பொருநை போற்றுதும்! - 111

கொற்கை - பாண்டிய நாட்டின் பெருமைக்குரிய துறைமுக நகரம்: கொற்கைக்கும் பாரசீகம், அரேபியம், பொனீஷியா, எத்தியோப்பியா, கிரேக்கம், ரோமானியம் போன்ற மேலை அரசுகளுக்கும் சீனம், பர்மா போன்ற
பொருநை போற்றுதும்! - 111


கொற்கை - பாண்டிய நாட்டின் பெருமைக்குரிய துறைமுக நகரம்: கொற்கைக்கும் பாரசீகம், அரேபியம், பொனீஷியா, எத்தியோப்பியா, கிரேக்கம், ரோமானியம் போன்ற மேலை அரசுகளுக்கும் சீனம், பர்மா போன்ற கீழை அரசுகளுக்கும் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. முத்துகளும் சங்குகளும் சங்கால் செய்யப்பட்ட அணிமணிகளும் நிரம்ப ஏற்றுமதியாகின. யானைத் தந்தம், கருங்காலி, சந்தனம், மயில் தோகை, கிராம்பு, ஏலம், பட்டு, பருத்தி போன்றவையும் இந்தத் துறைமுகம் வழியாக அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ரோமானியப் பேரரசர்கள் பலர், கொற்கைத் துறைமுகம் வழியாகப் பாண்டி மன்னர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அரிசி, இஞ்சி, மயில் தோகை போன்ற பொருட்கள் இங்கிருந்து அவர்களின் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரிசி என்பது ரிசி என்றும் இஞ்சிவேர் என்பது ஸின்ஸிபேர் என்றும் தோகை என்பது துக்கி என்றும் ஹீப்ரு உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு இத்தகைய வணிகத் தொடர்பே காரணம் எனலாம். 

கி.பி. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, கொற்கை தனது சிறப்பை இழந்தது. இதற்கு முக்கியமான காரணம், கடல் பின்வாங்கல் எனலாம். பொருநையாற்று (அப்போதைய) முகத்துவாரத்தில் வந்து விழுந்த மண்ணும், கடலின் மாற்றங்களால் ஏற்பட்ட வேறுபாடுகளும், கொற்கைக்கும் கடலுக்கும் இடையில் மணல் மேடுகளைத் தோற்றுவித்தன. கடலும் பின் வாங்கியது. இதனால், கடற்கரையிலிருந்த கொற்கை, மெல்ல மெல்ல உள்நிலமானது. கொற்கைக்கும் கடலுக்கும் இடையில் மணல் பகுதி அதிகரித்தது. கடல் வணிகம் விடுபடாமல் இருப்பதற்காக, இந்த மணல் பகுதியில், அதாவது, கொற்கைக்கும் கடலுக்கும் இடையில், இன்னொரு வணிக மையம் உருவானது. இதுவே "காயல்' என்னும் ஊரானது.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்குப் பாண்டிய நாடானது சோழர் ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், கொற்கையானது, தனது பண்டைய நிலையில் இருக்கவில்லை என்றாலும், தனது பொலிவை முழுவதுமாக இழக்கவில்லை.  சோழப் பேரரசின்கீழ், "சோழேந்திர சிம்ம சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரைப் பெற்றிருந்தது. அடுத்து வந்த சில நூற்றாண்டுகளில், இயற்கை மாற்றங்கள், கொற்கையைக் காணாமல் போக்கி, காயல் நகரத்தைச் சிறப்புக்குக் கொண்டு வந்தன. 

கொற்கையில் களப்பணிகள்: திருநெல்வேலிப் பகுதிகளில் நெடுங்காலம் தங்கியிருந்து கிறித்தவ சமயப் பணியாற்றியவரும், தமிழ் அறிஞராகத் திகழ்ந்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை ஆராய்ந்தவருமான கால்டுவெல் பாதிரியார், கொற்கையில் களஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஆங்காங்கு நிலத்தைத் தோண்டி, மண்ணில் புதையுண்ட பலவற்றையும் ஆய்ந்து பார்த்து, கொற்கையில்"சங்குத் தொழிற்சாலை' இருந்திருக்கவேண்டும் என்றுரைத்தார். "சங்கின் தொட்டில்' என்றே இப்பகுதியை வணிகர்கள்அழைத்ததாகக் குறிப்புகள் காட்டுகிறார். கொற்கையின் புவியமைப்பையும் மண்ணில் புதையுண்ட பொருட்கள் குறித்தும் இவர் கூறுவன நினைத்தற்குரியன: 

இது (கொற்கை) தாமிரபரணிக்கரையில் உள்ளது. மிகப் பள்ளமான கடற்கரைப்பகுதியாகும். ஆற்று வண்டலால் மேல் பகுதி களிமண் படிந்துள்ளது. ஆழ்கடல் சங்குகளும் படிந்துள்ளன. மாறமங்கலத்தின் சாலையில் நடக்கையில் சங்குகள் காலைக் குத்துவதுண்டு. உப்புக் கற்களும் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல விநோதமான சிப்பிகளும் பழைய கடற்கரைப் படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இங்கு கிடைத்துள்ள சிப்பிகள் மிக அண்மைக்காலத்தில் உயிர் வாழ்ந்ததுபோல் தோற்றமளிக்கின்றன. இங்கு மக்கள் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்நிலப் படிவு ஏற்பட்டிருக்கவேண்டும். 

அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகள், ஒன்று ஊரினுள்ளும் மற்றொன்று வயல்வெளியிலும் கிடைத்துள்ளன. பிற மதக்கடவுளாக இருப்பினும், இங்கு வணங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வெளியே எடுத்த நிலையிலும், மாலை
யிட்டு வழிபடுகின்றனர். 

கால்டுவெல் பாதிரியாரின் பதிவு, கொற்கை மக்களின் நாகரிகம், தொழில் வளமை, மனச்செழுமை ஆகியவற்றை விளக்குவதாக உள்ளது. 

கொற்கையில் "அஃக சாலை' (நாணயம் அடிக்கும் இடம்) ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. பண்டைய பாண்டிய மன்னர்கள், இங்குதான் நாணயங்களைச் செய்தனர் என்று கால்டுவெல்லும் பதிவிடுகிறார். கொற்கைப் பகுதிப் புதையாய்வுகளின்போது, வேறெங்கும் கிட்டாத சதுர நாணயங்கள் கிட்டியதாகவும் சில பதிவுகள் உள்ளன. செப்பு நாணயங்கள் சிலவற்றில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னரின் உருவத் தோற்றம் காணப்பட்டுள்ளது. சோழர் போக்குவரத்து இங்கிருந்ததற்கும், ராஜேந்திரசோழர் காலத்தில் இப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாக இருந்ததற்குமான அடையாளமாக இதைக் கொள்ளலாம். 

இளவரசர்களின் இனிய நகரம்: பாண்டிய மன்னர்களைப்பொருத்தவரை, கொற்கை நகரம், அவர்களின் இரண்டாவது தலைநகரமாகவே கருதப்பட்டுள்ளது. தலைநகரமானமதுரையில் மன்னர் இருந்தாலும், இளவரசர்கள் கொற்கையிலேயேஇருந்துள்ளனர். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com