வாட்டம் போக்கும் வாட்போக்கி மலை!

திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் செல்லும் வழி காவிரி ஆற்றின் கரையிலே செல்வதால், காவிரியின் இருமருங்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்லலாம்.
வாட்டம் போக்கும் வாட்போக்கி மலை!

திருச்சிராப்பள்ளியிலிருந்து கரூர் செல்லும் வழி காவிரி ஆற்றின் கரையிலே செல்வதால், காவிரியின் இருமருங்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே செல்லலாம். இவ்வழியில் திருச்சியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் குளித்தலை எனும் தலம் அமைந்துள்ளது. குளித்தலையின் அருகே ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரண்டு தலங்கள் உள்ளன.
 குளித்தலை, அய்யர்மலை எனப்படும் சிவாய மலை, திருஈங்கோய்மலை ஆகிய அம்மூன்று தலங்களும் சிறப்பானவை. மூன்று தலங்களையும் இணைத்து "காலைக் கடம்பர்', "மத்தியானச் சொக்கர்', "அந்தி ஈங்கோய்நாதர்' என்பது வழக்கில் இருந்து வருகிறது. ஒரே நாளில் இம்மூன்று தலங்களையும் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது என்றும், மேலும் வாழ்க்கையில் நினத்தது நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
 அய்யர்மலை: குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் இம் மலைக்கோயில் அமைந்துள்ளது. அய்யர்மலை, வாட்போக்கி, சிவாயமலை, ரத்தினகிரி, மணிகிரி, சிவதைபுரி, ரத்தினவெற்பு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அப்பர் பெருமான் "கின்னரங் கேட்கும் வாட்போக்கி', ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி' என்றெல்லாம் போற்றுகிறார். பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் இது முதலாவது தலமாகும். மலைப்படிகளின் அமைப்பும் பிரகாரங்களின் அமைப்பும் "ஓம்' எனும் பிரணவம் போன்றிருத்தலால் "சிவாய மலை' என்று பெயர் பெற்றது. 1178 அடி உயரமுள்ள இம்மலையில் 1017 படிகள் உள்ளன.
 21 மண்டபங்கள்: மலைக்கு செல்லும் முன் அடிவாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. முகப்பில் விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். இம் மண்டபத்தில் சக்தி வாய்ந்த வைரப்பெருமாள், கருப்பண்ணசாமி, கோடங்கி நாயக்கன், தண்டபாணி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இவர்களை வழிபட்டு மலைமேல் செல்வோம். மலைக்குச் செல்வோம். மலைக்கு செல்லும் பாதையில் 21 மண்டபங்கள் உள்ளன. ஆகவே, ஆங்காங்கே இளைப்பாறி சுற்றுப்புற அழகை ரசித்துக் கொண்டே செல்லலாம்.
 பொன்னிடும் பாறை: முதலில் காண்பது சகுனக் குன்று என்ற பாறை. உருண்டையான அப்பாறை எப்பொழுது கீழே விழும் என்ற நிலையில் அப்படியே உள்ளது. இதன் அருகில் உள்ள கம்பத்தடியில் பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்க கயிறு கட்டி வழிபடுகின்றனர். இதற்கும் சற்று மேலே "பொன்னிடும் பாறை' உள்ளது. இதற்கு அடுத்து 18-ஆம் படி உள்ளது. இதில் பொய் சத்தியம் செய்யாமல் உண்மையே பேசுவார்கள் என நம்பி மக்கள் தங்களிடையே ஏற்படும் வழக்குகளை இங்கே தீர்த்துக் கொள்கின்றனர். அழகிய வேலைப்பாட்டுடன் காணப்படும் இப்படிகளைப் புனிதமாகக் கருதுகின்றனர்.
 கன்னிமார் பாறை: தொடர்ந்து லட்சதீப மண்டபம், ஏகாலியர் மண்டபம், காக்கை மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய மண்டபங்கள் உள்ளன. மலையில் பாதி தூரம் வந்துவிட்டோம். இங்கு செங்குத்தான பாறைகள் இரண்டு உள்ளன. "கன்னிமார் பாறை' என அழைக்கின்றனர். இதன் நடுவே சப்த கன்னியர், காளி, விநாயகர் ஆகியோர் வழிபடப்பெறுகின்றனர். அதற்கு மேலே உகந்தான்படி விநாயகர் சந்நிதி உள்ளது.
 சுரும்பார் குழலி: விநாயகரை வழிபட்டுச் சென்றவுடன் முதலில் நாம் காண்பது சோழபுரீசர் கோயில். அதற்குப் பின்னால் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் "சுரும்பார் குழலி' (வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள்) என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். இத்தலத்தின் தலவிருட்சம் வேம்பு இங்கு உள்ளது.
 ராஜ லிங்கர்: அம்மனை வழிபட்டுவிட்டு, சற்று மேலே சென்றால் இறைவனின் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கி இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இறைவன் ரத்தினகிரிநாதர், வாடபோக்கி நாதர், ராஜலிங்கர், முடித்தழும்பர், மணிக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்றெல்லாம் பல பெயர்களால் அழைத்துப் போற்றப்படுகின்றார்.
 சித்திரை மாதத்தில் பெளர்ணமி நாள் அன்று சூரிய ஒளி சுவாமி மீது பட்டு சூரிய வழிபாடு நடைபெறும் அற்புதக்காட்சியைக் கண்டு வழிபடலாம்.
 பைரவர்: கருவறையின் தேவ கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, ஆரிய தேசத்து மன்னர், துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகிய உருவங்களைக் காணலாம். சந்நிதிகளுக்குள் நுழையும் இடத்தில் வைரப்பெருமாள் குடி கொண்டுள்ளார். காக்கும் சக்தி வாய்ந்த இவரை, மக்கள் வழிபட்டு நலமடைகின்றனர்.
 காவிரித் தீர்த்தம்: இக்கோயிலில் தனிச்சிறப்பு உண்டு. இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் காவிரி ஆறு ஓடுகிறது. நாள்தோறும் 8 கி.மீ. தூரத்திலிருந்து காவிரி ஆற்று நீரைத் தலையில் சுமந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். ஆரிய தேசத்து மன்னர் இத்தலத்தில் இறைவனுக்காக நீரைக் கொண்டுவந்து தொட்டியில் நிரப்பினார். தொட்டி நிரம்பாமல் போகவே, வாளை எடுத்து இறைவனை வெட்ட முயல, வாளைப் போக்கி மாணிக்கத்தைக் (இறைவனை) காட்ட இறைவனுக்கு சிவத் தொண்டு செய்து பேறு பெற்றான்.
 அவனது பரம்பரையினர் இன்றும் நீரைக் குடத்தில் எடுத்து வருகின்றனர். நாள்தோறும் குறைந்தது 12 குடங்களாவது எடுத்து வரப்படுகிறது. தீர்த்தப்பிரியர் எனப்படும் சிவபெருமானுக்கு இவ்வாறு நாள்தோறும் 8 கி.மீ. தொலைவிலிருந்து காவிரி ஆற்று நீர் எடுத்து வரப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும்.
 இலக்கியச் சிறப்பு: இக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை சோமவாரம், சித்திரை மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பானவை. திருநாவுக்கரசர் தேவாரம், அருணகிரிநாதர் திருப்புகழ், திருவாட்போக்கி புராணம், வாட்போக்கி கலம்பகம், இரத்தினகிரி உலா போன்ற இலக்கியங்கள் இத்தலத்தின் புகழை எடுத்துக் கூறுகின்றன.
 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் இத்தலத்து இறைவனை "பாஹிமாம் ரத்னாசலநாயகா" என்று போற்றி முகாரி ராகத்தில் ஒரு கீர்த்தனையை இயற்றியுள்ளது மேலும் சிறப்பாகும்.
 கல்வெட்டுகள்: சோழ, பாண்டிய, போசள, விஜயநகர மன்னர்களின் 50-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. திருமாணிக்க மலை உடையார், திருவாட் போக்கி மலை மகாதேவர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதையும், 1000 ஆண்டுகளாக சிறப்பாகப் போற்றப்பட்டு வந்ததையும் அறிகிறோம்.
 சிவாயம்: அய்யர் மலை அருகே "சிவாயம்' என்ற தலமும் உள்ளது. "சிவபாத சேகர மங்கலம்' எனக் கல்வெட்டுகள் இவ்வூரை அழைக்கின்றன. கோபுரவாயில் கதவுகளில் ராமாயணக்கதை தொடர் சிற்பமாக செதுக்கப்பட்டு அமைந்துள்ளது, கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
 குளித்தலை, அய்யர் மலை, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களும் வழிபாட்டுச் சிறப்பு, வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச்சிறப்பு வாய்ந்த திருத்தலங்களாகும். மூர்த்தி - தலம் - தீர்த்தம் என்ற மூன்றினாலும் சிறப்புப் பெற்றவை. அய்யர்மலை சிவ தத்துவமாகவும், குளித்தலை கந்தர் வடிவமாகவும், ஈங்கோய் மலை சக்தி தத்துவமாகவும், மூன்றும் இணைந்து "சோமாஸ்கந்தர்' வடிவமாக விளங்குகின்றன.
 தேவாரப்பாடல் பெற்றத் தலங்களில் காவிரியின் தென்கரையில் முதல் தலமாகவும் விளங்கும் சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது. "ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை பாடியேத்த நம் வாட்டம் தவிருமே' என நாவுக்கரசர் போற்றுகின்றார். சுரும்பார் குழலி சமேத இரத்தினகிரீசுவரரை வழிபட்டு நாமும் நலம் அடைவோம்!
 - கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com