கூடி தொழுதால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் பழமொழி கூடி வாழ்வதால் ஏற்படும் எண்ணற்ற பயன்களை ஏற்றத்தை உயர் மாற்றத்தை உன்னதமான நன்னய நாகரிக வாழ்வைச் சுட்டுகிறது.
கூடி தொழுதால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் பழமொழி கூடி வாழ்வதால் ஏற்படும் எண்ணற்ற பயன்களை ஏற்றத்தை உயர் மாற்றத்தை உன்னதமான நன்னய நாகரிக வாழ்வைச் சுட்டுகிறது. இதற்கு எடுத்துக் காட்டு வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய ஒருமைப்பாடே. கூடி வாழும் அரிய வாழ்வை உரியதாக்கிக்கொள்ள ஓடியாடும் வளரும் பருவத்திலேயே குழந்தைகளைக் கூடி விளையாட பழக்கப்படுத்துகிறோம். அப்பழக்கம் வழக்கமாகி வளர்ந்த பின்னும் கூடி குதூகலமாய் வாழ வழி வகுக்கிறது. இஸ்லாத்தில் இறைவணக்கத்தின் முதல்படியான தொழுகையை தனித்து தனித்தனியே தொழுவதைவிட ஒன்று சேர்ந்து ஜமாஅத்தாக கூடி தொழுவதில் கூடுதல் நன்மைகள் உள்ளதை உரைத்த உத்தம நபி (ஸல்) அவர்கள் கூடி தொழுது வழிகாட்டினார்கள்.
 நோயாளிகளும் இருவரின் தோள்களில் கைபோட்டு பள்ளிக்கு நடந்து வந்து கூடி தொழுததைக் கூறுகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத். மூவர் இருந்தால் மூவரில் குர்ஆனை நன்றாக ஓத தெரிந்த ஒருவர் தொழுகையை இமாமாக நின்று நடத்தவும் மற்றிருவர் கூடி தொழவும் தோழமை நபி (ஸல்) அவர்கள் கூரியதை அறிவிக்கிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- அபூதாவூத். குர்ஆனை நன்கு ஓதும் உமர் இப்னு ஸல்மா ஏழு வயதிலேயே அவருடன் பயிலுவோருக்கு இமாமாக இருந்து தொழுகை நடத்தியதை நவில்கிறார். நூல்- புகாரி, அபூதாவூத், நஸஈ. பாச நபி (ஸல்) அவர்கள் பார்வையற்ற இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததை நினைவு கூர்கிறார் அனஸ் (ரலி) நூல்- அபூதாவூத். தொழுகையில் குர்ஆன் ஓதப்படும்பொழுது பின் நின்று தொழுவோர் இமாம் ஓதுவதைத் திருப்பி ஓதாமல் அமைதியாக செவியுற வேண்டும் என்று 7-204 ஆவது வசனம் வரையறுப்பதாக இமாம் அபூஹனீபா (ரஹ்) கூறுகிறார். கூடி தொழும் பொழுது முன்பின்னாக கோணலாக நிற்காது வரிசையில் சரியாக நிற்குமாறு நீதர் நபி (ஸல்) அவர்கள் நினைவுறுத்தியதை அறிவிக்கிறார் அபூமஸ்வூத் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், நஸஈ. இன்றும் இமாமாக நின்று தொழுகையை நடத்துபவர் வல, இட புறங்களில் திரும்பி நேராகவும் நெருக்கமாகவும் நின்றிடுக. அல்லாஹ் அருள்புரிவான் என்று அறிவித்த பிறகே தொழ துவங்குவார். நேராக நெருக்கமாக நிற்பது ஏற்ற தாழ்வில்லாத சமத்துவத்தை ஏற்படுத்தும்.
 பெருமானார் நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கம் நின்ற பொழுது தலைமுடியைப் பிடித்து வலப்பக்கம் நிற்க வைத்ததை நினைவு படுத்துகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி. முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ. உங்கள் வரிசையை ஒழுங்குபடுத்தித் தொழுவது தொழுகையை முழுமையாக்கும் என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முத்து மொழியை அனஸ் (ரலி) அறிவிப்பதும் ஒழுங்கற்று வரிசையில் நின்று தொழுவது உங்களிடையே வேற்றுமையை உண்டு பண்ணும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை நுஃவுன் இப்னு பசீர் இயம்பியதும் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, நூல்களில் பதிவாகி உள்ளன. கூடி தொழும் தொழுகையில் முதல் வரிசையின் முக்கியத்துவத்தை உணர்வோர் முதல் வரிசைக்கு முந்துவர் என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முத்துமொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். கூடி தொழும் பொழுது தொழுகையை நடத்தும் இமாமை எந்த நிலையிலும் முந்தாது இமாமைப் பின் தொடர்ந்து தொழுவது என்ற சீல நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பை அமல்படுத்தியதை அபூஹுரைரா (ரலி) பராஃ (ரலி) பகர்வதைப் புகாரி, முஸ்லிம், அபூதாவூத் நூல்களில் காணலாம்.
 கல்வத் தாத்துர்ரிகா என்ற போரில் நபி (ஸல்) அவர்கள் நண்பகல் லுஹர் தொழுகையை இமாமாக நின்று தொழுவித்தார்கள். தொழுவதைப் பார்த்த இஸ்லாமிய எதிரிகள் தொழுபவர்களை வெட்டாது விட்டு விட்டு திரும்பினர். எதிரி முகாமிலிருந்த மற்றவர்கள் வெட்டாது திரும்பியவர்களைத் திட்டினர். மாலை தொழுகையாம் அசர் தொழும்பொழுது தொழுபவர்கள் அத்தனை பேரையும் மொத்தமாக வெட்டி வீழ்த்திட வேண்டும் என்று ஆளுரைத்து வாளுடன் காத்திருந்தனர். அப்பொழுது அருமறை குர்ஆனின் 4-102 ஆவது வசனம் அருளப்பட்டது. போரில் ஒவ்வொரு வேளையிலும் பாதி வீரர்கள் கூட்டாக தொழுவும் மீதி வீரர்கள் ஆயுதங்களோடு காவல் புரியவும். முதல் பாதி வீரர்கள் தொழுது முடித்தபின் தொழுது முடித்தவர்கள் காவல் பணியை மேற்கொள்ளவும். காவல் பணி புரிந்தவர் கவலையின்றி கவனமாக கூடி தொழவும் அருளப்பட்ட அந்த வசனம் அறிவித்தது.
 தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கு ஒலிப்பவரிடம் ஒரு பயணத்தில் செல்லும்பொழுது செம்மல் நபி (ஸல்) அவர்கள் அதிக குளிரும் மழையும் உள்ள இரவு காலங்களில் உங்கள் இருப்பிடங்களில் தொழுது கொள்ளுமாறு அறிவிக்க அறிவுறுத்தி இயம்புகிறார் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸஈ.
 தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கு ஒலியைக் கேட்டவர் நோயுற்று இருந்தால் எதிரிகளின் அபாயம் ஆபத்துகளுக்கு அஞ்சும் நிலை நிலவினால் அவரின் இருப்பிடத்தில் தொழலாம். இத்தகைய இடையூறு ஏதுமின்றி பள்ளிக்கு வந்து கூடி தொழுவதைத் தவிர்ப்பவரின் தொழுகை இறையருளால் ஏற்கப்படாது என்று எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் நவின்றதை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் அபூதாவூத். பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று தனித்து தொழுது ஜமாஅத்தோடு கூடி தொழுவதை விட்டு விலகியவரும் வெள்ளிக்கிழமை வார ஜும் ஆ கூட்டு தொழுகையை புறக்கணித்தவரும் நகர வாசிகளில் உள்ளவர் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- திர்மிதீ.
 ஒருவர் அவரின் வீட்டில் இருந்தோ வணிகம் புரியும் இடத்திலிருந்தோ அலுவலகத்தில் இருந்தோ தொழுகைக்காக உளு என்னும் உடல் உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்தி மசூதிக்குத் தொழ புறப்பட்டால் அவரின் ஒரே இலக்கு இறைவனைத் தொழுவதாக உள்ளது. அவர் ஓரடி எடுத்து வைத்து நடக்கும் பொழுது அவரின் நன்மையில் ஒரு பதவி உயர்த்தப்படுகிறது. அவரின் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழும் பள்ளியில் இருக்கும் வரை அவருக்கு அருளைப் பொழியுமாறு அல்லாஹ்விடம் வானவர்கள் இறைஞ்சுவர் என்று இறுதி தூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ. தனியாக தொழுவதைவிட ஜமாத்துடன் மசூதியில் கூடித் தொழுவது இருபத்தேழு மடங்கு தகுதியால் சிறப்புற்றது என்று சீல நபி (ஸல்) அவர்கள் செப்பியதை இயம்புகிறார் இப்னு உமர் (ரலி). எவர் முன்னிரவு இஷா தொழுகையை ஜமாஅத்துடன் கூடி தொழுதாரோ அவர் பாதி இரவு நின்று தொழுதவர் போன்றவர். அவரே வைகறை சுபுஹு தொழுகையையும் ஜமா அத்தோடு கூடி தொழுதால் முழு இரவும் நின்று தொழுதவர் போன்றவர் என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை உரைக்கிறார் உஸ்மான் (ரலி) நூல் }முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.
 கூடி ஜமர் அத்தாக தொழுது கூடுதலாக கோடி கோடியாய் நன்மைகளைப் பெற்று மக்களோடு நல்லிணக்கம் பேணி நாட்டிற்கு நற்பணி புரிவோம்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com