

தமிழகத்தில் திருச்சியில் காவேரி - கொள்ளிடம் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள திருத்தலம் திருவானைக்கா! இது பஞ்சபூதத்தலங்களில் அப்பு (நீர்) தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு, ஜம்புகேஸ்வரர், நீரில் லிங்கமாக எழுந்தருள, நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தனிசந்நிதியில் எழுந்தருளியுள்ளார் அன்னை அகிலாண்டேஸ்வரி. இந்த ஈஸ்வரியை வராஹி என்றும் போற்றுவர். காரணம் சக்தி பீடங்களில் அன்னையின் முகவாய் விழுந்த இடமாக இத்தலம் கருதப்படுகிறது.
இந்த அன்னை ஆரம்ப காலத்தில் மகாபயங்கரமாக உக்கிர தேவதையாகத் திகழ்ந்தாள். அதனால் பக்தர்கள் இந்த அன்னையை தரிசிக்க அஞ்சினார்கள். இதனை அறிந்த ஸ்ரீ ஆதிசங்கரர், இத்தலத்திற்கு வந்தபோது, அன்னையை தரிசித்து, மந்திரங்கள் ஜபித்து, அன்னையின் உக்கிரகத்தை நீக்கி சாந்தப்படுத்தினார்.
மேலும், அன்னையின் காதுகளில் சக்கர வடிவிலான இரண்டு தாடகங்களை அணிவித்தார். சிவசக்கரத்தையும் ஸ்ரீ சக்கரத்தையும் காதுகளில் அணிவித்ததும் அன்னை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சாந்தமானாள். அத்துடன் அன்னையின் சந்நிதியின் எதிரே மூத்த மகனான ஆதிவிநாயகரையும் பிரதிஷ்டை செய்தார். மற்றொரு மகனான முருகனையும் அன்னை ஈஸ்வரியின் சந்நிதியின் பின்புறம் எழுந்தருளச் செய்தார்.
ஆடி மாதம் பௌர்ணமி அன்று காலை 10.15 மணி முதல் பகல் 12.15 மணிக்குள் உச்சிகாலப் பூஜையின்போது, ஈஸ்வரிக்கு பூணூல் சாத்தப்படும் வைபவம் நடைபெறும். இதுபோன்று வேறு எந்தத் தலத்திலும் காண்பது அரிது என்று சொல்லப்படுகிறது. மேலும் பஞ்சப்ரகார உற்சவத்தின் போது உற்சவ மூர்த்திக்கு (அன்னைக்கு) பட்டு வேட்டி, அலங்கார வஸ்திரம் அணிவித்து பூணூலும் சாத்தப்படுகிறது. இறைவனிடம் வேதங்களின் ரகசியத்தை அறிவதற்காக தியானம் செய்யும் பொருட்டு காவேரி கரைக்கு வந்த ஈஸ்வரி காவேரி நீரால் லிங்கம் உருவாக்கி வழிபட்டு இறைவனிடம் வேதங்களின் ரகசியத்தை அறிகிறாள். இன்னும் அறிந்து கொண்டிருக்கிறாள் என்று வேத நூல்கள் கூறுகின்றன. எனவே, அன்னை ஈஸ்வரி, இங்கு கன்னியாகவே எழுந்தருளியுள்ளாள். அதனால் இங்கு திருக்கல்யாண உற்ஸவம் இல்லை.
அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜிப்பதாக ஜதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்குப் பூஜை செய்யும் குருக்கள், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தக்கெண்டியுடன், மேள தாளம் முழங்க சிவன் சந்நிதிக்குச் சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு, ஈஸ்வரி சந்நிதிக்குத் திரும்புவார். இந்த பூஜை தினமும் நடைபெறும்.
ஆடி மாதத்தில் ஈஸ்வரி இங்கு சிவபெருமானை வேண்டி தவமிருந்ததால் இத்தலத்தில் ஆடி வெள்ளி ஓர் திருவிழா போல் கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளியன்று அதிகாலை இரண்டு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை நடை திறந்திருக்கும்.
இத்தலத்தில் அகிலாண்டேஸ்வரி, மூன்று தேவியர்களின் ஒருமித்த சங்கமாகத் திகழ்கிறாள். காலையில் லட்சுமியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதி தேவியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். அதனால் அகிலத்தின் நாயகியான இந்த ஈஸ்வரியை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்று போற்றுகிறார்கள். மேலும் வராகி என்பதால் மகா துர்க்கா அம்சம். தாமரை மலரினைத் தாங்கி மகாலட்சுமி கோலம். எப்போதும் ஞானத்தவம் புரிந்து இறைவனிடம் வேத வேதாந்தங்களை அறிந்து நின்றதால் மகா சரஸ்வதி ஆகிறாள். இதனால் தினமும் மூன்று திருவடிவங்களில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.
இத்திருக்கோயிலில் பிரதோஷ காலங்களில் வழிபட்டு, பிரதட்சணம் செய்து வந்தால் மேன்மையான வாழ்வு அமையும் என்பது ஐதீகம்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.
- டி.ஆர். பரிமளரங்கன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.