புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 18

எரிகோ கோட்டை, எலிசா நீரூற்று, சோதனை மலை (பாலஸ்தீனம்)பாலஸ்தீன நாட்டின் மேற்குக்கரை பகுதியில் எரிகோ
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 18
Updated on
2 min read

எரிகோ கோட்டை, எலிசா நீரூற்று, சோதனை மலை (பாலஸ்தீனம்)
பாலஸ்தீன நாட்டின் மேற்குக்கரை பகுதியில் எரிகோ (JERICHO) நகரம் உள்ளது. விவிலியத்தில் பேரீச்சம் பழம் பட்டிணம் என எரிகோ அழைக்கப்படுகிறது. 1948-இல் ஜோர்தான் நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த நகரம், 1967 முதல் 1994-ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. விவிலியத்தில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பட்டாலும் முக்கிய நகரமாக கருதப்படுகிறது.
உலக அளவில் மக்கள் வசிக்காத பழைமையான நகரங்களில் இதுவும் ஒன்று. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேலியர்கள் மோசே தலைமையில் 40 ஆண்டுகள் பயணம் செய்தனர். நேபோ மலையில் மோசே மறைந்த பின்னர், யோசுவா என்பவரின் தலைமையில் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். 
எரிகோ நகரம்தான் உலகிலேயே தாழ்வான பகுதியில் இருக்கும் நகரம். இந்நகரத்தின் சுவர் எகிப்திய பிரமீடுகளுக்கு எல்லாம் முன்னதாகக் கட்டப்பட்டது. பலமுறை அழிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்றுக் கட்டப்பட்ட சரித்திரம் இந்நகரத்திற்கு உண்டு. ஏறத்தாழ இருபத்தி மூன்று படிமங்களில் பலப்பல நாகரீகங்களின் இருப்பிடம் இவ்விடத்தில் காணப்படுவதாக அகழ்வாராட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
கடல் மட்டத்திற்கு 260 மீட்டர் தாழ்வான இடத்திலே இருப்பதால், இதமான கால நிலை இந்நகரத்தை உல்லாச புரியாக பல்வேறு மன்னர்கள் பயன்படுத்தினர். புதிய ஏற்பாட்டு காலத்திற்கு சற்று முன், எகிப்திய அழகு ராணி கிளியோபாத்ராவுக்கு காதல் பரிசாக இந் நகரம் அளிக்கப்பட்ட கதையும் உண்டு. 
இந் நகரத்தில் ஆங்காங்கு காணப்படும் வெந்நீர் ஊற்றுகள் அருகில் massage parlours இன்றும் உண்டு. எரிகோவின் தெற்குப் பகுதியில் சவக் கடல் உள்ளது. இந்த நகரில் தான் சிதிலமடைந்த எரிகோ கோட்டை, எலிசா நீரூற்று, இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்ட சோதனை மலை ஆகியவை உள்ளன.
எரிகோ கோட்டை: விவிலியத்தில் யோசுவா புத்தகம் 6-ஆம் அதிகாரத்தில் எரிகோ கோட்டை சரிந்த அற்புதம் விலாவரியாக சொல்லப்படுகிறது. யோர்தான் நதி நீரால் எரிகோவின் சுற்றுப் புற வயல்களுகள் செழிப்பாய் இருந்தன. யோசுவாவின் தலைமையில் இஸ்ரேலியர்கள் யோர்தானைக் கடந்து எரிகோவின் அருகில் சேரும்போது அறுவடைக் காலம் ஆனதால் தானியங்களை எரிகோவின் மதில்களில் களஞ்சியங்களில் சேர்த்து வைத்திருந்தனர்.
எரிகோவின் கோட்டை இரண்டு மதில் சுவர்களால் ஆனது. உட்புற சுவர் சற்று உயரமாகவும் வெளிப்புறச் சுவர் சற்று தாழ்வாகவும் இருந்தன. உட்புறச் சுவரின் மீது ஒரு கார் போகும் அளவுக்கு 2 மீட்டர் அகலமாக இருந்தது. இரு சுவருகளுக்கும் இடையே வீடுகள் கட்டி குடி இருக்கும் அளவிற்கு கணிசமான இடைவெளி இருந்தது. நகரத்தின் உள் பகுதியில் ஏறத்தாழ 2000 எரிகோ குடிமக்கள் இருந்தனர். 
மதிலின் மீது இருந்த பகுதியில் வெளி ஊரினர், இடம் பெயர்ந்தோர், கீழ்த்தர தொழில் புரிவோர், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர் வசித்தனர். ராகாப் என்ற பாலியல் தொழிலாளியும் எரிகோவின் வடக்கு புற மதிலில் வீடு கட்டி இருந்தார்.
நல்ல பலமான மதில் சுவர் மற்றும் பல வருங்களுக்கு போதிய உணவு தானியங்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்ததால் எரிகோ குடிமக்கள் இஸ்ரவேலரின் முற்றுகையை பெரிசாக அலட்டி கொள்ளவில்லை.
ஆறு நாள்கள் காலமே எழுந்து நகரத்தை சுற்றி வந்த புரோகிதர் (ஆசாரியர்) கூட்டத்தை ஏதோ திருவிழாவில் பஜனை ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்பதை போல் கண்டு ரசித்திருக்கலாம். ஏளனமாக பேசி இருக்கலாம். 
பூட்டப்பட்ட வாசல்களுக்கு உள்ளே பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மமதையில் வேறு எந்த பதில் நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எரிகோ மன்னருக்கு ஏன் இப்படி காலை பஜனை செய்கிறார்கள் என்பது ஒரு புதிராக இருந்திருக்கும். ஏழாம் நாள் முதல் ஆறு முறை சத்தமில்லாமல் சுற்றி வந்த முழு இஸ்ரவேலர் கூட்டம் ஏழாம் முறை எக்கால சப்தத்துடன் ஏகமாய் ஆர்ப்பரித்த போது மதில் சுவர் இடிந்து விழ மொத்த இஸ்ரவேலரும் அவரவர் தங்களுக்கு நேரே பட்டணத்துள் நுழைந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.
இந்நகரம் முற்றிலுமாக சுட்டெரிக்கப்பட்டது என்பதற்கு ஒரு மீட்டர் உயரத்திற்கு காணப்படும் சம்பல் இன்றும் சாட்சியம் அளிக்கிறது!
எலிசா நீரூற்று: எலிசா என்றால் எபிரேய மொழியில் யெகோவாவே இரட்சகர் என்பது பொருள். எலியா தீர்க்கதரிசியை பின்பற்றி வாழ்ந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தீர்க்கதரிசன ஊழியங்களைச் செய்தவர். இஸ்ரேல், யூதேயா, மோவாப், ஆராம் (சிரியா) ஆகிய தேசங்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 
எலிசா, எலியாவின் தலைமைத்துவத்தை ஏற்று தேசத்தை வழிநடத்திச் சென்றவர். கர்த்தர், எலியாவுக்குக் கட்டளையிட எலிசாவை தீர்க்கதரிசியாய் அபிஷேகம் செய்தார். பின்பு எலியாவின் பின் சென்று அவனுக்கு ஊழியக்காரனாயிருந்தான். பின்பு எலியாவின் ஊழியங்கள் முடிவடையும் தருணத்தில் எலிசா இரு மடங்கு அபிஷேகத்தைப் பெற்று எலியாவின் ஊழியத்திற்குச் சுதந்திரவாளியானான். (1 இராஜாக்கள் 2-ஆம் அதிகாரம்).
- ஜெபலின் ஜான்
- தொடரும்...
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com