நம்பி புரியும் நற்செயலின் பிற்பயன்!

ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களில் ஒருவரான அபூதர் அல் கிபாரி (ரலி) நன்கு அறியும் நன்னோக்குடன் தொடர் கேள்விகள் கேட்டு நீண்ட உரையாடல் புரிந்தார்.
நம்பி புரியும் நற்செயலின் பிற்பயன்!

ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்களில் ஒருவரான அபூதர் அல் கிபாரி (ரலி) நன்கு அறியும் நன்னோக்குடன் தொடர் கேள்விகள் கேட்டு நீண்ட உரையாடல் புரிந்தார்.
அபூதர் அல்கிபாரி (ரலி): சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லும் நரகத்திலிருந்து காப்பாற்றும் நற்செயல் எது?
அண்ணல் நபி (ஸல்): அல்லாஹ்வை நம்பி வாழ்வது.
அபூதர்: இறை நம்பிக்கையோடு வேறு நற்செயல் உண்டா?
நபி (ஸல்): அல்லாஹ் அவருக்கு வழங்கியவற்றிலிருந்து வழங்குவது.
அபூதர்: அந்த அடியான் எதுவும் இல்லாதவராக இருந்தால் என்ன செய்வது?
நபி (ஸல்): நாவால் நல்லதைப் பேச வேண்டும்.
அபூதர்: வாய் திறந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத ஊமையின் நிலை என்ன?
நபி (ஸல்): பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான உதவி செய்ய வேண்டும்.
அபூதர்: ஆற்றலின்றி பலவீனராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்): தன்னினும் தாழ்ந்த பலவீனர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.
அபூதர்: நீங்கள் சொல்லும் அனைத்து நிலைகளிலும் பலவீனமாக இருப்பவர் என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்): நீங்கள் குறிப்பிடும் அந்த தோழர் எந்த நன்மை புரியும் வாய்ப்பையும் பெறாதவர் என்றால் சக மனிதர்களை நோகச் செய்யாமல் விலகி இருக்கவேண்டும்.
அபூதர்: அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் சொன்னவை அனைத்தும் பின்பற்றுவதற்கு எளிமையானதா?
நபி (ஸல்): என் உயிர் எவன் வசம் உள்ளதோ, அவன் மீது சத்தியம் இட்டுக் கூறுகிறேன். அவை ஏற்றுச் செயல்பட எளிமையானவை. ஓர் அடியான் ஒரு நற்செயலைச் செய்கிறான். அதன் நன்மையால் அல்லாஹ்வின் கூலியைச் சொர்க்கத்தில் பெறுவான்.
நூல் - சஹீஹ் இப்னு ஹிபான் 373.
இவ்வுரையாடலின் விரிவை விளக்கமாய் ஆய்வோம். இவ்வுரையாடலில் பொதிந்துள்ள பொருள் நம்பிப் புரியும் நற்செயலின் பிற்பயன்.
5-9 ஆவது வசனம் எவர் நம்பிக்கை
யுடன் நற்செயல்களைச் செய்கிறாரோ அவர்களுக்குப் பாவ மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கிறான் என்று கூறுகிறது . மகத்தான கூலி என்பது சொர்க்கத்தில் நுழைவது என்பதை 2- 282 ஆவது வசனம் எவர் உண்மையாகவே நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ அவர்கள் சொர்க்கவாசிளே. அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பர் என்று உறுதிப்படுத்துகிறது.
57 -7 ஆவது வசனம் மனிதர்களே அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும்
உங்களுக்கு முன் சென்றவர்களின் பொருள்களுக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கினான் அல்லாஹ். அப்பொருள்களில் இருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு என்று கூறுகிறது.
நம்மிடம் வரும் ஏழைகளுக்கு வேண்டியதை நிறைவாகக் கொடுக்க வேண்டும். நாடிவரும் வறியவர்களுக்குப் போதியதைக் கொடுக்க வேண்டும். நம்பிக்கையுடன் நற்செயல் புரிவோருக்கு நற்பேறு உண்டு. அல்லாஹ்வின் அடியார்களே நீங்கள் தர்மம் செய்தால் கண்டிப்பாக பரிசுத்த நாயகனாகிய அல்லாஹ் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பல மடங்கு வழங்குகிறான். எல்லாம் வல்ல அல்லாஹ் குறைவான தான தர்மம் செய்தவருக்கும் நிறைவாகவே வழங்குகிறான் என்று விளக்கம் தருகிறது தப்ஸீர் இப்னு கதீர் 141/8.
64-17 ஆவது வசனம் அழகிய முறையில் அல்லாஹ்விற்காக நீங்கள் கடன் கொடுத்தால் அதனை உங்களுக்கு இரு
மடங்காக்கி வைப்பதுடன் உங்கள் குற்றங்களையும் மன்னித்துவிடுகிறான் என்று கூறுகிறது. அல்லாஹ்விற்கு அழகிய கடன் என்பது கடமையான கணக்கிட்டுக் கொடுக்கும் ஜகாத், அதற்கு மேலும் கூடுதலான தானம், ஏழை உறவினர்களுக்கு உதவுதல், அநாதைகள், வறுமையில் வாடுவோர், வழிப்போக்கர்களுக்கு வறுமை நீங்க வழங்குதல் ஆகும்.
தர்மம் செய்ய எதுவுமில்லாதவன் அழகிய உயரிய நற்சொற்களைச் சொல்ல வேண்டும். இதனால் நேசம் பெருகும். அன்பும் நெருக்கமும் அதிகமாகும். பாசமும் வலுவாகும். பரவலான பழக்கம் ஏற்படும். மனிதன் இவ்வுலகில் உண்டதும் பருகியதும் அழிவன. விட்டுச் செல்லும் பொருள்கள் வாரிசுகளுக்கு உரியதாகிவிடும். நல்லெண்ணத்துடன் அல்லாஹ்விற்காக செய்தவையே அவனுடன் செல்லும். அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.
நற்சொற்களும் நற் செயல்களும் நலிவுற்றோருக்கு வலு சேர்க்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். இத்தகு நற்சொல் பேசுவோர், நற்செயல் புரிவோர் இல்லிய்யூன் என்னும் கெளரவத்திற்கு உயர்த்தப்படுவர். இல்லியூன் என்பது நல்லது பதியப்படும் பட்டோலை. இதுவே நம்பி புரியும் நற்செயலின் பிற்பயன். இறை நம்பிக்கையோடு நல்லன செய்து வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com