தொண்டைநாட்டுச் சிங்கங்கள்!

நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்!'  உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே  உடனே அங்கேயே அருளுபவன் நரசிம்மன்.
தொண்டைநாட்டுச் சிங்கங்கள்!

"நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்!' உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே உடனே அங்கேயே அருளுபவன் நரசிம்மன். திருமாலின் தசாவதாரங்களில் திடீரென தோன்றி அருளியவர் நரசிம்மர்.

இலக்கியங்களில் நரசிம்மர்

இரணியன்-பிரகலாதன் வரலாற்றைப் கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பரிபாடல் 4 -ஆவது பாடலின் 10 முதல் 21 வரையுள்ள வரிகளில் தெரிவிக்கிறார். அதனால் சங்க இலக்கிய காலத்திலேயே நரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது.

நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், "இரணியன் பட்ட தெம்மிறை எய்தினான்' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்வைதியான ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார் என்னும் வரலாறும் உண்டு. ஆதிசங்கரர் ஒரு தீ விபத்தில் சிக்கி, அவரது கரம் தீயால் பாதிக்கப்பட்ட போது, "லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்'”என்னும் துதியை இயற்றினார்.

பல்லவ மன்னர்கள் நரசிம்ம அவதாரத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு, நரசிம்ம வர்மன், ராஜசிம்மன் போன்ற பெயர்கள் அவர்களின் சிம்மாவதாரத்தின் மீதான பக்தியைக் காட்டும். தொண்டை மண்டலத்தின் பல்லவர்களின் ஆட்சி எல்லை விரிந்திருந்த வரைக்கும் நரசிம்மரின் கோயில்கள் இருந்துள்ளன. நரசிம்மரை வணங்கினால் வெற்றி, புகழ், சிறப்பு, துன்ப நீக்கம், அளவற்ற நற்பலன்கள், பாவ நீக்கம் ஆகியவை உடனே கிடைக்கும்.

அனைத்து விஷ்ணு ரூபங்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அணிசெய்வாள். ஆனால் அழகிய சிங்கரான நரசிம்மரின் திருமுகத்தைக் கண்டுகளிக்க, மடியில் அமர்ந்தால்தான் காண முடியும் என்பதனால் லக்குமி நரசிம்மரின் மடியில் அமர்ந்திருக்கிறாள்.

உடையவரும் நரசிம்மரும்

நரசிம்மரிடம் ஈடுபாடு கொண்ட ராமானுஜர், ஈசாண்டான் என்னும் குருவிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றார். அவர் நியமித்த எழுபத்து நான்கு வைணவ சிம்மாசனாபதிகளுக்கும் நரசிம்ம விக்ரகத்தை வழங்கி, பூஜை செய்ய நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.

முந்தைய தொண்டைநாட்டில் நரசிம்மர்கள் திருநீர்மலை போன்ற இடங்களில் உபசந்நிதிகளாக இருந்தாலும் பிரதானமான குறிப்பிடப்படும் கோயில்களாக சில அமைந்துள்ளன.

சோழசிம்மபுரம்: சோழசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர் திவ்யதேசத்தில் கார்த்திகை மாதத்தில் கண் திற க்கும் யோகநிலையில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.

நரசிங்கபுரம்: திருவள்ளூருக்கு அருகில் உள்ளது. இங்கு போக மூர்த்தியாக 7 முனிவருக்கு காட்சி தந்தார்.

பொன்னியம்மன்மேடு: சென்னை மூலக்கடை ரெட்ஹில்ஸ் சாலையில் மூலக்கடைக்கு அருகில் உள்ளது. இங்கு மிக உயரமான நரசிம்மரும் லட்சுமிதேவியும் எழுந்தருளியுள்ளனர்.

தெள்ளியசிங்கம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சந்நிதியின் பின்புறம் யோக நரசிம்மராக சிங்கப்பெருமாள் காட்சியளிக்கிறார். அத்திரி முனிவருக்கு காட்சி தந்த இவர் தெள்ளியசிங்கப்பெருமாள் எனப்படுகிறார்.

ஸ்ரீவேங்கட நரசிம்மர் கோயில்: மேற்கு சைதாப்பேட்டையில் பிரசன்ன வேங்கட நரசிம்மப் பெருமாள் எனும் பெயருடன் சிம்மமுகம் இல்லாத நரசிம்மரை தரிசிக்கலாம். 900 ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணி தெள்ளிய நரசிம்ம சுவாமி, இங்கே எழுந்தருளி அவர் முன்னிலையில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்ற பெயர் பெற்றார் எனச்சொல்லப்படுகிறது.

ராமாபுரம் நரசிம்மர்: சென்னை நந்தம்பாக்கம் அருகில் ராமாபுரத்தில் பல்லவ மன்னன் 2 -ஆம் நரசிம்மவர்மன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் அமிர்தவல்லித்தாயார் சமேத லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில் உள்ளது.

வேளச்சேரி நரசிம்மர்: பிரம்மன் முன்னிலை வகிக்க சப்தரிஷிகளும் சேர்ந்து நடத்திய யாகத்தில் தோன்றியவர் இங்குள்ள யோக நரசிம்மர் ஆகும். வேளச்சேரி பிரதான சாலையில் கோயில்கொண்டு அமர்ந்த கோலத்தில் 4 திருக்கரங்களுடன் மேற்கு பார்த்தவாறு அருளுகிறார்.

நங்கநல்லூர் நரசிம்மர்: சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த லட்சுமி நரசிம்மர் கோயில் புதையுண்டு போயிற்று. பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் வேண்ட நரசிம்மர் சுமார் 5 அடி உயரமுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மராக திருமுடியில் கிரீடம், கழுத்தில் பெரிய மாலை, இரு கரங்களில் சங்கும் சக்கரத்துடன் இங்கு தங்கி அருள் புரிந்ததாக வரலாறு உண்டு. சக்கரத்தாழ்வார் பதினாறு கரங்களுக்குரிய ஆயுதங்களுடன் பின்னால் ஸ்ரீ யோக நரசிம்மருடன் எழுந்தருளி உள்ளார்.

செங்காடு லட்சுமி நரசிம்மர் : திருப்போரூர் அருகே உள்ள செங்காடு என்னும் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை ஒரே இடத்தில் மலையேறாமல் தரைமட்ட உயரத்திலேயே தரிசனம் செய்யலாம்.

சிங்கப்பெருமாள் கோவில்: இரணியனை சம்காரம் செய்ததால் ஏற்பட்ட தன் கறையை அருகில் உள்ள செங்குன்றம் ஏரியில் அலசி இங்கு வந்து குகைக்குள் அமர்ந்ததாகவும் அதே கோலத்தில், ஜாபாலி மஹரிஷிக்கு காட்சி கொடுத்த தலம். இக் கோயில் பல்லவர்களின் குடவரையாகும். 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்களின் கல்வெட்டுகள் நன்கொடை கொடுத்ததைக் குறிக்கின்றன.

கட்டவாக்கம்: தாம்பரம் வாலாஜாபாத் சாலையில் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மர் திரிநேத்ரராக அருளுகிறார்.

திருவேளுக்கை: காஞ்சிபுரத்தில் பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வேள் என்றால் ஆசை என்று பொருள். நரசிம்ம அவதாரம் எடுத்தபோது தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்ட இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.

செவிலிமேடு: பாலாற்றங்கரையில் காஞ்சிக்கு அருகே 6 கி.மீ. தொலைவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 8 அடி உயரமும் 4 கரங்களும் உடைய லட்சுமி நரசிம்மர் அருளும் கோயில். செளந்தர்ய வரதர் செளந்தர்யவல்லி என்பது திருநாமம்.

பழையசீவரம்: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பாலாற்றங்கரையில் ஒரு சிறு மலையில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் உள்ளது . மூலவர் லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி அமர்ந்து அருளுகிறார். அத்ரி மகரிஷி வழிபட்டத் தலம்.

பொன்விளைந்த களத்தூர்: இந்த நரசிம்மர் கோயில் செங்கல்பட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் உள்ள கோயில். உற்சவர் பெயர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்றாலும் நரசிம்மருக்கான முகம் இல்லை. மூலவர் வைகுண்ட நாதர், தாயார் பெயர் அஹோபிலவல்லித்தாயார்.

நயா திருப்பதி: மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் உள்ளது சித்திரவாடி கிராமம். 250 படி உள்ள மலைமேல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. மலையடிவாரத்தில் தனித்தாயாருடன் இரு லட்சுமி நரசிம்மர்கள் சந்நிதி, நவகிரக நவ நரசிம்மர்கள் கண்ணாடி அறையில் எழுந்தருளியுள்ளனர்.

புகழும் சிறப்பும் மிக்க இந்த நரசிம்மர் தலங்களுக்குச் சென்று வணங்குவதால் உரிய பலன் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com