

இம்மை என்பது இவ்வுலக வாழ்வு. இவ்வுலக வாழ்வில் செய்யும் நன்மைகளின் நற்பயனை மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் பெறுவதைப் புரிந்து பூமியில் புண்ணியம் நல்கும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். ஈருலகிலும் இன்னல் இல்லாத நல்லன செய்யும் நல்வாழ்வு வாழ இறைவனை இறைஞ்ச வேண்டும். இறைமறை குர்ஆனின் 2-201- ஆவது வசனம், "" எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அளிப்பாயாக! நரகின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!'' என்று இறைவனை இறைஞ்ச இயம்புகிறது.
உலக நன்மையை மட்டும் இறைவனிடம் இறைஞ்சுவோர் இறை விசுவாசிகள் அல்லர். இம்மை மறுமை ஆகிய ஈருலக நன்மைகளை நாடுவோரே உண்மை அடியார்கள். பலவீனமான மனிதன் தேவை உடையவன். இவ்வுலகில் இன்னல்களையும் இடையூறுகளையும் தாங்கி எதிர்க்கும் ஆற்றல் மனிதனுக்கு முழுமையாக இல்லை. எனவே எதிர்ப்படும் துன்பம் துடைக்க தூயவன் அல்லாஹ்விடம் நேயமுடன் வேண்டும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இவ்வுலகில் இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல. இரண்டும் மாறி மாறி வருவது. உண்மை விசுவாசி இதை உணர்ந்து இறைவனிடம் இம்மையில் நன்மை செய்து மறுமையில் நற்பேற்றைப் பெற வேண்டுகிறான்.
இந்த இறைவேட்டல் மகத்துவம் மிக்கது. இம்மை மறுமை நன்மைகளை அடக்கியது என்று தப்ஸீர் அர்ராஜி 335/5 விளக்குகிறது. மூசா நபி இறைவனை, "இம்மையில் எங்களுக்கு நன்மை நல்கு. மறுமையிலும் அவ்வாறே'' என்று வேண்டினார்கள். ""அல்லாஹ்வே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்'' என்று காருண்ய நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சியதை - முஸ்லிம் 2690 - இயம்புகிறது.
இவ்வுலகில் நெறியோடு நியாயமாக உழைக்க வேண்டும். மறுமைக்காக நற்செயல்களை செய்ய வேண்டும். இவ்விரண்டையும் ஏற்ற தாழ்வு இன்றி சமமாக சரியாக நிறைவேற்ற வேண்டும். தேவையான வசதி வாய்ப்புகளை இவ்வுலகில் தேடி பெறுவது கடமை. தேடி பெறுவது என்பது உழைத்து பெறுவது. பிறர் உழைப்பை உறிஞ்சி உல்லாசம் அடையக் கூடாது. இதனை இயம்புகிறது 2.202 ஆவது வசனம், " நாங்கள் செய்த செயல்களின் பாக்கியம் எங்களுக்கு உண்டு. அல்லாஹ் வெகு விரைவாக கணக்கெடுப்பான்'' கடுகளவு நன்மை தீமை எதைச் செய்யினும் அதனைக் கணக்கிட்டு மறுமையில் பயனை வழங்குவான் அல்லாஹ். அவர்களுக்கு இம்மை மறுமை இரண்டிலும் பெரும் பயன் உண்டு என்று தப்ஸீர் அர்ராஜி 338/ 5 தப்ஸீர் அத்திப்ரீ 548 / 3 விளக்கம் தருகின்றன.
"அல்லாஹ் உனக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டைத் தேடினேன். அல்லாஹ் உனக்குக் கொடுத்ததை நீ பிறருக்குக் கொடுத்து உதவு'' என்று உரைக்கிறது 28.77 - ஆவது வசனம். அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மேம்படுத்துவது சமூக நாட்டு வளர்ச்சிக்கு உதவும். நன்மை விளையும் நற்செயல்களில் செலவு செய்வதும் மக்களுக்குப் பயன்படும்.
" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்க வேண்டும். உங்களுடைய கூலிகள் முழுமையாக வழங்கப்படும். மறுமையில் நெருப்பில் இருந்து நீங்கி சொர்க்கம் செல்வோர் நற்பேறு பெற்றவர்'' என்று நவில்கிறது 3- 185 -ஆவது வசனம். மனிதன் எந்நிலையில் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இறப்பைத் தவிர்க்க முடியாது. இறந்தபின் நரகிற்குச் செல்லாது மறுமையில் நற்பேற்றைப் பெற்று மகிழ்வாய் திகழ்வது இம்மையில் செய்த நன்மைகளின் நற்பயனே. இறை நம்பிக்கை உடையோர் சொர்க்கத்தில் நிலையாக இருப்பர். எல்லா இன்பங்களும் தொடர்ந்து கிடைக்கும். அவர் விரும்புவது விரும்பியபடி கிடைக்கும். இதனை 16- 97 - ஆவது வசனம், " ஆணாயினும் பெண்ணாயினும் நம்பிக்கையோடு நற்செயல் புரிவோருக்கு நல்வாழ்வை அளிக்கிறோம். அவர்கள் செய்ததினும் சிறப்புடைய கூலியைக் கொடுக்கிறோம்'' என்ற இறைவனின் வாக்குறுதியை வலியுறுத்தி சொல்கிறது.
இவ்வுலக வாழ்வின் வெளித்தோற்றத்தில் மாயையில் மயங்கி தயங்காது தவறிழைத்து தறிகெட்டு திரியாது நெறியோடு நேர்மையாய் ஓர்மையுடன் ஒல்லும் வாயெல்லாம் நன்மை பயக்கும் நல்லன செய்து மறுமையிலும் மாறா பேற்றினைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.