பொருநை போற்றுதும்! 38 - டாக்டர் சுதா சேஷய்யன்

"தூக்குத் துரை' என்றே இவர் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். இவர் தூக்கிலிடப்பட்ட இடம், தூக்குமரத்து வயல் என்னும் பெயரையும் பெற்றுவிட்டது. தூக்குத்துரைக்குச் சிலையும் இருக்கிறது
பொருநை போற்றுதும்! 38 - டாக்டர் சுதா சேஷய்யன்

"தூக்குத் துரை' என்றே இவர் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். இவர் தூக்கிலிடப்பட்ட இடம், தூக்குமரத்து வயல் என்னும் பெயரையும் பெற்றுவிட்டது. தூக்குத்துரைக்குச் சிலையும் இருக்கிறது (இந்த நிகழ்வில் இடம்பெறுகிற கலெக்டர் ஜே.சி.ராட்டன், 19.2.1834 முதல் 3.3.1837 வரை திருநெல்வேலி கலெக்டராக இருந்தார். 1830 -களின் தொடக்கத்தில், மதுரைப் பகுதியின் சப்-கலெக்டராக இருந்தபோது, கொடைக்கானலுக்குச் சென்று, கோடை வாசஸ்தலமாக அப்பகுதி உருவாகக் காரணமாக விருந்த ஆங்கிலேயர்களில் ஒருவர். 1840 -களில் கோவைப் பகுதியின் பிரின்சிபல் கலெக்டராகவும் மாஜிஸ்ட்ரேட்டாகவும் இருந்த காலத்தில், உதகமண்டல வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்).
 வரலாற்றில் பேரிடம் பெற்றுவிட்ட சிங்கம்பட்டி, இன்றளவில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறு கிராமமாகத் திகழ்கிறது. சொல்லப்போனால், இரண்டு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. ஜமீன் சிங்கம்பட்டி மற்றும் அயன் சிங்கம்பட்டி.
 மக்கள் பங்களித்த மணிமுத்தாறு நீர்த்தேக்கம்
 
சற்றே சிலிர்த்துக்கொண்டு, சிங்கம்பட்டியின் சரித்திரப் பெருமைகளிலிருந்து வெளியே வருகிறோம். மணிமுத்தாற்றின் மெல்லிய பூங்காற்று மேனிதொட்டு வருடுகிறது. தாமிரவருணியைக் காட்டிலும் மணிமுத்தாற்றின் நீர்வரத்து குறைவுதான் என்றாலும், மழை வெள்ளக் காலங்களில் இவளின் பெரும் பாய்ச்சல் அநாவசியமாகக் கடலுக்குள் வீழ்ந்துவிடுவதைக் கண்டு, பழம்பெரும் அரசியல் தலைவரான கே.டி.கோசல்ராம் உந்துதலில் பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த திட்டம்தான் மணிமுத்தாறு நீர்த்தேக்கத் திட்டம்.
 பாபநாசம் நீர்த்தேக்கத் திட்டத்தினால், நெல்லைப் பகுதியின் நீர்ப்பாசனத் தேவைகள் முழுமையாக நிறைவேறவில்லை. பெரிய பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கு வழியில்லை என்பதை உணர்ந்த மதராஸ் அரசாங்கம், சிறிய திட்டத்திற்கு வழியுண்டா என்று ஆய்வு செய்தது.
 இதற்கிடையில், மணிமுத்தாறு நீர்த்தேக்கம் உருவாக்கும்படி, 1933 - லிருந்தே இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தனர். மழை குறைந்ததன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்து, இப்பகுதி ஊர்களின் கிணறுகளிலும் கேணிகளிலும் இருந்த நீர், உப்புத்தன்மை பெறத்தொடங்கியது. வேளாண்மைத் தேவைகள், குடிநீர்த் தேவைகள், நிலத்தடி நீரின் உப்புத்தன்மை இவை யாவற்றையும் சமாளிக்க வேண்டுமெனில், நீர்த்தேக்கம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.
 மணிமுத்தாறு நீர்த்தேக்கம் அமைக்கப்படலாம் என்பதை உறுதி செய்துகொண்ட அரசாங்கம், அப்போதைய நிலையில் மிக மிகப் புதியதான திட்டம் ஒன்றையும் அறிவித்தது. நீர்த்தேக்கம் அமைந்தால் அதன் பயனுறு பகுதிக்குள் வரக்கூடிய 68 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரையும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500/- வீதம் மேம்பாட்டுக் கட்டணம் கட்டும்படி வேண்டியது. அதுவரை கேட்டறியாத முறை என்றாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவாலும் கே.டி. கோசல்ராமின் மக்கள் அரவணைப்பாலும், ஓராண்டுக்குள் ரூ.1.25 கோடி வசூலானது.
 மக்கள் ஆர்வத்தோடு முன்வந்த இச்செயல், அரசாங்கத்திற்கு உந்துசக்தியாக அமைய, 1950 -ஆம் ஆண்டு நவம்பர் 20- ஆம் தேதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவத்சலம் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். திட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றமும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வும் சிக்கல் தந்தன. அரசாங்கம் அயராது துணை நின்றது. ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1958 -இல், 52 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு, நீர்த்தேக்கத் திட்டம் நிறைவுற்றது. மணிமுத்தாறு தாமிராவோடு கலக்கும் பகுதிக்கு 3 கி.மீ. முன்னதாக, சிங்கம்பட்டிக்குச் சற்றே தென்மேற்காக அமைந்திருக்கிறது மணிமுத்தாறு நீர்த்தேக்க அணை.
 கான்க்ரீட், மண் கலப்பு அணையாகக் கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீர், மணிமுத்தாறு கால்வாய், பெருங்கால், கோட்டைக்கால் ஆகிய கால்வாய்களின் வழியாகப் பாசனத்திற்குத் திருப்பப்படும். தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி உள்ளிட்ட அம்பாசமுத்திரம் மற்றும் திருநெல்வேலித் தாலுக்காக்களின் பகுதிகள், நாங்குநேரித் தாலுக்காவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளையின் சில இடங்கள் என்று சுமார் 65 ஆயிரம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பாசன நீர் பெறுகின்றன.
 மணிமுத்தாறு அருவியும் மாஞ்சோலைக் காடுகளும்
 எழிலார்ந்த சுற்றுலாத் தலமாகவும் வசதிப்படுத்தப்பட்டுள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 6 கி.மீ. மேற்கு-தென்மேற்காக அமைந்துள்ளது இயற்கையான மணிமுத்தாறு அருவி. மாஞ்சோலை மலைச் சரிவுகளிலிருந்து கீழே பாய்கிற மணிமுத்தாறு, சுமார் 25 அடி உயரத்திலிருந்து அருவியாகச் சரிந்து, இங்குதான் சமதரையைத் தொடுகிறாள். மக்கள் நீராடுவதற்கு ஏதுவாக, அருவி என்னவோ குழந்தையாகத்தான் குதிக்கிறாள்; ஆனால், அருவிக்குக்கீழே நீர் மண்டுகிற ஏரி, சுமார் 85-90 அடி ஆழமானது.
 மணிமுத்தாறு அருவியையும் தாண்டி, சுமார் 3500 அடி உயரத்திலிருக்கும் மாஞ்சோலைக் காட்டுப் பகுதிக்குள் சென்றால், அங்குதான், மாஞ்சோலைத் தோட்டங்கள் என்றழைக்கப்படும் சிங்கம்பட்டிக் குழுமத் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. காகாச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி போன்ற இடங்கள், தேயிலைக்கு மாத்திரமல்ல, இயற்கையின் அழகுக்கும் பெயர் பெற்றவை.
 - தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com