
சூரிய பகவான்
கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி. இங்குள்ள சூரியனார் கோயிலில் பரிகார பூஜை செய்வோர் கோதுமை வைத்து படைக்கின்றனர். புதிய தொழில் தொடங்கவும், தடைகள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர்.
சந்திர பகவான்
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது திங்களூர். இங்குள்ள கோயிலில் சந்திர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. மன பயம், வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கவும் இங்கு நெல், பச்சரிசி வைத்து வழிபடுகிறார்கள்.
செவ்வாய் பகவான்
சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. சுவாமி பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மன் தையல்நாயகி. நோய்கள் தீர இங்கு வழிபாடு செய்கின்றனர். மாவிளக்கு வைத்து வழிபட்டால் நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்பது ஐதீகம்.
புத பகவான்
மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவெண்காட்டில் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் புத பகவானை வழிபட்டால் படிப்பில் ஆர்வம் ஏற்படும் என்பது ஐதீகம். இங்கு பச்சைப்பயிறு வைத்து படைக்கின்றனர்.
குரு பகவான்
கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் உள்ளது ஆலங்குடி. இங்குள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பகவான் சந்நிதி உள்ளது. குரு பகவானை வழிபட்டு அன்னதானம் செய்தால் தடைகள் விலகும், வேலை வாய்ப்புகள் உண்டாகும் என்பது ஐதீகம். மஞ்சள் மற்றும் கடலை தானியங்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
சுக்கிர பகவான்
கும்பகோணம் அருகே உள்ளது கஞ்சனூர். இங்குள்ள சிவன் கோயிலில் சுக்கிரனுக்கு தனி சந்நிதி உள்ளது. சுக்கிர பகவானை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம், களத்திர தோஷம் நிவர்த்தி அடையும் என்பது நம்பிக்கை. வெள்ளைநிற வஸ்திரம் மற்றும் மொச்சை பயிறு வகைகள் வைத்து வழிபடுகிறார்கள்.
சனி பகவான்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நியாயமான வழக்குகளில் வெற்றி அடையலாம் என்பது நம்பிக்கை.
ராகு பகவான்
கும்பகோணம் அருகே உள்ளது திருநாகேஸ்வரம். இங்குள்ள சிவன் கோயிலில் ராகுவுக்கு தனி சந்நிதி உண்டு. ராகு கால பூஜைகள், பாலாபிஷேகம், அன்னதானம் செய்து வழிபட்டால் திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.
கேது பகவான்
மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் தருமர்குளம் அருகில் உள்ளது கீழப்பெரும்பள்ளம். இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் கேதுவுக்கு தனி சந்நிதி உள்ளது. கேதுவுக்கு விசேஷ பூஜைகளும், அன்னதானமும் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.