ஹுதைபியா உடன்படிக்கை

இருவருக்கிடையில், இரு குழுக்களுக்கிடையில், இரு இனங்களிடையில், தனியார் துறை, பொதுத்துறை, வணிகத் தொழில் குழும உறுப்பினர்களுக்கிடையில், குழுமங்களுக்கு இடையில், நாடுகளுக்கு
Updated on
3 min read


இருவருக்கிடையில், இரு குழுக்களுக்கிடையில், இரு இனங்களிடையில், தனியார் துறை, பொதுத்துறை, வணிகத் தொழில் குழும உறுப்பினர்களுக்கிடையில், குழுமங்களுக்கு இடையில், நாடுகளுக்கு இடையில் நிபந்தனைகள் விதித்து ஏற்படுத்துவதே உடன்படிக்கை. அவ்வாறு ஏக இறைக் கொள்கையை ஏந்தல் நபி (ஸல்) எடுத்துரைத்த துவக்கத்தில் தூய நபி (ஸல்) அவர்களுக்கும் இறைத் தூதை ஏற்காது இறுமாப்புடன் மறுத்த குறைஷிகளுக்கும் இடையே ஏற்பட்டதே "ஹுதைபியா உடன்படிக்கை'.
குறைஷியரின் நடவடிக்கைகள் உடன்படிக்கையை உடைத்ததால் கிடைத்ததே கிருபையுள்ள அல்லாஹ்வின் திருவருளால் பெருமான் நபி (ஸல்) அவர்களின் மகத்தான மக்கா வெற்றி. இதனை இறை மறை குர்ஆனின் 48-1 -ஆவது வசனம் விரிவாக விளக்குகிறது. ஹுதைபியா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் அற்புதம் விளைவித்த கஃபாவில் கற்சிலைகளை உடைத்த ஒரு பொற்புடைய சாசனம்.
மதீனாவிலும் மதீனாவைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்த (1400) ஓராயிரத்து நானூறு தோழர்கள் தோழமை நபி (ஸல்) அவர்களின் தலைமையில் மக்காவிற்கு ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். மதீனா நிர்வாகம் நுமைலா இப்னு அப்துல்லா (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்து சென்றார்கள். அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்கள். குர்பானி கொடுப்பதற்காக எழுபது ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள். துல்ஹுலைபாவில் இஹ்ராம் கட்டினார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தலைமையில் வரும் தோழர்களைத் தடுத்து திருப்பி அனுப்புவதற்காக மக்கா குறைஷிகள் காலித் இக்ரிமா ஆகியோர் தலைமையில் இருநூறு குதிரை வீரர்களை அனுப்பினர். உஸ்பான் என்ற கிராமத் தலைவர் பிஷர்பின் சுப்யான் அல் கஃபி மூலம் இச்செய்தியை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹம் ஸத் இப்னு அம்ரு வழிகாட்டலில் கரடு முரடான குறுகலான பாதை வழியாக ஹுதை பியாவை அடைந்தனர். காலித் இக்ரிமா தலைமையில் தடுக்க வந்த குறைஷி வீரர்கள் பாதை மாறியவர்களைப் பாராது ஏமாற்றத்துடன் மக்காவிற்குத் திரும்பினர்.
ஹுதைபியா மக்காவிலிருந்து ஜித்தா செல்லும் வழியில் ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹுதைபியாவை அடைந்ததும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏறிவந்த ஒட்டகம் படுத்துவிட்டது. எழ மறுத்தது. அதனால் அனைவரும் அங்கே கூடாரம் அமைத்துத் தங்கினர்.
பனூ குஸாஅ என்ற கூட்டத்தினரின் தலைவர் புதைல் பின் வரகா அல் கு ஷாயி குறைஷிகளுடனும், இஸ்லாமியர்களுடனும் நட்புடையவர். நந்நபி (ஸல்) அவர்களையும், தோழர்களையும் குறைஷிகள் ஹஜ் செய்ய மக்காவிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். மா நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் மதீனாவிற்குத் திரும்புவதே விரும்பத்தக்கது - என்று கூறினார். 
நாங்கள் போரிட வரவில்லை புனிதப்பயணம் வந்தோம். குறைஷிகள் நாங்கள் ஹஜ் செய்வதை விரும்பவில்லை என்றால் உம்ரா செய்து திரும்ப அனுமதி கேட்டு பூமான் நபி (ஸல்) புதைலையே தூது அனுப்பினார்கள்.
பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதினின்றும் பிறழ மாட்டார்கள் என்பதை உளமார உணர்ந்தும் உன்மத்தம் கொண்ட குறைஷிகள் அனுமதி மறுத்தனர்.
இனிய நபி (ஸல்) அவர்கள் இரண்டாவதாக பனூ ஆமிர் பின்லு அய் இன  மிக்ராஸ் பின் ஹப்ஸ் என்பவரை அனுப்பினார்கள். அவருக்கும் இணங்கவில்லை இறுமாப்புடைய குறைஷிகள். 
மூன்றாவதாக கினானா கோத்திர அஹாபீஸ் பதாவிகளின் தலைவர் அல்ஹீலைல் அல் பின் அல்கமாவை அனுப்பினார்கள். வாதிட்ட அல்கமாவை அவமதித்து அவதூறு பேசினர் குறைஷிகள். அல்கமா ஆத்திரத்துடன் திரும்பினார். 
நந்நபி (ஸல்) அவர்கள் நான்காவதாக தாயிபிலுள்ள பனூ தகீப் வர்க்க பிரமுகர் உர்வா பின் மஸ்வூத்தை அனுப்பினார்கள். அவரின் ஆலோசனைகளையும் ஏற்கவில்லை ஏடாகூட மூட குறைஷிகள்.
அடுத்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர் கரஷ் பின் உமய்யா (ரலி) அவர்களைத் தூதுவராக அல்தஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். குறைமதி குறைஷிகள் ஒட்டகத்தின் காலை வெட்டியதோடு அவரையும் கொலை செய்ய முயன்றனர். கரஷ் பின் உமய்யா (ரலி) அவர்கள் தப்பி வந்தார்கள். 
குறைஷிகள் எண்பது தரமிகு வீரர்களை விழுமிய நபி (ஸல்) அவர்களையும், தோழர்களையும் சிறைப்பிடித்து வர அனுப்பினர். சீறி வந்த வீரர்களை மீறாது பிடித்து கைது செய்தனர், நபிகள் (ஸல்) அவர்களின் நற்றோழர்கள். வீரர்களின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்தார்கள் செம்மல் நபி (ஸல்) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் மருமகனான தோழர் உதுமான் (ரலி) அவர்கள் இறுதியாகத் தூது சென்றார்கள். உதுமான் (ரலி) அவர்களை மட்டும் உம்ரா செய்ய அனுமதிப்பதாகவும், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் எகத்தாளமாகப் பேசினர் ஏக இறைக் கொள்கையை ஏற்காத மூர்க்கக் குறைஷிகள். இஸ்லாமியர்களின் வாதத் திறமை வாகான அனுபவ முதிர்ச்சி, அறிவாற்றல் கண்டு அஞ்சிய குறைஷிகள் வாதத்தில் வல்லவரான சுஹைல் பின் அம்ரு என்பவரைத் தூது அனுப்பி உடன்படிக்கை செய்ய உடன்பட்டனர்.
தோழர் அலி (ரலி) அவர்களை உடன்படிக்கை எழுதப் பணித்தார்கள் பாச நபி (ஸல்) அவர்கள். உடன்படிக்கை தொடக்கமாக "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம்' என்று எழுத குறைஷிகள் மறுத்து, "அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம்' என்று குறைஷிகள் விரும்பியபடி எழுதினார்கள்.
இறைத்தூதர் முஹம்மதுவும் என்பதை குறைஷிகள் ஏற்காததால் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுவும்,  அம்ருவின் மகன் சுஹைலும் செய்துகொண்ட உடன்படிக்கை என்று எழுதினார்கள்.
ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு, துல்கஃதா மாதம் பிறை ஒன்றில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. 23. 6. 2020-இல் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்டு 1435 ஆண்டுகள் ஆகின்றன. 
உடன்படிக்கையின்படி ஹுதைபியாவில் மொட்டையடித்து, குர்பானி கொடுத்து மதினாவிற்குத் திரும்பினர் திரு நபி (ஸல்) அவர்களும் தோழர்களும்.
உடன்படிக்கையை உள்ளபடியே பின்பற்றினார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். உடன்படிக்கைக்கு உடன்படாது ஊறு விளைவித்து மாறுபட்டு நடந்த மட குறைஷிகளை மடக்கி, மக்காவை வென்றார்கள் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள். எண்ணற்ற தொல்லைகளைத் தொடர்ந்து எந்நாளும் எப்பொழுதும், ஓயாது ஒழியாது பொல்லாங்கு செய்த கொலை வெறி குறைஷியர்களை இறைத் தூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் மறைவழியில் மனிதநேய மாண்புடன் மன்னித்தார்கள். புனிதர்களாக மாறி புண்ணிய வாழ்வு வாழ கண்ணிய வழியைக் காட்டினார்கள். அதனால் இன்று மக்கமா நகரம் மிக்கச் சிறப்புடன் உலக மக்கள் லட்சக்கணக்கில் கூடித் தக்க முறையில் வழிபடும் தலமாக விளங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com