பனிப் பொழிவில் பரமனின் அருள் பொழிவு!

சிவனாரை தரிசித்து வழிபடும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் (துவாதச லிங்கம்) ஒன்றான, வல்லமை பெற்ற கேதாரீஸ்வரரைப் பற்றி பார்ப்போம்: 
பனிப் பொழிவில் பரமனின் அருள் பொழிவு!

சிவனாரை தரிசித்து வழிபடும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் (துவாதச லிங்கம்) ஒன்றான, வல்லமை பெற்ற கேதாரீஸ்வரரைப் பற்றி பார்ப்போம்: 

திருக்கைலாயத்தில் ஆரம்பித்து ராமேஸ்வரம் வரையிலும் தீர்க்க ரேகையின் வட்டப்பாதையில் சரியாக 79 டிகிரியில் கீழ்கண்ட சிவத்தலங்கள் அமைந்துள்ளது எப்படி என தற்கால விஞ்ஞானிகள் வியக்கிறார்கள். 

திருக்கைலாயம் (79.0692), கேதார்நாத் (79.0669), உஜ்ஜையினி (79.9067), திருக்காளஹஸ்தி (79.7037), காஞ்சி (79.7036), திருவண்ணாமலை (78.7108), சிதம்பரம் (79.6954) மற்றும் ராமேஸ்வரம் (79.3129) ஆகியவை அமைந்துள்ளன. 

இவற்றில் கேதார்நாத் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,750 அடி உயரத்தில் பனிப்படர்ந்த மலையில் உத்தர்கண்ட் மாநிலத்தில், கார்வால் மாவட்டத்தில் உள்ளது. இக்கோயிலின் தலைமை பூசாரியாக இருக்க வேண்டியவர் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த சைவ வேளாள மரபினர். ஆனால் தற்போது ராவல் என்ற பிரிவினர் பூஜை செய்கிறார்கள். சுமார் 360 புரோஹிதக் குடும்பங்கள், இதைச் சுற்றியுள்ள 55 கிராமங்களில் வசிக்கிறார்கள். பனிப்பொழிவு மிகக்கடுமை. 

பொதுவாக ஏப்ரல் / மே மாதம் அக்க்ஷய திருதியை நாளன்று கோயிலைத் திறப்பார்கள். அது அக்டோபர் வரை 6 மாத காலம் தான் திறந்திருக்கும். மீதமுள்ள 6 மாதங்களும் கேதார்நாதர் கீழே உள்ள குப்தகாசிக்கு வந்து விடுவார். 

சார்த்டாம் தேவஸ்தானம் போர்டின் தலைமை அதிகாரிதான் கோயில்களை எப்போது திறக்கவேண்டும் - மூடவேண்டும் என்பதை முடிவு செய்வார். 

இந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. 

நவம்பர் ஆரம்பித்து ஏப்ரல் அக்க்ஷய திருதியை நாள் வரையிலும் கேதாரீஸ்வரர் உள்பட அனைவரும் அடிவாரத்திலுள்ள கெளரிகுண்ட் என்ற இடத்திற்கு வந்துவிடுவார்கள். ஏனெனில் பனிப்பொழிவு சோவென மழைபோல் கொட்டும். கோயிலை மூடும்பொழுது, ஒரு பெரிய நெய் அகல்விலக்கை சுவாமியின் பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு வருவார்கள். பின்னர், ஏப்ரலில் சுவாமியுடன் சென்று கோயிலைத் திறக்கும்போது, முன்பு ஏற்றிவைத்த நெய்விளக்கு எரிந்தபடியே அனைவரையும் வரவேற்பது அற்புதக் காட்சியாகும்.

இது மஹாபாரத காலத்திற்கு முற்பட்ட கோயில். மஹாபாரதத்தில் பாண்டவர்கள் குருஷேத்திர யுத்தத்தில் தன் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் கொன்றொழித்த பாவச்செயலால் நிம்மதியின்றி தவித்தனர். 
அதற்கு பரிகாரம் வேண்டி வியாச பகவானை அணுகினர். அவரது வழிகாட்டுதலின்படி காசி விஸ்வநாதரை தரிசித்து தங்களது பாவங்களைக் கரை சேர்க்க வந்தனர். மஹாதேவர் பார்த்தார். இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது என்று அவர்களைத் தவிர்ப்பதற்காக, அங்கிருந்து காளையுருவில் கிளம்பி நேரே குப்த காசிக்குச் சென்று மறைந்திருந்தார். 

இதை மோப்பம் பிடித்த பாண்டவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். காளையுருவில் இருந்த சிவனார், அங்கிருந்து நேராக கேதார்நாத் வந்து தன் முகத்தால் பூமியைத் தோண்டிக்கொண்டு உள்ளே சென்று மறைய முயற்சி செய்துள்ளார். ஆனால் பின் தொடர்ந்த பாண்டவர்கள், "இறுகப் பிடித்துக் கொண்டேன் உன் பாதத்தை! இனி விடுவேனோ?' என்று மஹாதேவரைப் பணிந்து பாவ விமோசனம் வேண்டினர். ஸ்தோத்திரப் பிரியன், பரம தயாளனான ஈசன், உடனே மனமிரங்கி அவர்களை ஆட்கொண்டதாக வரலாறு கூறுகிறது. 

காளையின் பின் பாகமே பாறையாக இருந்து கேதார்நாதராக இங்கு அருளாட்சி செய்து வருகிறார். சுந்தரரும், சம்பந்தரும் தேவாரத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்கள். 

கேதார்நாத்தை சென்றடைய கெளரிகுண்ட் என்ற மலையடிவாரத்திலிருந்து போகலாம். 14 கி.மீ. தூரமாகும். நடந்தோ, குதிரையிலோ, டோலி மூலமோ செல்லலாம். ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. ஹரித்வாரிலிருந்து மலை மீது 27 நபர்கள் செல்லக் கூடிய மினி பேருந்திலும் செல்ல முடியும். நம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்திருத்தலங்களைத் தரிசிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com