கேரள பழனி எருத்தாவூர் பாலசுப்பிரமணிய சுவாமி!

அகத்தியர் இம்மலையில் முருகப்பெருமானை நினைந்து தவமியற்றினார் என்றும் அவர் வழிபட்ட  இடமே  இன்று முருகன் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் தலவரலாறு கூறுகிறது.
கேரள பழனி எருத்தாவூர் பாலசுப்பிரமணிய சுவாமி!


அகத்தியர் இம்மலையில் முருகப்பெருமானை நினைந்து தவமியற்றினார் என்றும் அவர் வழிபட்ட இடமே இன்று முருகன் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதேபோல், தாரகாசுரனால் அவதிப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களைக் காத்தருள வேண்டுமென முருகப்பெருமானிடம் முறையிட்டனர்.

அதற்கு செவிசாய்த்த முருகன் அசுரனை வதம் செய்தார். அந்த மகிழ்ச்சியினால், தேவர்களும், முனிவர்களும் இறைவனுக்கு இம்மலையில் கோயில் எழுப்பி விழா கொண்டாடினர் என்றும் கூறப்படுகின்றது.

மூன்றாவதாக, எருத்தாவூரைச் சேர்ந்த முருகன் அடியார் ஒருவர், தவறாமல் திருச்செந்தூர் சென்று அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வது வழக்கம். முதுமை காரணமாக செல்ல முடியாமல் வருந்தினார். அவர் கனவில் தோன்றிய முருகன், "இம்மலையின் உச்சியில் நான் வாழ்ந்து வருகிறேன். என்னை இங்கேயே தரிசிக்கலாம்,' என்றார். இதையறிந்த ஊர்மக்கள் மலைமீதேறி முருகனைக்கண்டு மகிழ்ந்து, வழிபடத் தொடங்கினர் என்றும் கூறப்படுகின்றது.

கேரள பழனி: திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருத்தாவூர் மலை முருகன், பழனி மலையைப்போல உயரமான மலையில் அமைந்துள்ளது, வேண்டுதலுக்கு மொட்டை அடித்தல்,ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்தல் போன்ற காரணங்களால், இத்தலத்தை கேரளாவின் பழனியாக இப்பகுதி பக்தர்கள் போற்றுகின்றனர்.

இதேபோல, திருச்சூர் மாவட்டம், புத்தூர், சேர்ப்பூர், இடுக்கி மாவட்டம், ஓலமட்டம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு ஆகியத் தலங்களின் ஆலயங்களையும் மலையாளப் பழனியாக குறிப்பிடுகின்றனர்.

சுமார் 700அடி உயரத்தில், சுமார் 250 எளிதானப் படிகள் கொண்ட , பசுமையான மலையுச்சியில் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம், கிழக்கு நோக்கி கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிமரம், பலிபீடம், மயில்வாகனத்தோடு கருவறை முன் மண்டபத்தைத் தாண்டியதும், முருகன் கருவறை காட்சி தருகின்றது.

பாலசுப்பிரமணியன், எளிய வடிவில் ஒளிவீசும் முகத்துடன், தண்டம் ஊன்றி காட்சி தருகின்றார். தீபஒளி வெள்ளத்தில் திருவுருவம் ஜொலிக்கின்றது.

கருவறையின் பிரகார சுற்றில், விநாயகர், அன்னை பார்வதி தேவி, பஞ்சலோக ஆறுகமுகப்பெருமான் சந்நிதிகளும். வெளிப் பிரகாரத்தில் நாகராஜன், நாகராணி, நாகக்கன்னிகள், நவகிரக சந்நிதிகளும்அமைந்துள்ளன.

வேண்டுதல்கள்: இத்தலத்து முருகன், பழனியைப் போலவே மொட்டை போடுதல், அங்கப்பிரதட்சனம், முழுக்காப்பு போன்றவற்றிற்கு புகழ்பெற்றதாகவிளங்குகின்றது.

இது தவிர, திருமணம்,குழந்தைப்பேறு, உள்ளிட்ட, வேண்டுதல்களுக்கும் கண்கண்ட தெய்வமாக திகழ்கின்றார். திருமண வரம், வேண்டுவோர் நான்கு சஷ்டிகளில், சிறப்பு அபிஷேகம், செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், ஏழு செவ்வாய்க் கிழமை களில் பத்ம அபிஷேகமும், ராகு, கேது, தோஷம் உள்ளவர்கள் 21 வெள்ளிகிழமைகள் பன்னீர் அபிஷேகம் செய்து வந்தால் அதற்குள்ளாகவே திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விழாக்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சஷ்டி, விசாக நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், நடைபெறும்.

பெருவிழாவாக, பத்து நாள் தைப்பூச விழாவும், ஆறு நாள் கந்த சஷ்டியும் கொண்டாடப்படுகின்றன.

தைப்பூசத்தன்று, அடிவாரத்தில் உள்ள பாலராமபுரம் முத்தாளம்மன் கோயிலில் இருந்து, பால், சந்தனம், நீர், புஷ்பம் என பல்வேறு காவடிகளைத் தூக்கும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி, முருகனிடம் வந்து காவடிகளை சமர்ப்பித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். உருள்நேர்ச்சி எனும் அங்கப்பிரதட்சினம் செய்பவர்களும் உண்டு. இதேபோல, கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும். சூரசம்ஹாரம் கிடையாது.

தரிசன நேரம்: தினமும் காலை 05.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி, மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

விசாகம், சஷ்டி மற்றும், வெள்ளிக்கிழமைகளில், பிற்பகல் 1.00 மணிவரை சுவாமி தரிசனம், செய்யலாம்.

அமைவிடம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில், பாலராமபுரம் ஜங்சனில் இறங்கி, காட்டகடா செல்லும் சாலையில் இரண்டு கி.மீ.தொலைவு சென்றதும் மலைப்பாதை தொடங்குகிறது.

மற்றொரு பழைய வழி, பாலராமபுரம் முன்பாக இரண்டு கி.மீ.முன்பாக முடவூர் பாலாவில் இறங்கி மலையேற வேண்டும். ஆனால், காட்டகடா பாதையே மலையேற எளிதானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com