தீயதை ஓட்டும் தீர்த்தக்கரை ஆஞ்சநேயர்!
By DIN | Published On : 04th January 2019 10:00 AM | Last Updated : 04th January 2019 10:00 AM | அ+அ அ- |

குளக்கரையில் விநாயகரைப் பார்த்ததுண்டு, ஆஞ்சநேயரைப் பார்த்ததுண்டா? நாகூரில் பெருமாள் கோயில் குளக்கரையில் இருந்து அருள்செய்கிறார் இந்த ராமாயண காலத்து ஆஞ்சநேயர்.
ராமாயண காலத்தில் சீதையைத் தேடி அனுமன் பறந்தபோது தாக சாந்தி செய்து கொள்ள நினைத்தான். பறந்து கொண்டிருக்கும் போதே கீழே ஒரு சோலையும் அதனில் தன் உருவை பிரதிபலிக்கும் வகையில் குளிர்ந்த தெளிவான நீர் நிலை ஒன்றும் தட்டுப்பட்டது. அவனுக்கு சீதாதேவியைக் கண்டுபிடிப்பதே நோக்கமாக இருந்ததால் மெய் வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கண் துஞ்சாமல் தேடும் பணியில் ஈடுபட்டான்.
வழியில் அவனது பயணத்தை தடுத்து நிறுத்த நினைத்த சுரயையின் வாயைப் பிளந்து அழித்தான். அவனை நுழைய விடாமல் தடுத்த , இலங்கையின் காவல் தேவதை இலங்கினியை கையால் அறைந்து வீழ்த்தினான். இலங்கையை அடைந்தான். சீதையைக் கண்டான். தகவலை சொன்னான். அசோக வனத்தை அழித்தான். ராவணனின் பஞ்ச சேனாதிபதிகள் அட்சய குமாரன் ஆகியோரை மாய்த்தான். தாவிப்பறக்க எண்ணிய போது தடுத்தவர்களை விரட்டி இலங்கையைத் தீக்கிரையாக்கினான். நெருப்பின் வேகமும் கரும் புகையும் அவன் உடலில் பட்டுநிறம் மங்கி உடலில் துர்வாசனை உண்டாகியது. தான் ராமனைப் பார்ப்பதற்கு முன்பாக தூசியும் அழக்குமாக இருந்த தன் உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டு சென்று தரிசிக்க விரும்பினான். வரும்வழியில் கண்ணில் பட்ட சோலையும் வாவியும் மனத்தில் தெரிய அங்கு தாவினான்.
சோலையில் இறங்கிய உடன், எங்கிருந்தோ இரு நாகங்கள் ஒத்த உருவுடன் அனுமனைக் கட்டிச் சுருட்டிக் கொண்டன. அனுமனோ "ஜெய் ஸ்ரீராம்' எனச் சொல்லி அவற்றை விலக்கி இரு கரங்களிலும் பிடித்து சுற்றி அடிக்க அவை வலி தாங்காமல் கதறின. தாங்கள் நாகநாதர் உத்தரவுப்படி இந்தபெருமாள் கோயில் பகுதியைக் காவல் காத்து வருவதாகவும் தங்களை விட்டு விடுமாறும் கெஞ்சின. சிவபெருமான் உத்தரவுப்படி பெருமாள் எழுந்தருளியுள்ள பகுதியைக் காவல் செய்வதால் அவைகளை விட்டுவிட்டான். அவைகள் ராகுவும் கேதுவுமாக தங்கள் சுய உருவில் வந்து அனுமனை வணங்கி விடைபெற்றன.
அங்கிருந்து கிளம்பிச் சென்று ராமனைக் கண்டு தகவலைச் சொன்னான். அவனது வீரபிரதாபங்களை அறிந்த நாகூர் என இன்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் வேண்டியபடி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் என்ற பெயரோடு ஸ்ரீராம பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில் சிலா வடிவில்குடி கொண்டான்.
வலது கரத்தைத் தூக்கி அஞ்சேல் என அருளும் வண்ணமும் இடது கையை துடையில் ஊன்றியவாறும் வாலை உயர்த்தி தலைக்குமேல் கொண்டும் வலது பாதம் பின்னிருக்க, இடது பாதத்தை முன் வைத்து பக்தனுக்கு அருள ஓடோடி வரும் வகையில் அருள்தருகிறார்.
நாகூரில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் குளத்தில் சென்று குளித்து விட்டு வேண்டிக் கொண்டு மட்டைத் தேங்காய் வைத்து வழிபாடு செய்து வரும் பக்தர்கள் பலன் பெற்று மீண்டும் சென்று தரிசனம் செய்து அர்ச்சனை செய்து வரும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில், நாகூர் பெருமாள் கோயிலுக்கு இடப்புறம் குளக்கரையில் அமைந்துள்ளது.
சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் முக்கிய தினங்களாக உள்ளன. அனுமத் ஜெயந்தி வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 -ஆம் தேதி அனுமத் ஜெயந்தி வருகிறது. அன்று சிறப்பு தினமாகையால் காலை 9 மணிக்கு சிறப்புத் திருமஞ்சனமும்; 4 மணிக்கு சந்நிதி முழுக்க புஷ்ப அலங்காரமும்; மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும்; 1108 வடைகள் மாலை சார்த்தப்படவும் உள்ளது. மாலை 6.00 மணிக்கு திருவீதிப்புறப்பாடு உற்சவமும் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 96775 09835.
- அ. சம்பத்குமார்