பொன்மொழிகள்!

கலைகளைக் கடந்தவனும், மங்கல வடிவினனும், பிரளயத்தைத் தோற்றுவிப்பவனும், என்றும் நல்லவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவனும், திரிபுராசுரனின் எதிரியும், சச்சிதானந்த ரூபனும், மோகத்தை அழிப்பவனும்
பொன்மொழிகள்!
Updated on
1 min read

கலைகளைக் கடந்தவனும், மங்கல வடிவினனும், பிரளயத்தைத் தோற்றுவிப்பவனும், என்றும் நல்லவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவனும், திரிபுராசுரனின் எதிரியும், சச்சிதானந்த ரூபனும், மோகத்தை அழிப்பவனும் ஆகிய வள்ளலே, மன்மதனை மாய்த்தவனே, எங்களுக்கு அருள் புரியுங்கள்! அருள் புரியுங்கள்!

- ஸ்ரீ ருத்ராஷ்டகம்

ஓ... விஷ்ணுவே! என்னிடமிருந்து பணிவற்ற தன்மையைப் போக்கிவிடுங்கள், என் மனதின் கீழ்மையை அகற்றிவிடுங்கள், என்னிடமிருந்து இந்த உலகம் என்ற கானல்நீரைக் களைந்துவிடுங்கள்; உயிர்கள் மீது நீங்கள் காட்டும் இரக்கத்தை எனக்குக் காட்டி அருளுங்கள், பிறவிப்பெருங்கடலிலிருந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள்.  

- ஆதிசங்கரர்



ஓர் இலையின் நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர்த்துளி எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்து கீழே விழுந்துவிடும். அது போல்தான், மனிதனுடைய உயிர் திடீரென்று எந்த விநாடியில் வேண்டுமானாலும் இந்த உடலை விட்டு உதிர்ந்து போகிறது.    

- ஸ்ரீராமபிரான்


-ஒரு திமிங்கலத்தின் வாயில் அகப்பட்டுக் கொண்ட ரத்தினத்தையும் துணிந்து வெளியே எடுத்துவிடலாம்; அடுத்தடுத்து உயரக் கிளம்பும் அலைகளுக்குள் கொந்தளிக்கும் கடலையும் கடந்துவிடலாம்; சீறும் பாம்பையும் மாலையாகச் சூடிக்கொள்ளலாம். ஆனால் வெறிபிடித்த முட்டாளின் மனதைத் திருப்தி செய்ய முடியாது.

-  பர்த்ருஹரியின் நீதி சதகம்

இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்பவனுக்கு அவரது தரிசனம் கிடைக்கும். 

- அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்

ஒருவன் மகான்களின் பாதத்தூளியால் அபிஷேகம் பெற்றால்தான், உயர்ந்த ஞானத்தை அடைய முடியும். இந்த ஞானத்தைத் தவத்தாலும், யாக யக்ஞங்களாலும், இல்லற தர்மங்களைச் சிறந்த முறையில் அனுஷ்டிப்பதாலும், வேதம் ஓதுவதாலும், ஜலம் அக்கினி சூரியன் முதலியவற்றை உபாசிப்பதாலும் அடைந்துவிட முடியாது.

-பாகவதம்


விஷ்ணுவே! என்னிடம் அருள் புரியுங்கள்; நான் உங்களுடைய பாதகமலங்களைத் தியானம் செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவன்; நான் உங்களுடைய திவ்ய நாமங்களை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு, எங்காவது ஜனசஞ்சாரமில்லாத இடத்தில் தனிமையில் வசிக்க விரும்புகிறேன்.

- நாராயணீயம்

தெய்வ அபராதம் செய்த ஒருவன் சத்குருவைத் தஞ்சமடைந்தால், அவர் அவனைக் காப்பாற்றிவிடுவார். ஆனால் சத்குருவிற்கு ஒருவன் அபராதம் செய்தால், பரமேஸ்வரனால் கூட அவனைக் காப்பாற்ற முடியாது.

குருகீதை

உதிர்ந்து சிதறிய பூக்கள் ஒரு நாரால் மாலையாகின்றன. அதுபோலவே சிதறி ஓடும் எண்ணங்கள் ஒரு சத்குருவின் மொழியால் ஒன்றாகி, இறைவன் மார்பில் மாலையாகத் திகழ்கிறது.

- மூத்தோர் வாக்கு

குலப் பெண்களைக் காப்பாற்றுவதைப் போல, வேதத்தை நாம் அவசியம் காப்பாற்ற வேண்டும்.

- ஆத்ம புராணம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com