நண்டு பூஜித்த "நண்டாங்கோயில்'

கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் திருவிசநல்லூர் அருகில் திருத்தேவன்குடி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
நண்டு பூஜித்த "நண்டாங்கோயில்'


கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் திருவிசநல்லூர் அருகில் திருத்தேவன்குடி என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தை "நண்டாங்கோயில்' என்றும் அழைக்கின்றனர். இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை நண்டு பூஜித்ததால் "நண்டாங்கோயில்' எனப்படுகிறது. சோழநாட்டு காவிரி வடகரைத் தலங்களில் 42-ஆவது தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்து இறைவனை ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார்.

இங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவன் கற்கடேசுவரர் என்றும், இறைவி அருமருந்தம்மை - அபூர்வநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே இரண்டு தேவியர்கள், அம்பாள் சந்நிதிகள் இரண்டும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

நண்டு பூஜித்தத் தலம்: முற்பிறவியில் ஈசன் பால் பக்தி கொண்ட பக்தன் நண்டு வடிவெடுத்து இறைவனை பூஜித்து வந்தார். இறைவன் மீது நண்டு ஊர்வதைக் கண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் அதனை அடிக்க முயல சிவலிங்கத்தின் மீது பட்டு அது பிளவுபட்டது. அப்பிளவினுள் நண்டு ஒளிந்து கொண்டது. நண்டுக்கும் அருள்பாலித்த இறைவனை இங்கே கண்டு வழிபடலாம். நண்டு பூஜித்ததால் இறைவன் "கற்கடேஸ்வரர்' என அழைக்கப்பட்டார். இறைவன் திருமேனியில் உள்ள பிளவை இன்றும் காணலாம். 

கருவறை விமானம் முழுவதும் கற்கோயிலாக அமைந்துள்ளது. அர்த்தமண்டபச் சுவரில் தலப்புராணக் கதையை விளக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. கருவறையின் நுழைவு வாயிலின் மேலே ஸ்வஸ்திகம், சாமரம், விளக்கு, நந்தி, கஜலட்சுமி போன்ற அஷ்டமங்கலச் சிற்பங்கள் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும். இதுபோன்ற சிற்பங்களை தஞ்சை பெரிய கோயிலிலும் அர்த்த மண்டப வடக்கு நுழைவு வாயிலின் மேற்புறத்திலும் காணலாம்.

இக்கோயிலில் குலோத்துங்கச் சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜராஜ சோழன், இராஜாதிராஜன் ஆகியோரது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இறைவனை "அருமருந்து உடையார்' என்று கல்வெட்டுகள் அழைக்கின்றன. 

விருதராஜ பயங்கர வளநாட்டில் மிழலை நாட்டின் ஒரு பகுதியாக திருந்துதேவன்குடி விளங்கியிருக்கிறது. இறைவன் முன்பு வீணை வாசிப்பதற்காக நிலம் அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலம் "வீணைக்காணி' என அழைக்கப்பட்டது. அரையன் சீராள தேவன் என்பவன் இக்கோயிலில் விளக்குகள் ஏற்ற நிலம் அளித்த செய்தியும் குறிப்பிடப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் உடையார் கோயிலுக்கு இவ்வூர் தேவதானமாக அளிக்கப்பட்டது என அறிய முடிகிறது.

இக்கோயிலில் காணப்படும் சந்திரன் சிற்ப வடிவம் அமர்ந்த கோலத்தில் காண்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, கடக ராசியினர் இத்தலத்திற்கு வந்து இறைவன் - இறைவியை வழிபட்டு நன்மை அடைகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் இறைவனுக்கும், இறைவிக்கும் செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகம் சிறப்பானது. அது பக்தர்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com