பொன்மொழிகள்!

மனதிலிருந்து காமம்  பணத்தின்மீது ஆசை (காமினீ  காஞ்சனம்) அகலுமானால் மனம் இறைவனை நாடும்; அவரிடம் சென்று ஒட்டிக்கொள்ளும்.
பொன்மொழிகள்!
Updated on
1 min read

மனதிலிருந்து காமம்  பணத்தின்மீது ஆசை (காமினீ  காஞ்சனம்) அகலுமானால் மனம் இறைவனை நாடும்; அவரிடம் சென்று ஒட்டிக்கொள்ளும். கட்டுண்டவனே முக்தனாக முடியும். இறைவனிலிருந்து விலகுபவன் கட்டுண்டவன் ஆகிறான். தராசின் கீழ் முள் மேல் முள்ளிலிருந்து எப்போது விலகும்? காமினி  காஞ்சனம் என்ற பளு தராசுத்தட்டை அழுத்தும்போது!

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

அண்டத்தில் இருக்கும் எல்லாவற்றிலும் உன் ஆத்மாவே நிறைந்திருக்கிறது, எங்கும் எதிலும் எல்லாக் காலத்திலும் ஆத்மா இருந்து வருகிறது, வேறுபாடுகள் எதுவும் ஆத்மாவுக்குக் கிடையாது.  மனம் தூய்மையடைந்தால் ஆத்மா தன்னைக் கடந்து சிவத்தில் கலந்துவிடுகிறது.

-அவதூத கீதை

ஒரு மனிதன் நான்கு யுகங்களுக்கு உயிர் வாழ்ந்தாலும் சரி, இல்லை அதைப் போல் பத்து மடங்கு காலம் வாழ்ந்தாலும் சரி; சகல ஜீவராசிகளும் அவனை அறிந்திருந்தாலும் சரி, மதித்துப் பின்பற்றினாலும் சரி; அனைத்து உயிர்களும் அவனை வானளாவப் புகழ்ந்தாலும் சரி, அதற்கும் மேலே அவன் மேன்மைகள் அடைந்தாலும் சரி; தெய்வம் கருணைப் பார்வையுடன் அவனைப் பார்க்காவிட்டால் எல்லாமே வீண்தான்.

 -குருநானக்

எவன் பொறாமை அற்றவனாக இருக்கிறானோ, பிறரிடம் தயை காட்டுகிறானோ, மற்றவர்களிடம் விரோதம் செய்துகொள்ளாமல் இருக்கிறானோ, எதையும் மிகைப்படுத்திச் சொல்வதில்லையோ, விவாதத்தைப் பொறுத்துக் கொள்கிறானோ  அவனே எப்போதும் புகழோடு வாழ்வான்.

-விதுரநீதி

ஹே லக்ஷ்மி! அசுரர்களை அழித்த நாராயணனைத் தியானம் செய்பவளே! பக்தர்களின் சுகதுக்கங்களை உன்னுடையதாக நினைத்துக் காப்பாற்றுபவளே! என்னைக் காப்பாற்றி அருள் புரியும்படி உன்னிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

-மகான் புரந்தரதாசர்

எப்போதும் நேர்மையும் தூய்மையும் நிறைந்த பக்தி வாழ்க்கை வாழ வேண்டும்;  பகவானது நாமங்களை உள்ளன்புடனும் பக்தி சிரத்தையுடனும் உச்சரிப்பதே மிகவும் சிறந்தது. 

-ஸ்ரீ கிருஷ்ணசைதன்யர்

எத்தகைய பக்தியைக் கொண்டிருப்பவர்களுக்கும் மோட்சம் அளிக்கக் கூடியவன் ஸ்ரீ ராமபிரான். ஒருவனுக்கு அன்பே உருவம் கொண்டவனாகிய ஸ்ரீ ராமபிரானிடம் பக்தி தோன்ற வேண்டும். அவ்விதம் தோன்றாவிட்டால் அவனைப் பெற்ற தாய், "தாய்மை' என்ற பெருமையைப் பூரணமாக அடையாதவள்தான். அத்தகையவள் சத்துவ குணம் நிறைந்த மகனை விரும்பாமல், வெறும் காம வாசனைக்காகத் தன் உடலைக் களங்கப்படுத்திக் கொண்டவள் ஆகிறாள்.

-துளசிதாசர் (விநயபத்ரிகா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com