரீராமநவமித் திருநாளன்று நடைபெற்றது.
 அதனையொட்டி, இன்றும் கூட வருடம் தோறும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் ஒவ்வொரு ஸ்ரீ ராமநவமியன்றும் அரங்கனுக்கும் சேரகுலவல்லி நாச்சியாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று, இருவரும் சேர்த்தியாக பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். இந்தச் சேர்த்தியைத் தரிசிக்கும் இளம் பெண்கள் தங்களின் விருப்பப்படியே நல்ல மணாளனைப் பெற்று இல்வாழ்வில் இன்பம்பெறுவது உறுதி.
 இவ்வருடம், இத்திருக்கல்யாணம் 13-04-2019 அன்று நடைபெறுகிறது.
 - எஸ். ஸ்ரீதுரை
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com