பொருநை போற்றுதும்! - 88

இவளைப் பற்றிய புராணக் கதை, அம்பாளின் அருளையும் அரவணைப்பையும் ஆழமாக விளக்குகிறது. 
பொருநை போற்றுதும்! - 88
Updated on
2 min read

இவளைப் பற்றிய புராணக் கதை, அம்பாளின் அருளையும் அரவணைப்பையும் ஆழமாக விளக்குகிறது. 

இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்தார் செல்வந்தர் ஒருவர் (மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகர் என்கிறார் எழுத்தாளர்  முத்தாலங்குறிச்சி திரு. காமராசு). ஏழைக் குடும்பப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டார். மனைவி கருவுற்றாள். இதற்கிடையில் மிகப் பெரிய செல்வந்தராக மாறியிருந்த கதை நாயகர், தலைப் பிரசவத்திற்குக்கூட செலவழிக்க நாதியில்லாத மனைவியின் குடும்பத்தாரைக் கரித்துக்கொட்டினார். மனம் வெதும்பிய அந்த நிறைமாத கர்ப்பிணி, இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறி, ஆற்றங்கரைக்குச் சென்றாள். மனத்துயரோடு மனம் போனபடி நடந்தாள். 

திடீரென்று வயிற்றுவலி எடுக்க, ஆற்றில் குதித்துவிடலாம் என்னும் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கதற ஆரம்பித்தாள். 

வயதான மூதாட்டி ஒருத்தி அப்பக்கமாக வந்தாள்.  அனுபவசாலியாகத் தோன்றிய மூதாட்டி, ஆற்றங்கரையிலேயே மறைப்பு கட்டி, அந்தப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்தாள். அழகான ஆண்குழந்தை பிறந்தது. 

பொழுது விடிந்தவுடன் மனைவியைக் காணாது தேடிய செல்வந்தர், தன்னுடைய தவறை உணர்ந்தார். மனைவியைத் தேடி அலைந்தார். ஆறு குளத்தில் விழுந்திருப்பாளோ என்னும் அச்சம் கவ்வியது. ஆற்றங்கரையில் அல்லாடியபோது, சிறுமி ஒருத்தி எதிரில் வந்தாள். "கர்ப்பிணிப் பெண்ணா? அப்படியானால், அந்தப் பக்கம் போங்கள்' என்று முத்தாலங்குறிச்சி நோக்கிக் கையைக் காட்டினாள். 

தட்டுத் தடுமாறி அந்தச் செல்வந்தர் வர, சேலையும் ஓலையுமாகக் கட்டப்பட்டிருந்த அந்த மறைப்புக் குடிலுக்குள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. வெளியில் நின்று குரல் கொடுத்தார். உள்ளிருந்த மனைவி அடையாளம் புரிந்து அழைத்தாள்.  

உள்ளே போன செல்வந்தருக்கு வியப்போ வியப்பு... தன்னுடைய மனைவியும் குழந்தையும்! தன்னுடைய அலைச்சலையும் மூதாட்டியின் உதவியையும் மனைவி சொல்ல, வெளியில் சென்ற மூதாட்டி வருவாள் என்று இருவரும் காத்திருந்தனர். 

இரவு வந்தது; மூதாட்டி வரவில்லை. ஆனால், செல்வந்தருக்குக் கனவு வந்தது. கனவில் முகமெல்லாம் விகசித்த அருள் சிரிப்போடு அம்பாள் காட்சி தந்தாள். மூதாட்டியாக வந்ததும், சிறுமியாக வந்ததும் தானே என்று அருளிய அம்மை, தன்னுடைய திருநாமம் "குணவதி' என்றும், அந்த இடத்திலேயே தனக்கொரு திருக்கோயிலை வடக்குமுகம் அமைந்ததாகக் கட்டும்படியும் ஆணையிட்டாள். 

பிறகென்ன? கோலாகலமாக குணவதியம்மன் இங்கே கோயில் கொண்டுவிட்டாள். கேட்டவருக்குக் கேட்டதையெல்லாம் தருபவளாகத் திகழ்கிறாள். 

சீவலப்பேரியில் தென்முகமாகத் திரும்பி, மருதூர், சென்னல்பட்டி, முறப்பநாடு, நாணல்காடு, ஆழிக்குடி பகுதிகள் வழியாகப் பொருநையாள் ஓடி வருகிறாள். தென்முகமாக ஓடிவருகிற பொருநையாளை, வரவேற்பதுபோல, வடக்குமுகமாக அமர்ந்திருக்கிறாள் அருள்மிகு குணவதியம்மன். அம்பாளின் பாதத்தைத் தொட்டு அனுமதி வாங்கிக்கொண்டு, பொருநையாள் தொடர்ந்து ஓடுவதுபோல் தோன்றுகிறது. 

அருள்மிகு குணவதியம்மன் திருவிழாவின்போது அதிசயம் ஒன்று நடக்கும் என்று உள்ளூர்க்காரர்கள் கூறுகிறார்கள்.   குடம் ஒன்றில் பால் ஊற்றி, நவதானியங்களையும் போடுவார்கள். பின்னர், பாலில் சிறிதளவை மற்றொரு குடத்தில் ஊற்றுவார்கள். அடுத்த நாள் பார்த்தால், காய்ச்சாமலே, இரண்டாவது குடத்தின் பால் பொங்குமாம். இதை "மதுக்குடம் பொங்குதல்' என்கிறார்கள். இந்தப் பாலை ஒருதுளி அருந்தினாலும், தீராத நோய்களும் தீருமாம். 

முத்தாலங்குறிச்சியில் சிவன் கோயிலும் உண்டு. வீரபாண்டீச்வரர் என்னும் திருநாமத்தோடு லிங்க வடிவ சுவாமியும் சிவகாமியம்மையாக அம்பாளும் காட்சி தருகிறார்கள். அருள்மிகு லக்ஷ்மிநரசிம்மரும் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார். 

இந்தக் கோயில் ஒருகாலத்தில் நிரம்பப் பெரிதாக இருந்ததாகவும் ஆற்று வெள்ளத்தில் சேதப்பட்டதாகவும் பின்னர் சிறியதாகக் கட்டப்பட்டுவிட்டதாகவும் முத்தாலங்குறிச்சி திரு. காமராசு தெரிவிக்கிறார். 

முத்தாலங்குறிச்சியில் நிற்கும்போது, மேற்குமுகமாகக் காணத் தூண்டுகிறாள் பொருநையாள். என்ன? 

ஆமாம், கிருஷ்ணாபுரம் கண்ணைக் கட்டுகிறது. 

(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com