
படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக்கோயில் பகவற்கு அஃதாமே
(பாடல் : 1857)
கோயிலில் இருக்கும் கடவுளுக்கு ஒன்றைப் படைத்தால், அது கடவுளுக்கு மட்டுமே போய்ச் சேரும். நடமாடும் கோயிலான மனிதர்களுக்கு சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலாக இருக்கக்கூடிய மனிதர்களுக்கு ஒன்றைச் செய்தால், அது கடவுளுக்கும் சேரும்.
கடவுள் நம்பிக்கை இல்லாத சிலர் இந்தப் பாடலை எடுத்துக்கொண்டு, "பார்த்தீர்களா... திருமூலரே கோயிலுக்குப் போக வேண்டாம், கடவுளுக்கு எதுவும் செய்யத் தேவையில்லை' எனச் சொல்லியுள்ளார் என்று பரப்புரை செய்து வருகிறார்கள்.
திருமூலர் சிவ வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். கோயில்களில் நியமப்படி பூஜைகள் நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.கோயில் வேண்டாம் என அவர் சொல்வதாக இப்பாடலைத் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கோயிலுக்குப் போகும் போது வெறும் கையோடு போகக் கூடாது என நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். பூ, பழம், தேங்காய், நெய், திரி, விளக்கு, கற்பூரம், வஸ்திரம், அபிஷேகப் பொருள்கள் என வாங்கிக் கொண்டு போகும் போது ஒரு பத்து பேருக்கு வருமானத்தை ஏற்படுத்தித் தருகிறோம். ஒவ்வொரு முறை கோயிலுக்குப் போகும் போதும், ஒரு சிலரின் வருமானத்திற்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதே உண்மை.
உன் முன்னால் ஒருவன் பசியால் துடிக்கிற போது, அவனுக்கு உணவு கொடுத்தால் கடவுளின் வயிறும் சேர்ந்து நிறையும் என்கிறார் திருமூலர்.
அன்னதானம் என்பது நம் வழிபாட்டோடு இணைந்தே இருக்கிறது. காஞ்சி மகா பெரியவர் "பிடி அரிசித் திட்டம் " என்ற அருமையான திட்டத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் போது ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்டும். மாதத்தில் ஒரு நாள் சேவகர்கள் மூலம் அரிசி சேகரிக்கப்பட்டு அன்னதானத்திற்கும், பாடசாலை மாணவர்களின் உணவிற்கும் பயன்படுத்தப்படும்.
இதில் ஒரு நுட்பம் இருக்கிறது. சிலர், "மாதத்தில் ஒருநாள் அவர்கள் அரிசி வாங்க வரும் போது மொத்தமாக எடுத்துக் கொடுப்போமே... ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்டுமா?' என நினைத்திருக்கலாம். ஒவ்வொரு நாளும் அரிசி எடுத்து வைக்கும் போது, ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். மாதத்தில் ஒருநாள் மொத்தமாக அரிசி கொடுக்கும் போது, அந்த ஒரு நாளுக்கு மட்டுமே அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் சமைக்கும் போது ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்டும் என சொல்லப்பட்டது.
கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு வருடமும், கல்லூரியில் பொங்கல் விழாவின் போது "ஒரு பிடி அரிசித் திட்டம்' என கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மாணவனும் ஒரு பிடி அரிசி எடுத்துக் கொடுத்து, அந்த அரிசி கோவையில் உள்ள சில அநாதை இல்லங்களுக்கு ஒரு ஆண்டுக்கான உணவிற்காக அனுப்பப்படுகிறது. இதை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறார்கள்.
ஒரு மனிதனுக்கு உணவு தருகிற போது, அது கடவுளைச் சென்று சேரும். நேரடியாக கடவுளுக்கு செய்தால் அது மனிதர்களுக்கு சேராது என்பதற்கு வாரியார் சுவாமிகள் ஒருமுறை விளக்கம் சொன்னார். ஒரு கடிதத்தை தபால் பெட்டியில் போட்டால் அது தலைமை தபால் நிலையத்திற்கு போய் விட்டு, உரியவரிடம் போகும். ஆனால் நேரடியாக தலைமை தபால் நிலையத்தில் கொண்டு போய் போட்டால் அது தபால் பெட்டிக்கு வராது.
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் ஒருமுறை தன் நண்பருடன் திருப்பதிக்கு போயிருக்கிறார். தரிசனத்திற்காக வரிசையில் நின்றிருந்த போது, அவருடைய நண்பர் கையில் ஒரு பெட்டி வைத்திருப்பதைப் பார்த்து "அது என்ன?' என விசாரித்திருக்கிறார். "இதில் ஐந்து லட்சம் பணம் இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல வருமானம் வந்ததால், இதை உண்டியலில் போட கொண்டு வந்துள்ளேன்' என நண்பர் சொல்லியிருக்கிறார்.
உடனே கிருஷ்ணன் அந்தப் பெட்டியை வாங்கினார். அதிலிருந்த பணம் முழுமைக்கும் கட்டண தரிசன டிக்கெட்டுகளை வாங்கித் தன் நண்பரிடம் கொடுத்தார். "இலவச தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் மக்களிடம் போய் இதைக் கொடு' என்றார்.
அந்த டிக்கெட்டுகளை வாங்கிய அத்தனை பேரும் மிகவும் நெகிழ்ந்து போய், "நீங்க நல்லாயிருக்கணும்...நீங்க நல்லாயிருக்கணும்' என வாழ்த்தினார்கள். அப்போது நண்பரைப் பார்த்து கிருஷ்ணன் சொன்னார்...."இந்த பணத்தை நீ உண்டியல்ல போட்டாலும் கோயிலுக்குதான் போகப் போகுது. இப்ப நீ எல்லாருக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்தாய். இந்தப் பணமும் கோயிலுக்குதான் போகப் போகுது. ஆனா, நீ நேரடியா உண்டியல்ல போட்டிருந்தால் இத்தனை பேரோட வாழ்த்தும், இத்தனை பேரை சந்தோஷப்படுத்தின புண்ணியமும் உனக்குக் கிடைச்சிருக்காது' என்றார்.
இதையே தான் திருமூலரும் நமக்குச் சொல்கிறார்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக்கோயில் பகவற்கு அஃதாமே
- (தொடரும் )
(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.