

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே
(பாடல் : 2716)
பொருள் : தீய வினைகளைச் செய்யும் பாவிகள் சிவ, சிவ எனச் சொல்ல மாட்டார்கள். சிவ, சிவ என சிவனுடைய நாமத்தைச் சொன்னால் நாம் செய்த பாவங்கள் போய் விடும். சிவ, சிவ எனச் சொல்லிட மனிதர்களும் தேவர்கள் ஆகலாம். சிவ,சிவ என சிவன் நாமத்தைச் சொன்னால் சிவப்பேறு கிட்டும்.
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், சிவபெருமானுடைய நாமத்தைச் சொன்னால், அவை நம்மை ஒன்றும் செய்யாது.
தேவார மூவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் நமசிவாயப் பதிகம் பாடியுள்ளனர்.
"மலையைப் போல பெரிய பாவங்களைச் செய்தவர்களும், சிவபெருமானுடைய திருநாமத்தை இடைவிடாது ஓதி வந்தால், கொடிய வினைகள் யாவும் நீங்கப் பெறுவர். மிகுந்த செல்வச் செழிப்பையும் பெற்று இன்புறுவர்' என்பதை...
"மந்திரம் அன பாவங்கள் மேவிய
பந்தன் அவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமசிவாயவே'
என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான்.
பல்லவ மன்னன், அப்பர் சுவாமிகளை சுண்ணாம்பு காளவாயில் இட்டான். நஞ்சு கலந்த சோறை ஊட்டினான். யானையை ஏவி விட்டான். அனைத்திலிருந்தும் தப்பினார். கல்லோடு கட்டி கடலில் வீசினான்.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயமே'
என அவர் பாடிய நமசிவாயப் பதிகம் அவரைக் காப்பாற்றியது.
மாணிக்கவாசகரும் திருவாசகத்தைத் தொடங்குகிற போதே, "நமசிவாய வாழ்க' என்றுதான் தொடங்குகிறார்.
"நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே' என்பது சுந்தரர் வாக்கு.வள்ளலாரும்...
"பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே...'
என்கிறார்.
அவ்வளவு சிறப்புக்குரியது நமசிவாய என்னும் நாமம். எப்போதும் சிவனுடைய நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் அதுவே பழக்கமாகி விடும்.
ஒரு ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் எல்லோரையும் எல்லாவற்றையும் "சிவம்' என்றே சொல்வார். அதில் உறுதியாக இருந்தார். அந்த ஊரில் இரண்டு இளைஞர்கள் எப்படியாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என முயற்சி செய்தார்கள். அவர் முன்னால் சண்டை போடுவோம். பஞ்சாயத்து அவரை சாட்சிக்கு அழைக்கும்போது, நம் பெயரை அவர் சொல்லித்தானே ஆக வேண்டும் என நினைத்தார்கள்.
அவர் முன்னால் இருவரும் சண்டை போட்டனர். அவர்கள் நினைத்தது போலவே பஞ்சாயத்துத் தலைவர் இவரிடம் வந்து, "இதில் யார் அடித்தது...? இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள்.
உங்கள் பதிலைப் பொருத்தே தீர்ப்பு சொல்ல வேண்டும்' என்ற போது, இளைஞர்கள் இப்போது சாமியார் நம் பெயரை சொல்வார், நாம் ஜெயிக்கப் போகிறோம் என நினைக்க.... சாமியாரோ.... ""இந்த சிவம் அந்த சிவத்தை சிவ... பிறகு, அந்த சிவம் இந்த சிவத்தை சிவ. அந்த சிவமும், இந்த சிவமும் சிவ சிவ...'' என பதில் தந்தார். இளைஞர்கள் வெட்கித் தலை குனிந்தார்கள்.
எந்த சந்தர்ப்பத்திலும் நமசிவாயத்தை மறக்க மாட்டேன் என பாடியதோடு அப்படியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள் நம் அருளாளர்கள்.
"சிவசிவ என சிவன் நாமத்தைச் சொல். உன் வினைகள் அனைத்தும் போய் விடும். நன்மைகள் மட்டுமே உன் வாழ்வில் நடக்கும்' என்கிறார் திருமூலர்.
-தொடரும்-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.