தாயினும் தயாளர் இயேசு
By DIN | Published On : 04th January 2019 10:00 AM | Last Updated : 04th January 2019 10:00 AM | அ+அ அ- |

ஏழை தாய் தன் ஒரே மகனை மிகவும் பாசத்துடன் செல்லமாகவும் வளர்த்தார். தம் கணவர் இறக்கும்போது அவர் கர்ப்பிணி. பிறந்த பிள்ளை தன் தகப்பன் முகத்தை பார்த்தது இல்லை. எனவே, தன் மகனை மிகவும் பரிவுடன் நல்ல உணவு, உடை, கல்வி தந்து வளர்த்தார். ஆனால் அப்பிள்ளை தாயை மதிக்காமல் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய வழியில் நடந்தான். துன்மார்க்க ஜீவியம் அவனுடையதாயிற்று.
அவ்வூரில் திருட்டு, கொள்ளை, கொலை செய்யும் தீய கூட்டம் ஒன்று இருந்தது. அக்கூட்டத்துடன் இணைந்து கொள்ள விரும்பினான். அவர்களுடன் வழிப்பறி, குடித்தல் போன்ற தீய வழியில் மகிழ்வாய் இருப்பதை விரும்பினான்.
தீய கூட்ட தலைவனை சந்தித்து தானும் அக்கூட்டத்தோடு இணைந்து கொள்ள அனுமதி கேட்டான். அந்த தீய கூட்ட தலைவன் தான் சொல்லும் ஒரு கொடுமையான செயலைச் செய்தால், தன் கூட்டத்தில் இணைந்துக்கொள்ளலாம் என்றான். தான் எப்படிப்பட்ட கொடுஞ்செயலையும் செய்யத் தயார் என்றான். அந்த தீய தலைவன், இவனுக்கு தாய் மட்டும் இருப்பதை அறிந்திருந்தான். "நீ போய் உன் தாயைக் கொன்று அவள் நெஞ்சை வெட்டி அவளின் இருதயத்தைக் கொண்டு வா. எங்களோடு இணைந்துக்கொள்ளலாம்'' என்றான். தன் தாயை விட அத்தீயக் கூட்டம் பெரிதாக தோன்றியதால் தாமதிக்காமல் நிறைவேற்றம் செய்தான்.இருதயத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். தாயின் இருதயமோ இன்னும் துடித்துக் கொண்டிருந்தது.
ஓடும் போது தடுக்கி விழுந்து விட்டான். அப்போது பரிவான குரல் ஒன்று, "மகனே, பார்த்துப்போக கூடாதா?'' எனக் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தபோது யாரும் இல்லை. யார் பேசியது எனப் பார்த்தபோது துடித்துக் கொண்டிருக்கும் தாயின் இருதயம் பேசுவதைக் கேட்டான். தன்னை கொன்ற போதும் இருதயத்தை பிய்த்தப் போதும் வருந்தாத தாயின் இருதயம், செல்ல மகன் தடுக்கி விழுந்தபோது, "மகனே பார்த்துப் போகக் கூடாதா?' என்கிற அன்பின் குரல் தாயினுடையது.
ஆண்டவராகிய இயேசுவும் ஒரு தாயைப் போன்று அன்புள்ளவர். அவரின் அன்பு, பரிவு, பாசம், நோய் நீக்கல், சுகமாக்குதல், பசிபோக்கல், ஊனமுற்றவரை குணமாக்குதல், "எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு' என்று சொல்லி தொழுநோயாளியை தொட்டு குணமாக்குதல்; தீட்டுள்ள பன்னிரண்டு ஆண்டுகள் ரத்தப்போக்கால் வேதனை அடைந்தவள் இயேசுவின் ஆடையை தொட்டு குணமடைந்தாள். அவளைப் பார்த்து இயேசு, " மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்து நீ சமாதானத்தோடே போய் உன்வேதனை நீங்கி சுகமாயிரு'' என்றார். (மாற்கு 5: 34) மேலும் மூன்று நாள்கள் இயேசுவுடன் இருந்த ஜனங்கள் தங்கள் வீடு திரும்பும்போது பசியாக இருக்கும் அவர்களுக்காக பரிதபித்து சிறுவனிடமிருந்து ஐந்து அப்பங்களையும் இரண்டு வறுத்த மீன்களையும் வாங்கி இருபதாயிரம் பேர்களுக்கு உணவு கொடுத்து திருப்தியாய் சாப்பிட்டு மீதம் பன்னிரண்டு கூடை துணிக்கை எடுத்தார். (யோவான் 6:9)
இயேசு தாயினும் தயவுள்ளவர். மனிதர்மேல் அவர்வைத்திருந்த பாசம், அன்பு பெரியது. நமக்காக கண்ணீர் விடும் ஆண்டவர் அவர். நாமும் அவரில் அன்பு வைத்தால் நம்மையும் தன் பிள்ளையாக ஏற்று தாயின் பரிவைத் தருவார்.
- தே. பால் பிரேம்குமார்