

தென் சீர்காழித் திருத்தலம்: இங்கு எழுந்தருளியுள்ள லிங்க வடிவ சிவபெருமானுக்கு வீரபாண்டீச்வரர் என்று திருநாமம்; அம்பிகை சிவகாமி என்றாலும், பொன்னுருதி அம்மன் என்றும் பெயர் உண்டு. கோயிலின் பெருஞ்சிறப்பு, இங்கெழுந்தருளியிருக்கும் அருள்மிகு சட்டநாத பைரவர் ஆவார்.
சிவபெருமானின் உக்ரசாந்த அம்சங்களில் ஒருவர் சட்டநாதர். சீர்காழியிலுள்ள அருள்மிகு தோணியப்பர் என்னும் பிரம்மபுரீச்வரர் ஆலயத்திலும் அருள்மிகு சட்டநாதர் எழுந்தருளியிருக்கிறார். சட்டநாதர் என்பவர் யார்? இந்தப் பெயருக்கு என்ன பொருள்?
மாவலி (மகாபலி) என்றொரு அரக்கர் தலைவனை நினைவிருக்கிறதா? மாவலியின் செருக்கை அடக்கவும், தேவர்களுக்கு அவர்களுக்கு உருத்தான செல்வத்தைப் பெற்றுத் தரவும், திருமால், வாமனராக அவதாரம் எடுத்தார். திரிவிக்கிரமராக மாறி மாவலியின் செருக்கை அடக்கினார். ஆனால், தீமையானது, தம்மைத் தொட்டவர்களையும் தீமையாக்க வல்லது. மாவலியின் செருக்கை அடக்கினாலும், திரிவிக்கிரமருக்குச் செருக்கு சேர்ந்தது. திருமகளும் பிரம்மாவும் பிறரும் தவிக்க, சிவபெருமானும் சிறுவன் வடிவில் திரிவிக்கிரமர் அருகில் சென்று, அவர் மார்பில் அடித்து வீழ்த்தினார். கீழே விழுந்த திருமாலை எழுப்பித் தருமாறு திருமகள் வேண்ட, அவ்வாறே சிவனாரும் செய்ய, எழுந்து நின்ற திருமால், தன் செருக்குக்குக் காரணம் வடிவமே என்பதையுணர்ந்து, அந்த வடிவத்தின் கூறுகளை ஆட்கொள்ளுமாறு சிவனிடம் வேண்டினார். எலும்பை எடுத்துத் தமது கதையாக்கிக் கொண்ட சிவனார், தோலையெடுத்துத் தமது சட்டையாக்கிக் கொண்டார். இவ்வாறு செருக்களிக்கும் வடிவங்களின் சட்டைகளை (புறத்தோல்தான் சட்டை; தோல்தான், வடிவத்திற்கு அழகு தருகிறது; அந்த அழகே செருக்குக்குக் காரணமாகிறது - சிவன், திருமால் சண்டையெல்லாம் இல்லை. செருக்கும் ஆணவமும் தலையெடுத்துவிடாமல் இருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தத்துவார்த்தக் கதை) அணிந்துகொண்டதால், சட்டைநாதர். சட்டைநாதர் என்பதைத்தான் சட்டநாதர் என்று சொல்கிறோம்.
சிவபெருமான், சிறுவன் வடிவில் தோன்றித் தீமைகளை அழித்து தர்மத்திற்குப் பாதுகாவலாக நிற்கும் மற்றொரு வடிவம், பைரவர். "வடு' என்றால் சிறுவன் என்றொரு பொருள் உண்டு. சிறுவன் வடிவில் தோன்றிய நிலைகளுக்கெல்லாம், "வடுகநாதர்' என்னும் பெயரை நம்முடைய முன்னோர்கள் வழங்கியிருக்கிறார்கள். இவ்வகையில், பைரவரும் வடுகநாதர் என்று அழைக்கப்படுகிறார்; சட்டநாதரும் வடுகநாதர் என்றழைக்கப்படுகிறார்.
பைரவர், சட்டநாதர் ஆகிய இருவடிவங்களுமே, சிவனாரின் உக்ர அம்சங்களாகத் தோன்றி, சாந்தத்தை நிலைநிறுத்திய வடிவங்கள்தாம். எனவே, பைரவரைச் சட்டநாதராகவும், சட்டநாதரை பைரவராகவும் வழிபடுவதுண்டு.
அருள்மிகு சட்டநாதர் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருப்பதால், "தென் சீர்காழி' என்றழைக்கப்படுகிற கொங்கராயக்குறிச்சியிலும், இவரே அஷ்டாங்க பைரவராகவும் வணங்கப்படுகிறார். தேய்பிறை அஷ்டமி நாட்கள் இவருக்கு வெகு விசேஷம். எதிர்ப்பு, பகைமை, தோல்வி, நோய் ஆகியவற்றை நீக்கி, தைரியம், வெற்றி, கண்ணியம், வல்லமை ஆகியவற்றைத் தரக்கூடியவர் இவர்.
கொங்கராயக்குறிச்சியில்தான் தாமிரா கிழக்கு முகமாக வளைகிறாள். ஆற்றின் கிழக்கு-வடக்குக் கரைகளில், மணக்கரை, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயக்குறிச்சி, வல்லநாடு, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை போன்ற ஊர்கள்; ஆற்றின் மேற்கு-தெற்குக் கரைகளில், தூதுகுழி, கருங்குளம், தாதன்குளம், வெள்ளூர் போன்ற இடங்கள்.
ஆற்றின் போக்கு, ஆதிச்சநல்லூரையும் கொங்கராயக்குறிச்சி பழைய ஊரையும் பிரித்திருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது. கொங்கராயக்குறிச்சி சிவன் கோயில் நீருக்குள் சிலகாலம் மூழ்கிப் பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. பாபநாசம் மேலணை கட்டப்படுவதற்கு முன்னர், தாமிரவருணியில் திடீரென்று வரக்கூடிய வெள்ளம், இந்தப் பகுதி ஆற்றங்கரை ஊர்களின் குடியிருப்புகளைக் காணாமல் போக்கிவிடும் என்கிறார் பொருநை ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. சற்றே வடக்கில் இருக்கும் மணக்கரை அடிக்கடி இவ்வாறு பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, நாகரிகச் செழிப்போடு தமிழர்கள் இங்கு வாழ்ந்தனர் என்னும் வரலாற்றின் தடங்கள் இவை.
கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை போன்ற பகுதிகளை விட்டுப் புறப்படும்போது, வல்லநாட்டைக் காணாமல் செல்ல முடியவில்லை. திருநெல்வேலி-தூத்துக்குடி மார்க்கத்தில் இருக்கிறது வல்லநாடு. நேரடியாகப் பொருநையாளின் கரையில் இல்லையென்றாலும், நதியின் வளமும் குன்றுகளாக நிற்கும் மலையின் நலமும் செறிந்த பகுதி. வல்லநாடு என்று இப்போதைய காலத்தில் அழைக்கப்படுகிற ஊர், சிறியதுதான் என்றாலும், இந்தப் பகுதி முழுவதுமே வல்லநாடு என்றும், இந்த நிலப்பரப்பின் வடக்கு, தெற்கு, கிழக்குப் பகுதிகள் முறையே வடவல்லநாடு, தென்வல்லநாடு, கீழ்வல்லநாடு என்று ஒருகாலத்தில் அழைக்கப்ப்பட்டுள்ளன. வல்லவர்கள் என்னும் குறுநில மன்னர்கள் ஆண்ட பகுதி என்றும் சிலர் சொல்கிறார்கள். இப்போதைய நிலையில் வல்லநாட்டில் நம் கருத்தைக் கவர்பவர்கள் - 1. வல்லநாட்டுச் சித்தர் என்றழைக்கப்பட்ட சாது சதிம்பர சுவாமிகள், 2. வல்லநாட்டு வெளிமான்கள்.
சித்தரை தரிசிப்பதற்கு முன், மான்களைக் கண்டுவிடலாமா?
கறுப்பு மான்களின் காப்பகம்: வல்லநாடு என்னும் ஊருக்குக் கிழக்கு-தென்கிழக்காக அமைந்திருக்கிறது வல்லநாடு வெளிமான் காப்பகம். 1987-இல், பாதுகாப்புச் சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டது.
ஏறத்தாழ 1642 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் காப்பகத்தில், புள்ளி மான்கள், கடமான் என்னும் மிளா மான்கள், காட்டுப் பூனை, காட்டுப் பன்றி, பாம்பு வகைகள், கீரி, தேள் வகைகள், முயல்கள், மயில்கள், குயில்கள், கழுகுகள், பருந்துகள், நாரைகள், மரங்கொத்திகள், மரகதப் புறாக்கள் என்று பலவகை விலங்குகளும் பறவைகளும் காணப்பட்டாலும், வெளிமான்களுக்கு என்றே இக்காப்பகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. வெளிமான்கள், ஆங்கிலத்தில் "பிளாக் பக்' என்றழைக்கப்படுகின்றன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.