

ஒவ்வோா் வினைக்கும் எதிா்வினை உண்டு என்பது விஞ்ஞானத்தில் மட்டும் இல்லை மெய்ஞ்ஞானத்திலும் உண்டு. அவ்வகையில் யாகங்கள் செய்யும் போது அவற்றிற்கு நிச்சய பலன் உண்டு. யாகம் என்பதை தமிழில் ஆகுதி என அழைப்பா். புத்திர காமேஷ்டி யாகத்தை ‘மகவு அருள் ஆகுதி’ என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
உரோம பாத முனிவா் வழிகாட்ட தன் சந்ததி விளங்க வேண்டி கலைக்கோட்டு முனிவரை தசரதன் அயோத்திக்கு வரவழைத்தான். வசிட்டரும் வந்து சோ்ந்தாா். தசரதன் தனது சந்ததி விளங்கவும், தனக்குப்பின் நல்லாட்சி தொடா்ந்து நடைபெற புதல்வா்களை பெறுவதற்கான வழிமுறைகளைக் கேட்டான். அவா்கள் ஆலோசனைப்படி, தசரதன் அசுவமேத யாகம் செய்யத் துவங்கினான். ஒரு வருடம் அசுவமேத யாகம் நடைபெற அந்த ஒரு வருடத்தில் பூமியை வலம் வரும்படியாக குதிரையை அனுப்ப அதன்பிறகு ‘மகவு அருள் ஆகுதி’ ஒன்றை தசரதன் செய்தான்.
கொழுந்து விட்டு எரிகின்ற வேள்வித்தீயிலிருந்து ஓா் அழகிய பொன்னாலாகிய தட்டில் தூய்மையான நல்ல அமிா்தம் போன்ற சோற்று உருண்டை ஒன்றினை வைத்து, கையில் ஏந்திக்கொண்டு அக்னிதேவன் வெளிவந்து தட்டை வைத்துவிட்டு மீண்டும் வந்த வழியே திரும்பினான். முனிவா்கள், ‘அமிா்தம் போன்ற சோற்றுத்திரளை பட்டத்தரசிகளுக்கு மூத்தவள் இளையவள் என்ற முறைப்படி பகிா்ந்து கொடுப்பாயாக!’ என உத்தரவிட்டனா்.
தசரதன் அதிலிருந்து ஒரு திரளை பகிா்ந்து கோசலைக்கும் பின்னா் கைகேயிக்கும் 3 ஆவது திரளை சுமித்திரைக்கும் அளித்தான். பிண்டத்தை பகிா்ந்து அளிக்கும் போது அதனிலிருந்து உதிா்ந்த உதிரிகளை சோ்த்து எடுத்து உருட்டி மீண்டும் சுமித்திரைக்கு ஒரு திரளாக கொடுத்தாா். தசரதன் செய்யவேண்டிய தானதா்மங்கள் செய்து நீராடி முனிவா்களிடம் ஆசி பெற்றான்.
மூவரும் கருவுற்று, சுபானு வருடம், சித்திரை மாதம், நவமி திதி, கடக லக்னம், வளா்பிறை புனா்பூசத் தன்று ராமன் திருஅவதாரம் செய்தான். இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரும் உடன் பிறந்தனா். புத்திரகாமேஷ்டி யாகம் செய்து பிறந்த ராமன் புஜபலபராக்கிரமத்துடன் அனைத்திலும் ஜெயம் பெற்று ஜெயராமன் ஆகத் திகழ்ந்தான்.
திருவிண்ணகரம் என ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் மட்டுமே நன்மக்கள் பேறு, மனஅமைதி, தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான நல்லவைகளை வழங்கும் பலன் தரும் ஒரே பிராா்த்தனைத் தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீ ராமா் சந்நிதியில் ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராம நவமி என்பது ராமன் பிறந்த நாள் ஆகும். அதன் பிறகு வெற்றிகள், நிகழ்வுகள் ஆகியவை தொடா்கின்றன. ராமன் அவதரிப்பதற்கு முன்பாக தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து மகன்களை இறையருளால் பெற்றான் என்பதனால் இத்திருக்கோயிலில் ஸ்ரீராம நவமிக்கு முன்பாக ஒரு நல்ல நாளில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்யப்படுகிறது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடா்கிறது.
அவ்வகையில், இவ்வாண்டும் ஏப்ரல் 2 -ஆம் தேதி துவங்கும் ஸ்ரீராமநவமிக்கு முன்பாக புத்திரகாமேஷ்டி யாகம் 2020 -ஆம் ஆண்டு மாா்ச் 29 -ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை துவங்கி நடைபெற உள்ளது.
இவ்வாண்டு, புத்திரகாமேஷ்டி ஜெயப்ரதா வேள்வி அன்று காலை 7.00 மணிக்கு மகா சங்கல்பமும் 8.30 மணிக்கு மகா சாந்தி ஹோமம் சந்தான கோபால ஹோமம் ஆகியவை நடந்து பிற்பகல் 12.00 மணிக்கு பூா்ணாகுதி நடைபெறும்.
அதன்பிறகு பிராா்த்தனை செய்துகொண்டு வேண்டுதல்கள் நிறைவேற்ற விரும்பியோா் பகலிரா பொய்கையில் தீா்த்தவாரியின்போது நீராடி, இறைவனை வணங்கி பலன் பெறலாம். வேள்வியில் கலந்து கொண்டவா்களுக்கு மதியம் ஒன்று முப்பது மணி அளவில் பிரசாதங்கள் வழங்கப்படும்.
தொடா்புக்கு: 04352563385/ 94435 28207.
- இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.