ஆண்டாளின் அக்கார அடிசில்
By DIN | Published On : 10th January 2020 11:24 AM | Last Updated : 10th January 2020 11:24 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிப்புத்தூர் நந்தவனத்தில் துளசி செடியின் கீழ், ஆடி மாத பூர நட்சத்திரத்தில் ஓர் அழகான பெண் குழந்தை இருப்பதைப் பார்த்தார் பெரியாழ்வார் என்றழைக்கப்படும் விஷ்ணுசித்தர். இதுவும் திருமாலின் திருவிளையாடலே என்று வணங்கி உள்ளம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு "கோதை" எனப் பெயர் சூட்டி ஆசையாய் வளர்த்து வந்தார். பூமாதேவியின் அம்சமாக ஆண்டாள் அவதரித்தார் என்பர். திருமாலை பின்பற்றும் குலத்தில் வந்துதித்த விஷ்ணுசித்தர் கண்ணனைப் பற்றி அனைத்து வரலாறுகளையும் கோதைக்கு கதையாக குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லி வந்தார். அதுமுதல் பகவான் கண்ணனே தன் மணாளனாக ஏற்று வாழும் ஆசை அவளுக்கு வந்தது.
அதன் காரணமாக, விஷ்ணுசித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பதற்காக தொடுத்து வைத்துள்ள மாலையை தான் அணிந்து கண்ணடி முன் நின்று கொண்டு தான் நாரணனுக்கு ஏற்றவளா என தன்னைத்தானே வினவிக்கொண்டு பின் மாலையை கழட்டி வைத்துவிடுவாள். ஒரு நாள் ஆலயத்தில் நாராயணனுக்கு சமர்ப்பித்த மாலையில் தலைமுடி இருந்ததை அர்ச்சகர் சுட்டிக் காட்டி மாற்றுமாலையை கொண்டுவருமாறு விஷ்ணுசித்தரிடம் தெரிவித்தனர். ஆழ்வார், மறுநாள் மாலை கொடுத்து அனுப்பும்போது அதனை ஆண்டாள் அணிவதை பார்த்துவிட்டு அதிர்ந்துபோய் ஆண்டாளிடம் "அபசாரம் செய்துவிட்டாயே" என்று வருந்தினார். அன்றிரவு அவர் கனவில் வந்த திருமால் "உம்மகள் சூடிய மாலையே தமக்கு ஏற்புடையது" எனக்கூறினார்.
விதிர்த்தெழுந்த ஆழ்வார், ஆண்டாள் திருமகளின் அம்சமே என உணர்ந்து, அவளை பக்தி மார்க்கத்திலேயே செல்ல அனுமதித்தார். அதுமுதல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியானாள் கோதை. திருமாலின் மனதை கொள்ளை கொண்டதால் ஆண்டாள் ஆனாள். "அரங்கத்து அரங்கனே தன் மணாளனாக வரவேண்டும்' என தன் விருப்பத்தை தன் தந்தையிடம் தெரிவித்தாள்.
ஸ்ரீரங்கத்து அரங்கனை கைப்பிடிக்க மார்கழியில் பாவை பாடி, பாவை நோன்பு நூற்று பக்தியோடு விரதமிருந்து திருமொழியில் தன் எண்ணங்களை பாசுரங்களாக தெரிவிக்கின்றாள் ஆண்டாள். ஒவ்வொரு நாளும் திருப்பாவையில் ஒவ்வொரு பாடலை பாடினாள். விஷ்ணு சித்தரின் குலதெய்வம் கள்ளழகர். ஆண்டாள் கள்ளழகரிடம் அரங்கனைக் "கைப்பிடிக்கும்' தன் என்ணம் நிறைவேற வேண்டி இந்த நோன்பினை முடிக்கும் விதமாக தனது 27 -ஆவது பாசுரத்தில் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனப்பாடி பறை தருமாறு கேட்கிறாள் பிரார்த்தனையாக.
நாச்சியார் திருமொழியில்...
"நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து
பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை
கொள்ளுங் கொலோ!' என்கிறாள்.
100 தடா வெண்ணெயும், 100 தடா அக்கார அடிசிலும் (அனைவருக்கும் தெரிந்த சர்க்கரைப் பொங்கலைப் போன்றது தான் இந்த "அக்கார அடிசல்' என்பது. தண்ணீரில் வேகவைப்பதற்கு பதில் பாலில் அரிசியை கொதிக்க வைத்து, வெந்தபின் கல்கண்டு சேர்த்து புத்துருக்கு நெய்யோடு மணமான ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரத்துடன், முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்களை சேர்த்து செய்வதாகும்) சமர்ப்பிப்பதாக வேண்டுகிறாள்.
ஆண்டாள் வேண்டியபடியே, அரங்கனை கைத்தலம் பற்றி ஐக்கியமானாள். அவள் வேண்டிய நேர்த்திகடனான அக்காரவடிசலை சமர்ப்பிப்பது மட்டும் அவதார காலத்தில் இயலவில்லை. ஆண்டாளுக்குப்பின் சுமார் 300 வருடங்கள் சென்று அவதரித்த ஸ்ரீ ராமானுஜர், ஆண்டாளுக்காக ஒரு கூடாரைவல்லி நாளில் கள்ளழகருக்கு 100 தடா நிறைய அக்கார அடிசில் சமர்ப்பித்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தார். நேர்த்திக்கடனை முடித்த உடையவர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றபோது ஆண்டாள் எதிர்கொண்டு "வாரும் அண்ணா" என அழைத்ததாக கூறுகிறது.
இப்பொழுதும் ஆண்டாளின் சார்பில் அவர் அண்ணன் அக்கார அடிசில் சமர்ப்பிக்கும் சம்பிரதாயம் திருமாலிருஞ்சோலை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொன்மையான தலங்களில் பின்பற்றப்படுகிறது.
இவ்வாண்டு, கூடாரவல்லித் திருநாள் ஜனவரி 12 -ஆம் தேதி அமைகிறது. ஆன்மீகத்திற்கு வழிவகுத்து நற்பாதைக்கு அழைத்துச் சென்ற அந்த ஆண்டாளை இந்த நன்னாளில் வழிபடுவோம்; மாயக்கண்ணனின் அருளினைப்பெற்று மங்கள வாழ்வினைப் பெறுவோம்.
- எஸ். எஸ். சீதாராமன்