தபோவனத்து தாத்தா சுவாமிகள்!

தபோவனத்து தாத்தா சுவாமிகள்!

ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவரை தரிசிக்க வந்த ஒரு பக்தர் ""நான் திருக்கோவிலூர் சென்று வந்தேன்'' என்றார். அதற்கு மகா பெரியவர் ""அங்கு தாத்தா சுவாமிகளைப் பார்த்தாயா?'' என்று கேட்டார். 


ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவரை தரிசிக்க வந்த ஒரு பக்தர் ""நான் திருக்கோவிலூர் சென்று வந்தேன்'' என்றார். அதற்கு மகா பெரியவர் ""அங்கு தாத்தா சுவாமிகளைப் பார்த்தாயா?'' என்று கேட்டார். 

பக்தர் திருதிருவென விழித்து, ""இல்லை பெரியவா நான் "ஞானானந்தகிரி சுவாமி'களைத்தான் பார்த்தேன்'' என்றார். 

""அந்த மகானைத்தான் நாங்கள் "தபோவனம் தாத்தா சுவாமிகள்' என்று அழைப்போம்'' எனத் திருத்தினார் மகா பெரியவர். அவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்: 

கர்நாடக மாநிலம், மங்களபுரியில் ஸ்ரீ வெங்கோப கனபாடிகளுக்கும், ஸ்ரீமதி சக்குபாயுக்கும் மகனாய் அவதரித்த சிறுவனை "சுப்ரமண்யன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். 

7-ஆவது வயதில் உபநயனம் செய்து வைக்கப்பட்டு காயத்ரி தேவியின் ஆசியினைப் பெற்றார். படிப்பில் நாட்டமில்லாமல் வளர்ந்து 12 வயது ஆனபோது பாலகனின் முன் ஒரு ஜோதிப்பிழம்பு தோன்றியது. அதனைத் தொட முயற்சித்தார். அந்த ஜோதி நகர்ந்து கொண்டே சென்றது. ஜோதியை தொடர்ந்து பாலகன் சென்று சேர்ந்த இடம் பண்டரிபூர். அப்போது அந்த ஜோதி சட்டென மறைந்து ருக்மணி தேவியுடன் பாண்டுரங்கப் பெருமாள் காட்சியளித்தார். அதைக் கண்டு பேரானந்தம் அடைந்தான் பாலகன். 

இரவு நேரம் அசதியில் தூங்கிவிட்ட பாலகனை பாண்டுரங்கன் எழுப்பி பசிக்கு உணவு தந்து, ஞானப்பசிக்கும் ஒருவரைக் காட்டினார். அவர்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட "ஜோதிர்மட்' என்ற   மடத்தின் மடாதிபதி சிவரத்னகிரி சுவாமிகள். அவர் ஆதிசங்கரரின் நான்கு சிஷ்ய பரம்பரையில் தோடகாச்சார்யாரின் வழிவந்தவர். 

பாண்டுரங்கன் காட்டிய பாலகன் சுப்ரமண்யனை பரீட்சித்த சிவரத்னகிரி சுவாமிகள், தன் சீடனாக அவரை ஏற்று அத்வைதத்தை புகட்டினார். 

சிஷ்யன் சுப்ரமணியனின் 18-ஆவது வயதில், காஷாய தண்டம் கொடுத்து மடத்தின் அடுத்த பீடாதிபதியாக்கி, "ஞானானந்த கிரி' என்ற நாமத்தை சூட்டி, பட்டம் ஏற்கச்செய்து, மகா சமாதி அடைந்தார். 

ஞான நாட்டம் கொண்ட ஞானானந்த கிரி, அவருக்கு அடுத்த வாரிசாக ஸ்ரீஆனந்தகிரி சுவாமிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் திருத்தலங்களைத் தரிசித்து பின் தமிழகம் வந்தார். 

சேலம்-ஆட்டையாம்பட்டி கிராமத்தில் சிலகாலம் இருந்து, அதன்பின் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் "ஞானக்குடில் ஞானாநந்த தபோவனத்தை' நிறுவினார்.  1969-ஆம் ஆண்டு வேதாந்தம் பயிற்றுவிப்பதற்காக ஏற்காட்டில் "ஸ்ரீ ஞானாநந்தா பிரணவ நிலையம்" என்ற ஆசிரமத்தை நிறுவி ஆத்ம யோகம், கர்ம யோகம் மற்றும் பக்தி யோக மார்க்கங்களை கற்பிக்க ஏற்பாடுகள் செய்தார். இவரது உபதேசத்திலும், பயிற்சியிலும் ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழக பக்தர்களும், வெளிமாநிலம் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் இவரிடம் உபதேசம் பெற்று சீடரானார்கள். 

100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திய ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் 1974-ஆம் ஆண்டு, மார்கழி கிருஷ்ணபட்ஷ த்விதியை அன்று அமர்ந்த நிலையில் மகா சமாதியடைந்தார். சுவாமிகளின் 47-ஆவது ஆராதனை விழா, சிறப்பு ஹோமங்கள், வேதபாராயணங்கள், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளுடன், திருக்கோவிலூர் தபோவனத்தில் டிச. 16 -இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச. 31-ஆம் தேதி ஆராதனை, "தீர்த்த நாராயண' பூஜையுடன் நிறைவடைகிறது. அதேபோல் வந்தவாசி வட்டம், தென்னாங்கூரில் பாண்டுரங்கன் கோயில் எதிரில் உள்ள ஸ்ரீஞானானந்த கிரி மடத்தில் டிச. 27 முதல் 29-ஆம் தேதி வரை விழா நடைபெறும். மேலும் தொடர்புக்கு: 75983 65175 / 75983 75175. தென்னாங்கூர் மடம்: 91769 67153.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com