

நம்மாழ்வார் புளியம்பொந்தில் பொலிந்திருக்க, மதுரகவியார் வந்துத் தூண்டலிட, திருவிருத்தம் 100, திரு ஆசிரியம் 7, பெரிய திருவந்தாதி 87, திருவாய்மொழி 1102 என்று பாசுரங்களைப் பொழிந்தார் நம்மாழ்வார். அவற்றை மதுரகவியார் ஏட்டில் பதிவித்தார். இருபெரும் மஹான்களின் திருமேனிகள் தீண்டிய தலம் இது.
சில காலம் கழிந்த பின்னர், பாசுரங்களின் புழக்கம் குன்றிப் போக, எப்படியோ ஒரு சில வரிகள் நாதமுனிகளின் செவிக்குச் சென்றன. தேடிக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று புறப்பட்ட அவர், தேடித் தேடி இப்பகுதியை அடைந்தார். மதுரகவியாரின் வம்சத்தாரிடம், "கண்ணி நுண் சிறுத் தாம்பு' என்னும் மதுரகவியார் பாசுரத் தொகுப்பைப் பெற்றார். பன்னீராயிரம் முறை அதனை உருச் செய்தால், நாலாயிரமும் கிட்டும் என்று அவர்கள் கூற, அதன்படியே செய்தார். அப்போது, நம்மாழ்வாரே நாதமுனிகளுக்குப் பிரத்யக்ஷமாகி, திரை மறைவில் அமர்ந்து நான்காயிரத்தையும் உபதேசித்ததாக வரலாறு. நாதமுனிகளின் இம்முயற்சியே, தமிழன்னைக்கு அணிகலனாக அமைந்தது.
இத்தலமே பரமபதத்தின் எல்லை என்பதற்கொரு சம்பவம் சான்றாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்திற்கு எதிரே, பொருநையின் வடகரையில், சித்தர் ஒருவர் வாழ்ந்தார். அவரிடம் நாய் ஒன்றிருந்தது. அது அவ்வப்போது, ஆற்றைக் கடந்து வந்து, குருகூர் வீதிகளில் திரியும். உணவருந்திவிட்டு மக்கள் வீசும் இலைகளில் மீதமிருக்கும் உணவை உண்ணும். ஒருநாள் இவ்வாறு உணவு உண்டுவிட்டுத் திரும்புகையில், ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொண்டது. உடலிலிருந்து உயிர் பிரிய, நாயின் ஆன்மாவானது, பேரொளிப் பிரகாசமாக விண்ணில் எழுந்தது. இதனை வடகரையில் அமர்ந்திருந்த சித்தர் கண்டார். குருகூர் எச்சிலை உண்டதால் நாய்க்குக் கிட்டிய வீடுபேறு தனக்குக் கிட்டவில்லையே என்று வருந்தினாராம்.
வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ பெருமாள் மகுடம்
சாய்க்கும் படிக்குக் கவி சொல்லு ஞானத்தமிழ்க் கடலே
என்று அச்சித்தர் பாடினாராம்.
அரையர் சேவையும், பொருநையாளின் நீரெடுத்துக் காய்ச்சிக் கிடைக்கப்பெற்ற நம்மாழ்வார் திருமேனியும் ஆழ்வார் திருநகரியின் சிறப்புகள்.
பொருநையாளோடு பயணித்துக் கொண்டே குரங்கணி என்னும் சிற்றூரை அடைகிறோம். தென்திருப்பேரைக்கு வெகு அருகிலும் ஆழ்வார் திருநகரிக்குச் சுமார் 6 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது குரங்கணி. பொருநையாளின் தென்கரை கிராமமான இது நம்மைக் கவர்வதற்குக் காரணமே இதன் பெயர் என்று சொல்லலாம். அதென்ன குரங்கணி?
ராமாயணக் காலத்தோடு இவ்வூருக்குத் தொடர்பிருப்பதாக உள்ளூர்க் கதை தெரிவிக்கிறது. ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றானில்லையா? அப்போது, தன் மீதிருந்த நகைகள் சிலவற்றை அவள் தூக்கி வீசினாளில்லையா? அவ்வாறு வீசியதில் "முத்து மாலை' ஒன்று இங்கு விழுந்ததாம்.
சீதை எங்கிருக்கிறாள் என்று அனுமனும் மற்றவர்களும் தேடிப்போனபோது, முத்து மாலை கண்ணில்பட, சீதையின் மாலையாக இருக்கலாம் என்றெண்ணி, இவ்வழியாகத்தான் எங்கோ போயிருக்கவேண்டும் என்று அறிந்துகொண்டு தேடினார்களாம்.
பின்னர், ராவணனோடு போர் தொடுத்தபோது, வானரச் சேனையை வழி நடத்தி வந்த ராமர், இங்குத்தான் குரங்குகளை அணி அணியாக நிற்க வைத்தாராம். ஆகவேதான், இந்த இடத்திற்குக் "குரங்கணி' என்னும் பெயர் வந்தது.
இந்த கிராமத்தில் அருள்மிகு "முத்துமாலையம்மன்' திருக்கோயில் உள்ளது. சரியாகத்தான் ஊகித்துவிட்டீர்கள்........! சீதையை இவ்வாறு வணங்குகிறார்கள்.
சீதையின் முத்துமாலை விழுந்த இடமல்லவா? பிற்காலத்தில், பக்தர் ஒருவர் இந்தப் பக்கம் வந்தபோது, முத்து மாலையின் ஒளி அவருடைய கண்களைக் கூசச் செய்தது. பிறருக்கு அம்முத்து மாலை புலப்படவில்லையாயினும், அருகிலிருந்த மண் சட்டியை எடுத்துப்போட்டு அதனை மூடினார். அந்த முத்து மாலையைச் சீதையாகவே நம்பினார். ஊர்மக்களும் கூடி, மண் திருமேனியையே சீதையாக பாவித்துக் கோயில் எழுப்பி வழிபட்டனர். முத்துமாலையாகச் சீதை இங்கு எழுந்தருளினாள் என்பதைக் குறிப்பிடும் வகையில், "முத்துமாலையம்மன்' என்றே வழங்கினர்.
பலகாலத்திற்கும் இக்கோயிலில் மண் திருமேனியே வழிபடப்பட்டது. திருமேனிக்குப் பூஜை நடக்கும். ஆனால், அபிஷேகமும், நைவேத்தியமும் கிடையாது. மண் திருமேனி என்பதாலும், அசோகவனச் சீதை உண்ணாமல் இருந்தாள் என்பதாலும் இவ்வழக்கம்.
20-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான், மண் திருமேனி அகற்றப்பட்டு, கல் திருமேனி அமைக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கோயிலின் சுற்றுச்சுவரைச் சீரமைக்கச் சில முயற்சிகள் நடந்தன. அதிகாரி ஒருவர், சுற்றுச்சுவரை இடிப்பதற்கு முனைந்தார். பிறரெல்லாம் தடுத்தனர். தான் கூப்பிடும் குரலுக்கு அம்மனே எதிர்க்குரல் கொடுத்தால், தன் செயலை நிறுத்திக்கொள்வதாகவும் கூறினார். கட்டாயம் அம்மன் குரல் கொடுப்பாள் என்று ஊர்மக்கள் நம்பிக்கை தெரிவிக்க, அவரும் அம்மன் பெயரைச் சொல்லி அழைக்க, "என்ன?'என்று எதிர்வினா கேட்டாள் முத்துமாலையம்மன். அந்த அதிகாரியும் அம்மனுடைய அருளை உணர்ந்து, தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.
அருள்மிகு முத்துமாலையம்மனுடைய காவல் தெய்வம் பெரியசாமி. இவர் இங்கு வந்ததற்கும் ஒரு வரலாறு உண்டு. பொருநையின் வெள்ளப்பெருக்கில் சிலையாக இவர் வர, அம்மனுடைய அருளால், சிலையை இங்கேயே காவல் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தனர்.
பொருநையின் போக்கோடு இன்னும் சிறு தொலைவு செல்வோமா?
பொருநையின் வடகரையில் இருக்கும் ஏரல் என்னும் ஊரைஅடைந்து விடுகிறோம். வணிக நகரமாக இருக்கும் ஏரல், சேர்மன் அருணாசல சுவாமிகளின் திருத்தலமும் ஆகும்.
"சேர்மன் சுவாமிகள்' என்றே வணங்கப்படுகிற அருணாசல சுவாமிகளின் வரலாறு வெகு சுவாரசியமானதாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.