திருக்கடவூர் சங்காபிஷேகச் சிறப்பு!

தருமையாதீனத்திற்கு உட்பட்ட திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில், அட்ட வீராட்டங்களுள் மார்க்கண்டேயருக்காக காலனை சம்ஹாரம் செய்த தலம்.
திருக்கடவூர் சங்காபிஷேகச் சிறப்பு!

தருமையாதீனத்திற்கு உட்பட்ட திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில், அட்ட வீராட்டங்களுள் மார்க்கண்டேயருக்காக காலனை சம்ஹாரம் செய்த தலம். அறுபத்து மூவரில் ஒருவரான குங்கலியக்கலய நாயனார் அவதரித்த தலம். அபிராமிபட்டர் அன்னை அபிராமியை வழிபட்டு அருள்பெற்ற தலம். இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் சோமவாரம் தோறும் நடைபெறும் சங்காபிஷேகம் மிகச் சிறப்புடையது.
 திருக்கடவூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள கடவூர் மயானத்தில் மார்க்கண்டேயருக்காக ஏற்பட்ட அசுவதி தீர்த்தம் அல்லது மார்க்கண்டேய தீர்த்தத்திலிருந்து நாள்தோறும் அமிர்தகடேசுவரர் திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். (இன்றும் அவ்வாறே நடைபெறுகின்றது) வேறு எந்த ஆலயத்திற்கும் அந்த நீரை உபயோகிப்பதில்லை. இப்படியிருக்க, ஒரு முறை சரபோஜி மன்னன் கடவூர் மயானத்தில் வழிபாடு செய்த பொழுது அத்தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகம் செய்யக் கட்டளையிட்டான்.
 சிவாச்சாரியார் மன்னன் கட்டளை மீற இயலாது, அசுவதி தீர்த்த நீரைப் பிரம்மபுரீசுவரருக்கு அபிஷேகம் செய்தார். இதனால் பிரம்மபுரீசுவரர் லிங்கத் திருமேனியில் விரிசல் கண்டது. மன்னனுக்கும் மாகோதரம் எனப்படும் மேக நோய் ஏற்பட்டதால் அவதியுற்றான். மன்னர் மிகவும் மனக்கவலையுடன் தனக்கு ஏற்பட்ட நோய் தீர இறைவனை வேண்டி வழிபட்டான். ஒரு நாள் அவ்வாறு வழிபடுகையில், இறைவாக்கு அசரீரியாக எழுந்தது.
 வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள 360 வகையான மூலிகை, பழங்களைக் கொண்டு சங்கினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே அந்த வாக்கு. அதன்படி மன்னர் அமிர்தகடேசுவரருக்கு கார்த்திகை சோமவாரத்தில் 1008 சங்குகளைக் கொண்டு அபிஷேகம் செய்வித்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.
 அது முதலாக சங்காபிஷேகம் இத்திருத்தலத்தில் நடைபெற்று வருகின்றது. இத்தீர்த்தம் எவ்வளவு நாள்கள் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதில்லை கங்கை போலத் தூய்மையாக இருக்கிறது. சிறந்த ஒளஷதமாகும். இதனை உட்கொள்வோர் உடல்நோய், உள்நோய் நீங்கி நற்பயன் பெறுகின்றனர்.
 திருக்கடவூர் சென்று வழிபட இயலாதவர்களுக்காக, சென்னைவாழ் மக்கள் நற்பயன் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தருமையாதீன ஸ்ரீலஸ்ரீகுரு மகாசன்னிதானம் செய்த ஏற்பாட்டின் படி, இந்த புனித சங்காபிஷேக நீர் திருக்கடவூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17 செவ்வாய்கிழமைகளில் மாலை நேரத்தில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 தொடர்புக்கு: 94448 87769 / 044-28142642.
 - உமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com