ஜெயிக்க வைக்கும் தாழக்குடி ஜெயந்தீஸ்வரர்!

தாழக்குடியில் குடிகொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரர் கோயில் இந்திரன் கதையுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது.
ஜெயிக்க வைக்கும் தாழக்குடி ஜெயந்தீஸ்வரர்!
Updated on
2 min read

தாழக்குடியில் குடிகொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரர் கோயில் இந்திரன் கதையுடன் தொடர்பு கொண்டதாக உள்ளது.
 இத்தல புராணக்கதை, வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்தில் வரும் ஜயந்தன் கதையிலிருந்து தொடங்குகிறது. ராமன் வனவாசத்தின் போது ஒரு முறை இந்திரனின் மகன் ஜயந்தன் காகமாக வந்து சீதையின் உடலைக் கொத்தினான். ரத்தம் சிந்தியது. கண்விழித்த ராமன் சினமுற்று புல்லைப் பறித்து மந்திரம் ஒதி அவன் மேல் ஏவினான். அது அவனைத் துரத்தியது. அவன் ராமனைச் சரணடையவே அந்த மந்திரம் ஜயந்தனின் ஒரு கண்ணைப் பறித்தது. இந்த ஜயந்தன் தன் பாவம் போக்க தாழக்குடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். பின் சாபவிமோசனம் பெற்றான். அவன் வழிபட்ட சிவன், ஜெயந்தீஸ்வரர் எனப்பட்டார்.
 திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வீரகேரளன் என்ற அரசன் இருந்தான். அவன் வேணாட்டு மரபைச் சேர்ந்தவன். அவன் பலநாட்கள் குழந்தையின்றி வருந்தியபோது அகத்தியர் கனவில் தோன்றி தாழக்குடி ஊரில் குடிக்கொண்டிருக்கும் ஜெயந்தீஸ்வரருக்கு கோயில் எடுக்கக்கூறினார். அவனும் அப்படியே செய்து குறை நீங்கினான். இங்கே ஒரு குளமும் வெட்டினான். இது வீரகேரளப் பேரேரி என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபடுவோர் வாழ்வில் ஜெயிக்க வைக்கும் ஜெயந்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
 இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், திருமண மண்டபம், முகப்பு மண்டபம் என அமைந்தது. முகப்பு மண்டபம் கேரளபாணியில் அமைந்து ஓடு வேயப்பட்டது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறையுள் அமைந்துள்ள லிங்க வடிவம் 12 ஆவுடைகளின் மேல் அமைந்துள்ளது என்பதை 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த குடமுழுக்கு விழாவில் கண்டறிந்தனர் என்கின்றனர். இந்த சிவலிங்கம் கங்கையில் நீராட்டி வந்தது எனத் தலப்புராணம் கூறுகிறது.
 கருவறையின் வலப்புறம் அம்பாளுக்குத் தனிக்கோயில் அமையப்பெற்றுள்ளது. அம்மை அழகம்மன் என அழைக்கப்படுகிறாள். சுவாமியின் இடதுபுறம் தேவியை அமைப்பது வழக்கம். ஆனால் பாண்டிய நாட்டு மரபின்படி அம்மன் வலதுபுறம் இருக்கிறாள். அம்மன் நின்ற கோலம், வலது கையில் நீலோத்பவ மலர், இடது கை லோலாஹஸ்தம் துவிபங்க வடிவம்.
 கருவறைச் சுற்றில் தென்திசையில் தட்சிணாமூர்த்தி, வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், பிரகாரத்தின் வடக்கே சனீஸ்வரர், யாகசாலையை அடுத்து நடராஜர், காலபைரவர், சந்திரன் ஆகியோர் அமைந்து அருள்கின்றனர். இவை கல்படிமங்கள். விழாக்காலங்களில் வாகனங்களில் கொண்டு செல்வதற்கும், அர்ச்சனைக்கும் உரியதாக 17 செப்புப் படிமங்கள் உள்ளன. கருவறை மூலவரை அடுத்து இருக்கும் நடராஜனின் படிமம் ஒரே கல்லில் செய்யப்பட்டது. திருவாச்சி பீடம் எல்லாம் கூட கல்லால் அமைந்தவை.
 அர்த்த மண்டபம், சண்டேஸ்வரர் கோயில் உட்பிரகாரம் ஆகிய இடங்களில் சடையுடைய முனிவர் இரண்டு பக்கங்களிலும் சீடர்கள் என அமைந்த சிற்பம் உள்ளது. இது இக்கோயிலின் 7 இடங்களில் ஒரே மாதிரி உள்ளது. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பெண் சிற்பங்கள், இவர்களின் ஆடை அணிகள் கொண்டை அமைப்பு 16-ஆம் நூற்றாண்டு பண்பாட்டைப் பறைசாற்றுவன.
 நமசிவாய மண்டபத்தில் காகம், சிவனை வழிபடும் சிற்பம் உள்ளது. இது தலவரலாறு தொடர்பானது. சிவனை யானை வழிபடும் சிற்பம், ஜராவதம் சிவனை வழிபட்ட வரலாறு தொடர்புடையது. கருவறை விமானத்தின் தெற்கே கோயிலின் கட்டுமான அளவுகோல் உள்ளது.
 தாழக்குடி ஊர் மிகவும் பழைமையானதாக கி.பி. 1161- ஆம் ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் 6 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் பழைய கல்வெட்டு 1532-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. மற்றவை, 16, 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று இத்திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணியைக் குறிப்பிடுகிறது.
 நாகர்கோவிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தாழக்குடி உள்ளது.
 - பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com