பிறவிப் பயன் நல்கும் பிரம்மநந்தீஸ்வரர்!

 இப்படியெல்லாம் நம் வாழ்வில் ஒன்றாகக் கலந்த ஆலயங்கள் இல்லாத ஊர்களில்லை எனலாம்.
பிறவிப் பயன் நல்கும் பிரம்மநந்தீஸ்வரர்!

 நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
 தேடித் திரிந்து சிவபெருமா னென்று
 பாடுமின்: பாடிப் பணிமின்:
 பணிந்தபின்
 கூடி நெஞ்சத்துக்
 கோயிலாய்க் கொள்வனே!
 இப்படியெல்லாம் நம் வாழ்வில் ஒன்றாகக் கலந்த ஆலயங்கள் இல்லாத ஊர்களில்லை எனலாம். பெருங்கோயில் இல்லாவிட்டாலும், ஒரு பிள்ளையார் கோயிலாவது அல்லது மாரியம்மன் கோயிலாவது தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் இருக்கும்.
 இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்தன. சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோயில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
 இவ்வாறான, நம் பெருமை மிகு திருக்கோயில்கள் பின்னர் வந்த அந்நிய படையெடுப்புகளாலும், ஆக்கிரமிப்பாலும், அதனால் மக்கள் புலம் பெயர்ந்ததாலும், சிதிலமடைந்தன. இவ்வாறு பெருமை வாய்ந்த திருக்கோயில்கள் தமிழகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
 கும்பகோணத்திற்கருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள பட்டீஸ்வரத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சோழர்களின் குலதெய்வமாக விளங்கிய ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி குடிகொண்டுள்ள சிறப்பான ஆலயம் அமைந்துள்ள இடம் பட்டீஸ்வரம். இதன் அருகில் சுமார் 500 மீ. தொலைவில் திருமலைராஜன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்.
 கும்பகோணத்தைச் சேர்ந்த சைவ சமய ஆர்வலர் வைரவேலு மணிமொழி, இத்திருக்கோயிலைப் பற்றி பல செய்திகளைத் தெரிவித்தார். சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சிவாலயம், எட்டாம் நூற்றாண்டினை சேர்ந்ததாக அறியப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழனின் மனைவி அழிசி காட்டடிகள் வணங்கி போற்றி கொடையளித்த திருக்கோயில் எனக் கூறப்படுகிறது!
 ஒருசமயம், சோழ மன்னர்கள் தங்கள் பழம் பெருமையை இழந்து சிற்றரசர்களாக இருந்து வந்தனர். அந்த நிலையைப் போக்கி மீண்டும் சோழர்களின் பெருமையை நிலைநாட்டியவன் விஜயாலய சோழன். அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த ஆதித்த சோழனும் பெருமையுடன் விளங்கினான். அவன் இத்திருக்கோயிலை வழிபட்டு இறையருள் பெற்றான். இத்திருக்கோயிலுக்கு விளக்கேற்ற கொடை வழங்கிய கல்வெட்டுகள் இந்த கோயிலில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் இருந்ததற்கான அமைப்பைக் காண முடிகிறது.
 இடிந்த நிலையில் உள்ள இரு சுவர்களைக் கடந்து உள்ளே சென்றால் பெரிய முகப்பு மண்டபத்தைக் காணலாம். தொடர்ந்து சென்றால் கருவறையில் பெரிய அகன்ற நான்கிற்கு நான்கு என சதுரமான ஆவுடையுடன் பிரம்மநந்தீஸ்வரர் நம்மை ஆட்கொள்கிறார். இந்தப் பகுதியில் காணப்படும் திருக்கோயில்களிலேயே பெரிய வடிவில் உள்ள இந்த லிங்கம் நம் மனதைக் கொள்ளை கொள்கிறது. வழுவழுப்பான பாணப்பகுதி நம்மை பிரமிக்க வைக்கிறது. பிரம்மன் பூசித்த பெருமையுடையது இத் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகள் உள்ள விமானம் அதற்கு அழகு சேர்க்கிறது.
 தென் முகம் நோக்கி காட்சியளிக்கும் அம்பிகை பிரம்மாம்பிகை என்ற திருப்பெயருடன் விளங்குகிறார். கோயிலைச் சுற்றி கோஷ்டத்தில் நாகக்கன்னி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழைமை கெடாமல் இருக்கின்றன. நாகக்கன்னி பூசித்து பேறுபெற்ற தலமாக விளங்கும் இத்திருக்கோயிலின், கருவறை கோட்டத்து மாடத்தில் நாகக்கன்னி இயல்பாக அமர்ந்திருக்கும் கோலம் இத்திருக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கிறது. நாகதோஷமுடையோர் இத்திருக்கோயிலில் நாகக்கன்னியை வணங்கி தங்கள் தோஷம் நீங்கப் பெறலாம்.
 திருப்பணியை எதிர் நோக்கியிருக்கும் இந்த ஆலயத்தின் வளர்ச்சியில் பக்தர்கள் பங்கு கொண்டு வளமான வாழ்வைப் பெறலாம்! இந்து சமய அறநிலையத்துறையின் மேற்பார்வையிலும் தொல்பொருள் துறையின் கட்டுப்பட்டிலும் உள்ள இந்த திருக்கோயிலில் பக்தர்களின் உதவியாலும் ஒத்துழைப்பாலும் பூஜைகள் நடந்து வருகின்றன. விரைவில் திருப்பணிகள் நடைபெற்று இத்திருக்கோயில் தன் பழம் பெருமையைப் பெற இத்தல பிரம்மநந்தீஸ்வரரை பணிவோம்.
 இக்கோயிலுக்கு செல்ல, பட்டீஸ்வரம் பெரிய கோயில் வடக்கு வீதியில் இவ்வாலயத்தின் பெயரைத் தாங்கிய ஒரு இரும்பு வளைவை இடது புறம் காணலாம். அந்த வளைவின் வழியே சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம்.
 - என். பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com