புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 27

கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார்
கலிலேயா கப்பல் பயணத்தில் கப்பலில் ஏற்றப்படும் இந்திய - இஸ்ரேல் தேசிய கொடிகள்
கலிலேயா கப்பல் பயணத்தில் கப்பலில் ஏற்றப்படும் இந்திய - இஸ்ரேல் தேசிய கொடிகள்
Updated on
2 min read

கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார் (மத்தேயு 5:1-7:28). இது மலைச் சொற்பொழிவு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
 அதிசய மீன்பாடு புதுமை
 இயேசு தம் அதிசய வல்லமையைப் பயன்படுத்தி இருமுறை பெருமளவில் மீன்பாடு நிகழச் செய்தார் என்று நூல்கள் கூறுகின்றன. முதல் புதுமையை லூக்காவும் இரண்டாம் புதுமையை யோவானும் குறித்துள்ளனர். லூக்கா 5:1-11: ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர், சீமோன் என்பவரின் படகில் இயேசு ஏறி அமர்ந்து அதில் அமர்ந்தவாறே கற்பித்துக்கொண்டிருந்தார்.
 படகை ஏரியின் ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய் மீன்பிடிக்க வலைகளைப் போடுமாறு இயேசு சீமோனிடம் கூறினார். இரவு முழுதும் வலைவீசியும் மீனொன்றும் அகப்படவில்லை என்று சீமோன் கூறிப்பார்த்தார். என்றாலும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்று சொல்லி, அவரும் அவரோடுகூட இருந்தவர்களும் ஏரியில் வலைகளை வீசினார்கள். அதிசயமான விதத்தில் பெருந்திரளான மீன்கள் வலைகளில் அகப்பட்டன; வலைகளும் கிழியத் தொடங்கின. வேறு மீனவர்களும் துணைக்கு அழைக்கப்பட்டனர். படகு மூழ்கும் அளவுக்கு மீன்கள் கிடைத்தன. வியப்பும் அச்சமும் மேலிட, சீமோனும் அவர்தம் உடனுழைப்பாளரும் இயேசுவின் கால்களில் விழுந்தார்கள்.
 இவ்வாறு இயேசு அவர்களைக் கெனசரேத்து ஏரிக்கரையில் தம் சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார். யோவான் 21:1-14: சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு திபேரியக் கடல் அருகே தம் சீடருக்குத் தோன்றியதை யோவான் பதிவுசெய்துள்ளார். இரவு முழுதும் வலைவீசியும் மீன் அகப்படாமல் இருந்தது. ஏரிக் கரையில் நின்ற இயேசு படகிலிருந்த சீமோனையும் மற்றவர்களையும் நோக்கி, படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும் என்றார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. வலையில் 153 மீன்கள் இருந்தன.
 இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் அவர் உயிர்த்தெழுந்த பின்னும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்கியது என்றும், இயேசுவின் பணியை அவர்தம் சீடர்கள் தொடர்ந்து ஆற்றி, உலக மக்கள் எல்லாரையும் (153 மீன்கள் என்பது 153 நாடுகளை குறிக்கிறது) கடவுளின் ஆட்சியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் இயேசு அப்பொறுப்பைச் சீடர்களுக்கு அளித்தார் என்றும் புதிய ஏற்பாடு கூறுகின்றது. இதையே லூக்காவும் யோவானும் வெவ்வேறு விதங்களில் பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
 பிற புதுமைகள்
 இயேசு கலிலேயக் கடல்மீது நடந்தார் என்னும் செய்தியை விவிலியத்தில் பதிவுசெய்துள்ளனர் (மத்தேயு 14:26-33, மாற்கு 4:45-52, யோவான் 6:16-21). கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கிய நிகழ்ச்சியையும் விவிலியத்தில் மத்தேயு 8:23-27, மாற்கு 4:35-41, லூக்கா 8:22-25 ஆகிய இடஙகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 கலிலேயக் கடலருகில் பாலைநிலத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தியும் நற்செய்தியில் காணப்படுகிறது (: மத்தேயு 14:13-21, மாற்கு 6:30-44, லூக்கா 9:10-17, யோவான் 6:1-14).
 புனிதப் பயணம் செல்லும் பயணிகள் கலிலேயே கடற்கரை ஓரங்களில் உள்ள புனித தலங்களை பார்வையிட்ட பின்னர் கெனசரேத் என்னும் இடத்தில் இருந்து சிறிய வகை கப்பலில் ஏற்றி சுமார் 45 நிமிட கடல் பயணத்துக்கு பின்னர் திபேரியஸ் நகருக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த கப்பலில் இரு கொடிகள் கம்பத்தில் பறக்கும். ஒன்று இஸ்ரேல் தேசியக் கொடி. மற்றொன்று எந்த நாட்டு பயணிகள் கப்பலில் ஏறுகிறார்களோ அவர்களின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படும். இந்திய மக்கள் ஏறி "ஜனகன' என்ற தேசிய கீதத்தை பாடும்போது இந்தியர்களின் தேசப்பற்று கலிலேயா கடலில் அலையின் சப்தத்தையும் மீறி ஒலிப்பதை பார்க்க முடியும். கப்பலில் முதலில் எபிரேய பாடல் ஒன்று ஒலிக்கப்படும். பின்னர் புனித பயணிகள் தங்களது தாய்மொழி பாடல்களை பாடியபடியும், பிரார்த்தனை செய்தபடியும் கலிலேயா கடலில் பயணம் செய்வது புனித பயணிகளுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கும்.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்)
 கலிலேயா கப்பல் பயணத்தில் கப்பலில்
 ஏற்றப்படும் இந்திய - இஸ்ரேல் தேசிய கொடிகள்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com