

ஈக்கு நஞ்சு தலையில் இருக்கிறது; கருந்தேளுக்கு நஞ்சு கொடுக்கில் இருக்கிறது; தீயவர்களிடம் நஞ்சு உடம்பு முழுவதும் இருக்கிறது.
-நீதிவெண்பா
உலகில் நிரம்பிய தெய்விகக் குணமுள்ளவனாகவும், வணக்கத்துடன் இருப்பவனாகவும் மனிதன் வாழ வேண்டும். அத்தகையவன் பிராணிகளுக்கு ஏற்படும் சிறிய நாசத்தையும்கூட பொறுக்கமாட்டான். எவன் பாவத்தை அளிக்கும் காரியத்தை அறிந்து ஆரம்பிக்காமல் இருக்கிறானோ, அவன் மேன்மை அடைவான்.
-இந்து தர்ம சாஸ்திரம்
பகவானே, நீங்கள் சக்தி வடிவமானவர்;
எனக்குச் சக்தியை அளியுங்கள்.
நீங்கள் வீர்ய வடிவமானவர்; எனக்கு வீர்யம் அருளுங்கள்.
நீங்கள் பலத்தின் வடிவமானவர்; எனக்கு பலம் அருளுங்கள்.
நீங்கள் ஆற்றல் வடிவமானவர்; எனக்கு ஆற்றல் அளியுங்கள்.
நீங்கள் தீர வடிவமானவர்; எனக்கு தீரத்தை அருளுங்கள்.
நீங்கள் பொறுமை வடிவமானவர்;
எனக்குப் பொறுமையை அருளுங்கள்.
-சுக்ல யஜுர்வேதம்
ஆசையுள்ளவனுக்கு ஆசை நிறைவேறுவது பேராபத்தை விளைவிக்கும். ஏனென்றால் ஆசை நிறைவேறியதும் அவன் கர்வம் அடைகிறான். அந்தக் கர்வத்தால் அவன் செய்யத்தகாத காரியத்தைச் செய்கிறான்; செய்யத்தக்கக் காரியத்தை செய்வதில்லை. அதனால் அவன் பாழாகி கெட்ட கதியை அடைகிறான்.-அஸ்வகோஷர்
"நாம் நூறு வயது வரை இந்த உலகில் வாழ்ந்து பணத்தைச் சேர்த்தாலும், ஒரு நாள் இந்த உயிர் உடலை விட்டுப் போகும்; அப்போது நம்முடன் ஒரு பைசாவைக்கூட எடுத்துக்கொண்டு செல்ல முடியாது' என்பது அனைவருமே அறிந்ததுதான்.
பெண்களோ, ஆண்களோ அணிந்துகொண்டிருக்கும் ஆபரணங்கள் நெருப்பு இந்த உடலைத் தீண்டுவதற்கு முன்பே கழற்றப்பட்டு விடுகின்றன! விலையுயர்ந்த பட்டுப்புடவை, வேட்டி முதலியனவும் வீட்டிலேயே அவிழ்க்கப்படுகின்றன!
ஆகையால், நாம் இந்த உலகில் சம்பாதிப்பதை நாமே எடுத்துக்கொண்டு செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தை வேறு சாமான்களாக மாற்றிவிட்டால், இந்த உயிர் உடலை விட்டுப் போகும்போது நம்முடன் கூடவே கொண்டு போகலாம். வேறு சாமான்கள் என்றால் என்ன? பணத்தை நல்ல வழியில் செலவழித்துப் பலவகையான புண்ணியங்களை நாம் மூட்டை கட்டி வைத்துக்கொண்டால், அந்தப் புண்ணிய மூட்டைகளை நம்முடன் கூடவே கொண்டு செல்லலாம்!
-ஸ்ரீ அழகியசிங்கர்
ஓட்டின் துண்டும் பொன்னும்; நட்பும் பகையும்; வறுமையும் செல்வமும்; புகழ்ச்சியும் இகழ்ச்சியும்; வீடும் காடும் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்புடன் நோக்கும் எண்ணம் ஒருசிறிதும் இல்லாத தன்மை உடைய மனமே நல்ல மனமாகும்.
- பிரபுலிங்கலீலை
ரதத்தின் மீது உட்கார்ந்திருக்கும், " "ஈ' என்னால் எத்தனை பெரிய புழுதி கிளம்புகிறது!' என்று நினைக்கிறது. அதுபோலவே பெரும் காரியங்கள் நடைபெறும்போது, அகந்தை கொண்டவன் அது தன்னால் நடப்பதாக நினைக்கிறான்.
-பேகன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.