Enable Javscript for better performance
பாவங்களைப் போக்கும் பசுபதி!- Dinamani

சுடச்சுட

  

  பாவங்களைப் போக்கும் பசுபதி!

  By DIN  |   Published on : 13th December 2019 11:30 AM  |   அ+அ அ-   |    |  

  vm2

  அப்பர் பெருமானின் தேவாரப்பதிகம் பெற்ற காவிரிக்குத் தென்கரையில் 72-ஆவது தலமாக போற்றப்பெறுவது "திருக்கொண்டீச்சரம்'. மக்கள் இவ்வூரை "திருக்கண்டீசுவரம்' என தற்போது அழைக்கின்றனர். இத்தலம் ஒரு காலத்தில் வில்வமரக்காடாக இருந்த காரணத்தால் "வில்வாரண்யம்' என்று கூறப்படுகின்றது. முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் உள்ளது.
   தலவரலாறு
   ஒரு சமயம், திருக்கயிலையில் இறைவனும், இறைவியும் பேசிக்கொண்டிருக்கும் போது வந்த கருத்து வேறுபாடினால் இறைவியை பூலோகத்தில் பசுவாக போகும்படி இறைவன் சபிக்கின்றார். சாபத்தினால் பூலோகத்திற்கு வந்த அம்பிகை பசு உருவங்கொண்டு, தன் பதியை மீண்டும் அடைய வேண்டி, வில்வாரண்யத்தில் தேடிக்கொண்டிருந்தார். அவர் அகப்படவில்லை. தன் கொம்புகளைக் கொண்டு பூமியைக் கிளறிப் பார்த்த, தருணத்தில் ஒரு சிவ லிங்கத்தின் (சுயம்பு) மீது கொம்புப்பட்டு குருதி வழிந்தது.
   அதைக்கண்டு அஞ்சிய இறைவி, பசுவான தன் மடியிலிருந்து பால் சொரிந்து அக்காயத்தை ஆற்றி வழிபடலானாள். மகிழ்ந்த இறைவனும் ரிஷபவாகனத்தில் தோன்றி இறைவிக்கு சாபவிமோசனம் அளித்து ரிஷபா ரூடராய் காட்சி நல்கினார் என்பர். மேலும் தேவலோகப் பசு காமதேனு வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. இத்திருத்தலத்தில் தான் வியாழகுருபகவானும் சிவனை வழிபட்டு பற்பல நற்பேறுகளைப் பெற்றதாகவும் வரலாறு.
   ஆலய இறைமூர்த்தங்கள்
   கிழக்கு நோக்கி இத்திருக்கோயிலை சுற்றிலும் அகழி உள்ளது. இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அம்பிகை சாந்த நாயகி என்ற திருநாமத்திலும் வழிபடப்படுகின்றனர். தலமரம் - வில்வமரமாகும். தல தீர்த்தம் பாற்குளம். அம்பிகை பசு உருவாய்ப் பூசித்த ஐதீகச் சிற்பமும் ஆலயத்தில் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, சூரியன், சந்திரன், பைரவர், சுரஹரேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
   கல்வெட்டு
   இக்கோயிலில் சகம் 1439 -இல் ஏற்பட்ட விஜயநகர வேந்தராகிய வீரகிருஷ்ண தேவ மகாராயர் கல்வெட்டு ஒன்று உள்ளது.
   விழாக்கள், பிரார்த்தனை, வழிபாடுகள்
   தலவரலாற்றின் படி, இறைவன் ரிஷபாரூபராய்க் காட்சியளித்து உமையம்மையை ஆட்கொண்டது ஒரு கார்த்திகை மாதம் வியாழனன்று எமகண்ட வேளையில் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. அதன் பொருட்டு இத்தலத்தில் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மாதத்தில் வரும் வியாழக்கிழமை நாள் சிறப்புத் திருவிழாகக் கொண்டாடப்படுகின்றது. இதே நாளில் தான் நவக்கிரக குருபகவானும் பூஜித்து நற்கதி பெற்றதாகவும் கருதப்படுகின்றது.
   எனவே, வியாழக்கிழமையில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் வியாழகுருவினால் பாதிப்புள்ளவர்கள் அனைவரும் கார்த்திகை வியாழக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து எமகண்ட வேளையில் ஆலய திருக்குளத்தில் இறைவன் முன் நடைபெறும் தீர்த்தவாரியைக் கண்ணாரக்கண்டு, புனித நீராடி ஆலய வழிபாடுகளை செய்து பரிகார பூஜைகள் மேற்கொள்ள அனைத்து கோளாறுகளும் நீங்கி விடுவதாக ஐதீகம்.
   பொதுவாக, பக்தர்கள் வியாழக்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து புனித நீராடினால் அவர்களுக்கு ஏற்பட்ட பாவங்கள் களையப்படுவது திண்ணம். சுரநோயால் வாடுபவர்கள் இங்குள்ள சுரஹரேஸ்வரரை வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழங்கலரிசி சாதம் நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது.
   சிறப்புகள்
   திருத்தலங்கள் தோறும் சென்று இறைவனை பாடி வழிபட்டு வந்த அப்பர்பெருமான் தன் முக்தி தலமான திருப்புகலூருக்குச் செல்லுமுன் கடைசியாக இத்தலத்திலிருந்து தான் சென்றார் என்ற ஒரு கூற்றும் உண்டு. காஞ்சி மகாசுவாமிகள் சுமார் 50 வருடங்களுக்கு முன் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சந்நிதிக்கு ஸ்ரீ சக்ர யந்திரம் அளித்துள்ளார்கள்.
   திருப்பணி
   தமிழக இந்து சமய அறநிலையதுறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ்வாலயத்தில் 2006 -இல் நடந்த குடமுழுக்கு வைபவத்திற்குப் பிறகு, தற்போது சில திருப்பணி வேலைகள் சேவார்த்திகளின் பங்களிப்போடு நடந்து வருகின்றது. நூதன கொடிமரம் பிரதிஷ்டை செய்து நின்று போன தைப்பூச பிரம்மோற்சவம் திரும்பவும் நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் தங்கள் வாழ்நாள்களில் ஒரு முறையேனும் இத்தலத்திற்கு விஜயம் செய்து ஆன்மாவான நமக்கு (பசு) தலைவனாக இருந்து (பதி) அருள்புரிய காத்திருக்கும் பசுபதீஸ்வரரைக் கண்ணாரக் கண்டு களிப்பது நமது லட்சியமாக இருக்கட்டும்.
   தல இருப்பிடம்
   மயிலாடுதுறை திருவாரூர் ரயில் மார்க்கத்தில் நன்னிலத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
   தொடர்புக்கு: 99446 81065/ 94430 38854.
   - எஸ்.வெங்கட்ராமன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai