ஸ்ரீசைலம் பரவசமூட்டும் பக்திப் பயணம்

அதிகாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வழியாக, கர்நூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் திருத்தலத்தை அடைந்தோம். 
ஸ்ரீசைலம் பரவசமூட்டும் பக்திப் பயணம்
Updated on
3 min read

அதிகாலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வழியாக, கர்நூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் திருத்தலத்தை அடைந்தோம். 

மலையடிவாரத்தில் "நேர்நாலா' என்ற இடத்திலிருந்து 49 கி.மீ. பயணம் செய்தே ஸ்ரீசைலம் மலை உச்சியை அடைய முடியும்.

குண்டூர், நந்தியால், கர்நூலிலிருந்து வருகின்ற அத்தனை சாலைகளும் சந்திப்பது இந்த நேர்நாலாவில் தான்.

முன்னாட்களில் இத்தலத்தை வந்தடைய நான்கு பாதைகள் இருந்திருக்கின்றன. கற்பாறைகளைப் பரப்பி அமைந்த கரடுமுரடான பாதைகளின் வழியேதான் பக்தர்கள் பயணித்திருக்கிறார்கள்.  

அப்போது யாத்திரிகர்கள் வரும்போது "செஞ்சு' என்னும் ஆதிவாசிகள் வில்லும் வேலும் எடுத்துக்கொண்டு துணைக்கு வருவார்களாம். அடர்ந்த காட்டுப் பாதையாக இருந்ததனால் புலி, நரி, முள்ளம்பன்றி போன்ற வனவிலங்குகள் நிறைய இருந்திருக்கின்றன.

இப்போது குரங்குகள் தவிர வேறு எந்த விலங்கையும் நம்மால் காண முடியவில்லை. 

இரவு 8 மணிக்குள் ஸ்ரீசைலத்தை அடைந்து விட்டோம். அப்போது சுவாமி புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்த காட்சி எங்களை மெய்மறக்கச் செய்தது. 

சுவாமி புறப்பாட்டின் போது ஒவ்வொரு நாளும் இங்கே நந்தீஸ்வரர் என்ற காளை கம்பீரமாக முன்னால் நடந்து செல்கிறது. அதைத்தொடர்ந்து இசைக்கருவிகள் முழங்க வேத பாராயணக்காரர்கள் வருகிறார்கள். அதன்பிறகே உற்சவர் பின் செல்கிறார்.

தினமும் இரவு ஏழரை மணி முதல் ஒன்பது மணிவரை பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. அதன் முன்னாலும் ரிஷபம் கம்பீரமாக நடந்து செல்கிற காட்சியை காணலாம்.

கருவறையில் மல்லிகார்ஜுன சுவாமி தரையோடு தரையாக காட்சி தருகிறார். கருவறைக்குள் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களே தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம். பக்தர்கள் தங்கள் தலையை லிங்கத்தின் மீது அழுத்தி வழிபடவும் செய்யலாம். 

இங்கே மருத மரத்தை "அர்ஜுன விருட்சம்' என்று அழைக்கிறார்கள்.

இங்கே இதுதான் ஸ்தல விருட்சம். அம்மன் சந்நிதி நுழைவாயிலின் இடப்புறத்தில் மருத மரமும் மல்லிகைக் கொடியும் சேர்ந்து இடம்பெற்றுள்ளன. 
"மல்லிகார்ஜுனம்' பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இரண்டாவதாக வைத்து வணங்கப்படுகிறது. அவ்வாறே சக்தி பீடங்களுள் ஒன்று என்ற பெருமையும் இதற்கு உண்டு.

ஏராளமான புராணக் கதைகள் இந்த இடத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது பரமேஸ்வரனை மணந்து கொள்ள ஆர்வம் கொண்ட ஓர் அரச குமாரியை பற்றியக் கதை:

"அந்த அரசகுமாரி எந்த நேரமும் சிவபெருமானை துதித்து வழிபட்டுக் கொண்டிருந்தாள். ஒருநாள் இறைவன் அவருடைய கனவில் தோன்றி ஒரு கருப்பு வண்டைக் காட்டி ""இது எங்கே போய் அமர்கிறதோ அங்கே சென்று எனக்காகக் காத்திரு. நான் வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்'' என்றாராம்.

அந்தப் பெண் கனவு கலைந்து விழித்துப் பார்த்தபோது கண்ணில் பட்ட ஒரு வண்டைத் துரத்திக் கொண்டு ஓடினாள். 

அந்த வண்டு இந்த ஸ்ரீசைலம் காட்டுக்குள் பறந்துவந்து ஒரு மல்லிகைப் புதரில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய மணவாளனைத் தேடி வந்த அந்தப் பெண்ணும் புதர் அடியில் அமர்ந்தாள்.

அங்கிருந்த மலைவாழ் மக்கள் அரசகுமாரிக்கு பாலும், தேனும், பழங்களும் தந்து பரிவோடு கவனித்துக் கொண்டார்களாம்.

ஒருநாள் சிவன் தன் தேவியுடன் அங்கே வந்து இந்த பெண்ணின் ஆசையைப் பற்றி தேவியிடம் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் தேவி சிவனை எள்ளி நகையாடினாராம்.

சிவபெருமான் தன் கூற்றைக் மெய்ப்பிக்க கிழவராக வேடம் பூண்டு அரசகுமாரியின் முன்னால் போய் நின்றிருக்கிறார். ""இவ்வளவு நாள் உன்னைத் தேடி அலைந்துதான் இப்படி கிழவன் ஆகி விட்டேன்'' என்று சிவபெருமான் சொன்னார். 

அரசகுமாரி அந்த நிலையிலும் மனம் தளரவில்லை. தன்னை ஆதரித்த காட்டுவாசிகள் தடுத்தும் கேளாமல் கிழவரைத் திருமணம் செய்துகொண்டார்.
காட்டு வாசிகள் தந்த விருந்தில் மாமிசம் இருந்திருக்கிறது. அதை மறுத்து சிவபெருமான் எழுந்து போக, அரசகுமாரி அவரை நோக்கி ""மல்லையா... செவிட்டு மல்லையா... நில்லையா!'' என்று கூச்சல் போட்டாராம்.

சிவன் நிற்கவில்லை. ""லிங்க வடிவிலான உன்னை மணந்து கொள்ள விரும்பியது என் தவறு... இங்கேயே நீ கல்லாகிப்போ'' என்று சாபமிட்டாளாம் அரசகுமாரி.

மல்லிகார்ஜுன சுவாமி கிழவனாக வந்ததால் "வ்ருத்த (கிழட்டு) மல்லையா' ஆகிவிட்டார். 

இதனைக் கண்ட பார்வதி தேவி கோபமுற்று அரச குமாரியை நோக்கி ""வண்டினைத் துரத்தி வந்த நீயும் வண்டாகவே ஆகி விடு'' என்றாள். அரச குமாரியும் பிரமராம்பிகை ஆகிவிட்டாள். "பிரமரம்' என்றால் "வண்டு' என்று பொருள். 

சாபம் பெற்ற சிவலிங்க வடிவத்தை ஆதியில் இங்குள்ள செஞ்சு பழங்குடியினர் வழிபட்டு பிற்காலத்தில் அதுவே கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளது' என்று ஒரு குறிப்பும் உள்ளது. 

இந்த கோயிலில் கிழட்டு மல்லிகார்ஜுனர் இருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இது ஒரு பழைமையான மருத மரத்தின் கல் வடிவம் (ஃபாசில்) என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 

இந்த ஆலய வளாகத்தில் உள்ள மிகப் பழைமையான வடிவம் இதுதான் என்றும், இதன் வயது உத்தேசமாக 70,000 ஆண்டுகள் என்றும் கருதுகிறார்கள். கிருதாயுகத்தில் இருந்த அசுர மன்னன் இரணியகசிபு அஹோபிலத்தை தன்னுடைய சபா மண்டபமாகவும், அங்கிருந்து 220 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீசைலத்தை வழிபாட்டிடமாகவும் கொண்டிருந்தான் என்றும் நம்பப்படுகிறது.
ஸ்ரீஆதிசங்கரர் இங்கே வந்து தவம் மேற்கொண்டிருக்கிறார். அவர் இங்கு தவமிருந்து இயற்றிய "சிவானந்த லஹரி'யில் இத்தளத்தின் அதிதேவதையான பிரமராம்பிகையைப் பற்றிப் பாடியிருக்கிறார். இந்த அம்பிகையின் வடிவம் மகிசாசுரமர்த்தினி வடிவம்.

பழங்காலத்தில் இந்த தேவிக்கு விலங்குகளை பலியிட்டு இருக்கிறார்கள். ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பிகையின் சந்நிதி எதிரே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

அம்பிகையின் உக்கிர ஸ்வரூபத்தை ஆதிசங்கரர் தரிசித்ததாகவும் அந்த உக்கிரத்தைத் தணிப்பதற்காகவே கருவறையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்ததாகவும் இங்கேயுள்ள நாட்டுப் பாடல்களில் செய்தி இடம் பெற்றிருக்கிறது. 

இப்போதும் பூஜை எல்லாம் இந்த ஸ்ரீ சக்கரத்திற்குத்தான். தம்பதிகளாக அமர்ந்து ஸ்ரீசக்கரத்திற்கு குங்கும அர்ச்சனை செய்யலாம். மூலவருக்கு அலங்காரங்கள் மட்டுமே. 

காலையில் ஆரத்தி, அபிஷேகம் ஆனபிறகு கவசமிட்டு அம்பிகையை பிரமராம்பிகையாக அலங்கரித்து விடுகிறார்கள். அம்பிகையை ஒரு அரசகுமாரியாகவே பாவித்து நான்கு வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்களிலிருந்து சிறு பகுதிகளை பாராயணம் செய்கிறார்கள்.

பிரமராம்பிகையின் கருவறையைச் சுற்றி திருத்தமான அழகிய சிற்பத் தூண்களை அமைத்திருக்கிறார்கள். இந்த சிற்பங்கள் அனைத்தும் அஹோபிலம் அருகில் உள்ள "ஆர்லகாட்டா'வில் இருந்து வந்த சிற்பிகள் உருவாக்கினார்களாம். 

ஸ்ரீசைலம் தலத்தில் ஆயிரம் மீட்டருக்குக் கீழே நல்ல மழைக்காடுகளின் வடதிசையை நோக்கிப் பாயும் கிருஷ்ணா நதி "பாதாள கங்கை' என்ற பெயரில் சலசலத்து ஓடுகிறது.

மலையில் இருந்து 350 படிக்கட்டுகளில் கீழே இறங்கிப் பாதாள கங்கையைச் சென்றடைவது காலை நேரங்களில் வெகு சுகமான அனுபவம்.

வழியெங்கும் வாழைமட்டைத் துண்டுகளிலும், தர்மாகோல் கிண்ணங்களிலும் செம்பருத்தி மலரை மையமாக வைத்து பலவகை மலர்களை நிரப்பி விற்பனை செய்கிறார்கள். 

இதை வாங்கி அலுங்காமல் எடுத்துப்போய் பாதாள கங்கையின் மெளனமான நதியோட்டத்தில் பக்தியோடு அர்ப்பணித்து வழிபடுகிறார்கள்.

நீத்தார் கடன் உள்பட எல்லாவற்றுக்கும் இந்த பாதாள கங்கை படித்துறையில் இடமுண்டு. பக்தர்களின் வசதிக்காக மேலே போகவும் கீழே வரவும் "ஏரியல் ரோப்வே' கம்பிப் பாதை கூண்டு வசதியும் ஏற்படுத்தியுள்ளார்கள். நடக்க முடியாதவர்கள் இதில் பயணிக்கலாம்.

அமைதியாக சலசலத்து ஓடுகிற கிருஷ்ணா நதியின் அழகைக் கூடுதலாக்க, படித்துறைக்கு அருகில் வட்ட வட்டமான பரிசல்கள், மோட்டார் படகுகள், கம்பி பாதைக் கூண்டுகள், வண்ண வண்ண மலர்களை நதிக் காணிக்கைக்காக விற்பனை செய்யும் பெண்கள் என சுற்றுலாப் பயணிகளின் உற்சாகத்தை அதிகப்படுத்துகிறது மனதை மிகவும் மகிழ வைத்த இனிய அனுபவம் இந்த ஸ்ரீசைலம் பயணம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com