
ஆம்..! திருக்குர்ஆன் உலகின் ஓர் அற்புதம் - அதிசயம் ஆகும். காரணம், அதனை ஜிப்ரயீல் (அலை) வாயிலாக இறுதி நபியான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளியுள்ளதில் அத்தியாயம் - 18 வசன எண்: 109 -இல் ""நபியே நீர் கூறும்! என் இறைவனுடைய வார்த்தைகளை, அவற்றில் எதிரொலிக்கும் கருத்துகளை கடல் நீரையே மையாகக் கொண்டு எழுதினாலும் அவைகளை எழுதுவதற்குள் அந்தக் கடல் நீரான மை தீர்ந்துவிடும். அதைப் போல தொடர்ந்து எழுதுவதற்கு இன்னொரு கடல் நீரான மையையே உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே..!'' என்று உலகிற்கு சவால் விடுத்துக் கூறியுள்ளான்.
அப்படி அருளப்பட்ட 114 அத்தியாயங்களில் பல்வேறு இடங்களில் ""நபிகள் வாழ்ந்த 13 வருடங்கள் மக்கா மற்றும் 10 வருடங்கள் மதீனாவிலும் அந்தந்த காலகட்டத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நபிகளுக்கு சிறுகச் சிறுக இறக்கி அருளினோம்'' என்றும் கூறியுள்ளான் (76 : 23).
அத்தியாயம் -2 வசன எண்: 2 -இல் ""இந்த குர்ஆன் அல்லாஹ்வின் திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தி உடையோருக்கு இது நிச்சயமாக நேர்வழிகாட்டியாகும்'' என்று உறுதிபடுத்தியுள்ளான்.
""நபிகள் நாயகம் ஓர் உம்மீ; அதாவது எழுதத் தெரியாது, எழுதியதைப் படிக்கத் தெரியாது. நபிக்கு தானே ஓர் ஆசானாக இருந்து முழு குர்ஆனை கற்றுக் கொடுத்தோம்'' என்று அத்தியாயம் - 7 வசன எண்: 157 -இல் அருளியுள்ளான்.
""நபியே! நாம் உம் மீது இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆனுக்கு யாரையும் சாட்சியாக வைத்துக் கொள்ளவில்லை'' என்றும் குறிப்பிட்டுள்ளான்.
அத்தியாயம் - 96 "சுரா அலஃக்' என்பதில் முதல் வசனமாக ""யாவற்றையும் படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக''.
அதற்கு அடுத்த வசனத்தில் ""அலஃக் (ரத்தக்கட்டி) என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான். மீண்டும் ஓதுவீராக. உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மேலும் மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்'' என்றும் அருளியுள்ளான். இது எழுதப் படிக்கத் தெரியாத நபிக்கு இத்துணை அற்புதமான வேத நூலை அருளியிருப்பதும் ஓர் அற்புதமே.
மேலும் ""நாமே உம் மீது இறக்கி அருளினோம். நாமே அதனைப் பாதுகாப்போம்'' என்றும், ""உலகில் உள்ளோர் யாரும் இதுபோல் ஓர் அத்தியாயம் அல்லது ஒரு வசனத்தையாவது எழுதிக் கொண்டு வாருங்கள்'' என்றும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சவால் விட்டு தனது திருமறையில் கூறியுள்ளான்.
""நாம் உணவு அளிக்க பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த ஓர் உயிரினமும் இப்பூமியில் இல்லை'' என்று அத்தியாயம் -11 வசன எண்: 6 -இல் அருளியுள்ளபடிக்கு, உலகில் உள்ள கோடானுகோடி உணவு உட்கொள்கின்ற உயிரினங்களில் நாமும் ஒருவராக இருக்கிறோம்'' என்பது இறைமறைக் கூற்றின் விளக்கமாகும்.
""இதற்கு அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்'' என்றும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளான். நன்றி செலுத்துவது என்பது அவனை வணங்கி "இபாதத்து' செய்வதாகும்.
""என்னை விட்டு வேறு யாரிடமும் உதவி தேடாதீர்கள்'' என்று அத்தியாயம் -1 வசன எண்: 4 -இல் கூறியுள்ளான். அது "இய்யாக்க நஃபுது வய்யாக்க நஸ்தஹுன்' என்பதாகும்.
குர்ஆன் என்றாலே ஓதப்பட்டது. அல்லாஹ் ஜிப்ரயீலுக்கும், ஜிப்ரயீல் நபிகளுக்கும் ஓதி காண்பிக்கப்பட்டது. மேலும் இது ஓதக் கூடியது. ஓதி நிறைவு செய்தபின் மீண்டும் ஆரம்பித்து மீண்டும் மீண்டும் ஓதுவது என்பதாகும். "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்' என்ற முதுமொழிக்கிணங்க புனித வேத நூலை தினந்தோறும் ஓதி வருவோமாக..!
-பா. ஹாஜி முஹம்மது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.