குழந்தைப்பேறு அருளும் கன்றாப்பூர்

குழந்தைப் பேறு அருளும் திருத்தலம் - கன்று கட்டும் ஆப்பு சிவலிங்கமான கோயில் - திருநாவுக்கரசர் தேவாரம் பெற்றத் தலம் - தன் திருமேனியில் கோடாலி வடுவை ஏற்ற
குழந்தைப்பேறு அருளும் கன்றாப்பூர்

குழந்தைப் பேறு அருளும் திருத்தலம் - கன்று கட்டும் ஆப்பு சிவலிங்கமான கோயில் - திருநாவுக்கரசர் தேவாரம் பெற்றத் தலம் - தன் திருமேனியில் கோடாலி வடுவை ஏற்ற இறைவன் - பாண்டவர்கள், இடும்பர்கள், தர்ம சர்மா உள்ளிட்ட பலர் வணங்கிப் பேறு பெற்ற திருக்கோயில் - கருவறைச் சுற்றில் 93 அடியார்களில் அழகிய திருவுருவங்கள் கொண்ட கோயில் - காசிக்கு நிகரான தீர்த்தம் கொண்ட கோயில் - பிரம்மோற்சவம் கொண்டாடும் மாரியம்மனின் உற்சவத் திருமேனி கொண்ட கோயில் - மாசி செவ்வாயில் சூரியன் வணங்கி வழிபடும் இறைவன் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் கன்றாப்பூர் திருத்தலம்.
 தல வரலாறு: திருக்கயிலாயத்தில் சிவபெருமான் உமாதேவியுடன் இருந்த போது, சுதாவல்லி என்ற வித்தியாதரப்பெண் (தேவமங்கை), உமாதேவியின் வேடம் பூண்டு நடித்து, சிவபெருமானுக்கு மகிழ்வை உண்டாக்கினாள். இதைக் கண்ட அன்னை உமாதேவியார், சுதாவல்லியை மண்ணுலகில் பிறக்கச் சாபமிட்டாள். விளையாட்டாகச் செய்தது வினையாகிப்போக, சுதாவல்லி பதறினாள். அப்போது உமாதேவியார் மண்ணுலகில் பிறந்து சிவபெருமானை வணங்கி பின்பு தன்னை வந்து சேரும்படி அருள்வழங்கினாள்.
 அதன்படியே, தேவூருக்குத் தெற்கேயுள்ள, கன்றாப்பூர் தலம் வந்து, சைவ வேளாளர் மரபில், கமலவல்லியாகப் பிறந்தாள். சைவநெறியில் பிறந்து சிவபெருமானையே இடைவிடாது வழிபட்டு வந்தாள். பருவம் வந்ததும், இவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். என்றாலும், கமலவல்லி சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்துவந்தாள். சிவனின் தீவிர பக்தியால் மனம் வெறுத்த கணவன், சிவலிங்கத்தை, அவளுக்கே தெரியாமல் கிணற்றில் போட்டுவிட்டான்.
 இதனால் வருத்தமுற்ற கமலவல்லி, சிவ பூஜையை விட மனமின்றி தவித்தாள். கணவனுக்கும் தெரியாமல் சிவபூஜை செய்ய விரும்பினாள். அவளுக்குப் பார்க்கும் பொருள்கள் எல்லாம் சிவரூபமாகவே தெரிந்தன. அதன்படி தன் வீட்டு கன்றுக்குட்டியைக் கட்டும் தறியையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டு வந்தான்.
 இதற்கும் சோதனை வந்தது. இதைக் கண்டு கொண்ட கணவன் மீண்டும் கோபம் கொண்டு கோடாரியுடன், அந்தத் தறியை வெட்டினான். உடனே அது பிளந்து இரத்தம் பீறிட்டது. அதில் இருந்து எம்பெருமான் லிங்க வடிவம் கொண்டு காட்சிதர, சிவனின் பெருமையை கணவனும், ஊர் மக்களும் அறிந்து அதிசயித்தனர். இறைவனும் அவர்களுக்கு அருள்வழங்கி ஆட்கொண்டு அருளினார். இறைவன் நடு தறியில் தோன்றியதால், நடுதறிநாதர் என வழங்கப்பட்டார் என்பது தலபுராணம்.
 இதுதவிர, காஞ்சிபுரத்தில் அன்னை பார்வதி மணல் லிங்கம் பிடித்து வழிபட்டு பேறுபெற்ற வரலாறு இத்தலத்திற்கும் கூறப்படுகிறது. பாண்டவர்கள் வழிபட்டது, இடும்பன் பெயர் கொண்ட இரண்டு அடியார்கள் வழிபட்டுப் புத்திரப்பேறு, கண்நோய்கள் நீக்கப்பெற்றதும், மேதாவி முனிவரின் சாபம் பெற்று நாயுருவான தர்மசர்மா சாபம் நீங்கியதாகவும் தலவரலாறு குறிப்பிடுகிறது.
 இலக்கியங்கள்: திருநாவுக்கரசர் தேவாரத்தில் பத்து பாடல்களில் கன்றாப்பூர் தலம் குறித்து புகழப்பட்டுள்ளது. இதில் 9 -ஆவது பாடல் கிடைக்கவில்லை. "ஒவ்வொரு பாடலிலும் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே' என குறிப்பிட்டுள்ளார். úக்ஷத்திரக்கோவைத் திருத்தாண்டகம், பெரியபுராணம் உள்ளிட்ட சைவ இலக்கியங்களிலும் இத்தலம் புகழப்பட்டுள்ளது.
 கன்றாப்பூர்: கன்றாப்பூர் என்பது இவ்வூரின் பெயர். பசுங்கன்று கட்டும் சிறுமுளை (ஆப்பு) என்பது இதன்பொருள். இதனால் இவ்வூர் கன்றாப்பூர் என்றானது. தற்போது கோயில் கன்னாப்பூர் என வழங்கப்படுகிறது. இவ்வூரின் அருகே கன்னாப்பூர் என்ற மற்றொரு ஊரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அது கீழகன்னாப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
 ஆலய அமைப்பு: பசுமையான சூழலில் அருள்மிகு நடுதறி நாதர் ஆலயம் அமைந்துள்ளது. மூன்றுநிலை ராஜகோபுரம் கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி நான்கு மாடவீதிகள் உள்ளன. கோயில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் பிராகாரத்தில், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் நம்மை வரவேற்க, உயரமான மகாமண்டபம் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியின் முகப்பில் வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் முருகன் சிலை வடிவமாக அமைந்துள்ளது.
 ஆலயத்தின் நுழைவுவாயிலில் விநாயகர், காலபைரவர், குரோத பைரவர், சண்டபைரவர், மகாகாளபுரீஸ்வரர், நவக்கிரகங்கள், தனி சந்நிதியில் சனீஸ்வரர், இரு திருஞானசம்பந்தர்கள், இரு திருநாவுக்கரசர்கள், சூரியன் என ஒருங்கே அமைந்துள்ளன.
 கருவறை பின்புறம் மூல விநாயகர், கல்பனைநாதர், பாலகணபதி, தருண கணபதி, சித்தி கணபதி, புத்தி கணபதி, முத்தி கணபதி, ஜேஸ்டாதேவி, பிடாரியம்மன், ஐயனார், விநாயகர், சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், கெஜலட்சுமி அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளனர். ஆலய உள்புறம் பவழமல்லி, அரளி, நந்தியாவட்டை என பல்வேறு பூச்செடிகளும், வில்வம், வன்னி மரங்களும் நிறைந்துள்ளன.
 இறைவன் நடுதறி நாதர்: இறைவன் நடுதறி நாதர். நடுதறி என்பதற்கு, நடப்பட்ட தறி என்பது பொருள். இறைவன், நடப்பட்ட தறியில் தோன்றியதால் நடுதறிநாதர் என வழங்கப்படுகிறார். சதுர வடிவ ஆவுடையார் சிவலிங்கத்திருமேனி, கோடாலி வடுவுடன் காணப்படுவதை அபிஷேக காலங்களில் எளிதாக காணலாம். மாசி மாதக் கடைசி செவ்வாயில் அதிகாலை உதயம் 05.30 மணிக்கு இறைவன் மீது ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது. அப்போது சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும்.
 இறைவி மாதுமை நாயகி: தெற்கு நோக்கிய அன்னை எழிலான நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் மலர்கள் தாங்கியும், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரைகளோடும் காட்சி தருகின்றன. மாதுளம் நிறத்தவள் என்ற பொருளில் மாதுமை நாயகி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார்.
 பத்துநாள் உற்சவம்: இக்கோயிலில் எளிய வடிவில் உற்சவர் திருமேனியராக அன்னை மாரியம்மன் அமைந்துள்ளார். இவருக்கு தனி ஆலயம் எழுப்பி வழிபட உத்தரவு கிடைக்காததால், சித்திரை மாதத்தில் பத்துநாள்கள் பிரம்மோற்சவம் ஊர் மக்களால் நடத்தப்படுகிறது.
 தலமரம், தீர்த்தம்: தலமரமாக கல்பனை மரம் விளங்குகிறது. ஆனால் அம்மரம் ஏதுமில்லை. தலத்தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே சிவகங்கைத் தீர்த்தம் அமைந்துள்ளது. குளக்கரையில் விநாயகர் சந்நிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. இதுதவிர, ஞானகுபம், ஞானாமிர்தம் என்ற இரண்டு தீர்த்தங்களும் உள்ளன.
 அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டம், கீவளூர் வட்டத்தில், கோயில் கன்னாப்பூர் அமைந்துள்ளது. திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மாவூர் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் எட்டுக்குடி முருகன் ஆலயம் செல்லும் பேருந்து இத்தலம் வழியே செல்கிறது. கோயில் கன்னாப்பூர் போன்று பழைமையான சிவாலயங்கள் கிழக்கில் சாட்டியக்குடி, மேற்கே நாட்டியத்தான்குடியும், தெற்கே வலிவலமும் அமைந்துள்ளன.
 - பனையபுரம் அதியமான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com