குருமங்கள யோகம்!
By DIN | Published On : 04th January 2019 10:00 AM | Last Updated : 04th January 2019 10:00 AM | அ+அ அ- |

குருபகவான் தனகாரகர், பூர்வபுண்ணிய காரகர், பாக்கிய காரகத்தில் விதியில் பாதி இவருக்குண்டு. ஜீவன காரகத்துவத்தில் நான்கில் ஒரு பங்கு இவருக்குண்டு. இவர் லாப காரகரும் கூட. அதனால் பன்னிரண்டு வீடுகளில் ஐந்து வீடுகளின் காரகத்துவத்தில் இவர் சம்பந்தப்படுகிறார்.
செவ்வாய்பகவான் தைரியம், சகோதரம் பூமிகாரகராகிய மூன்றாமிடத்து காரகத்துவத்தினையும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தான காரகத்துவத்தினையும் சனிபகவானுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பெறுகிறார். அதனால் பன்னிரண்டு வீடுகளில் இரண்டு வீடுகளின் காரகத்துவத்தில் இவர் சம்பந்தப்படுகிறார்.
ஆக, மொத்தம் தனம், ஜீவனம், லாபம், தைரியம், ருணம், ரோகம், சத்ரு ஆகிய மனித வாழ்வின் முக்கியமான விஷயங்களில் குரு, செவ்வாய் பகவான்களின் ஆதிக்கம் உள்ளது. எனவே, செவ்வாய்பகவான் நிற்கும் இடத்திலிருந்து கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10) குருபகவான் நிற்பதை குருமங்கள யோகமெனும் பிரபல யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகமுடையவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சொத்துகள் சேரும். உயர் பதவிகள் தேடி வரும். பெயர், புகழ் அதிகரிக்கும். இது இவர்கள் இருவரும் கெடாமல் நின்றால் மட்டுமே ஏற்பட முடியும் என்றும் கூறவேண்டும். சூரியபகவானுக்கு மேஷம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய எட்டு வீடுகள் நல்ல வீடுகளாகும். செவ்வாய்பகவானுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய எட்டு வீடுகள் நல்ல வீடுகளாகும்.
குரு, செவ்வாய் பகவான்கள் இருவருக்குமே மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ஆறு வீடுகள் நல்ல வீடுகளாகும். இந்த வீடுகளில் குரு, செவ்வாய் பகவான்கள் இணைந்து நின்று உருவாகும் குருமங்கள யோகம் உயர்வான பலன்களைத் தரும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...