5 அப்பம், 2 மீன்களை 5,000 பேருக்கு வழங்கிய அற்புதம், இயேசு மறுரூபமான மலை:
இயேசு கலிலேயாக கடல் மற்றும் கடற்கரையை சுற்றி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று தான் 5 அப்பம், 2 மீன்களை கொண்டு 5,000 ஆண்களுக்கு உணவு வழங்கிய அற்புதம். இது நடந்த இடம், கலிலேயா கடலுக்கு அக்கறையில் உள்ள தாப்கா மலை (TOPCA).
விலியத்தின்படி, யோவான் 6-ஆம் அதிகாரம் ஒன்று முதல் 14-ஆம் வசனங்கள் வரை:
இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடருடனேகூட உட்கார்ந்தார். அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், "இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே' என்றான். அப்பொழுது அவருடைய சீடரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி, "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். இயேசு, ஜனங்களை உட்காரவையுங்கள்' என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.
இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டிய மட்டும் கொடுத்தார். அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீடர்களை நோக்கி, ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு, "மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி!' என்றார்கள்.
இந்த அற்புதம் நடந்த இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள பலிபீடத்தில் (ALTAR) 2 மீன்கள், 4 அப்பம் இருப்பது போன்ற வரைபடம் பொறிக்கப்பட்டுள்ளது. உலக மக்களுக்காக இருக்கும் 5-ஆவது அப்பம் தான் இயேசு என்பதை சொல்லாமல் உணர்த்தும் வகையில் அங்கு 4 அப்பங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்த ஆலய வளாகத்தில் ஒலிவ எண்ணெய் பிழியும் பழங்கால இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. நம் ஊரில் உள்ள பழங்கால செக் போன்ற வடிவமைப்பில் இது உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் ஒலிவ மரத் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இவற்றையும் புனித பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இயேசு மறுரூபமான தாபோர் மலை:
இஸ்ரேலின் கீழ் கலிலேயாவில் யெசுரியேல் பள்ளத்தாக்கின் கிழக்கு முடிவில், மேற்கு கலிலேயக் கடலிலிருந்து 11 மைல்கள் (18 கி.மீ.) தொலைவில் தாபோர் உள்ளது. கி.மு.12-ஆம் நூற்றாண்டின் மத்தியில், இப்பகுதியில் இஸ்ரேலிய நீதிபதி தெபோரா தலைமையின் கீழ் பாராக்கிற்கும் சிசாரா தலைமையின் கீழான யபீன் படைகளுக்குமிடையில் "தாபோர் மலை சண்டை" இடம் பெற்றது. இங்கு இயேசுவின் உருமாற்றம் (மறுரூபம்) இடம் பெற்றதாக விவிலியம்
கூறுகிறது.
இயேசு தனது சீடர்களுடன் இந்த மலைக்குச் சென்று அங்கு மோசே (இஸ்ரேலியர்களை எகிப்தில் அடிமைதனத்தில் இருந்து மீட்டு வந்தவர்), எலியா தீர்க்கத்தரிசி ஆகியோருடன் பேசியதாக விவிலியம் கூறுகிறது. ஏற்கெனவே மரித்துபோன மோசே, எலியாவுடன் இயேசு பேசுவதை பார்த்த சீடர்கள் பயந்து போனார்கள்.
விவிலயத்தின் மத்தேயு 17: 1 முதல் 9-ஆவது வசனங்கள் வரை படி, "ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
பேதுரு இயேசுவைப் பார்த்து,' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று,' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு,' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஏராளமான புனித பயணிகள் பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.