• எழுந்து நில்! தைரியமாக இரு! வலிமையுடன் இரு! பொறுப்பு முழுவதையும் உன் தோள்மீதே சுமந்துகொள்.
- சுவாமி விவேகானந்தர்
• தினமும் முன்னோர்களுக்கும், உணவில்லாதவர்களுக்கும் உணவும் குடி நீரும் அளிக்க வேண்டும். தனக்காக மட்டும் உணவு சமைக்கக் கூடாது.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி
• நாம் தினமும் செய்யும் ஜபம், தியானம், பித்ரு பூஜை, பகவத் ஆராதனை, தானம், தர்மம், புண்ணிய காரியங்கள் ஆகிய அனைத்தும் சக்தியாக மாறி, சூரிய பகவானை அடைகின்றன.
• சூரிய பகவான், அந்தச் சக்தியை சமுத்திரத்திடம் அளித்துவிடுகிறார். அந்த சக்தியினால், சமுத்திர ஜலம் மேகங்களுடன் கலந்து, மழையாக நமக்குக் கிடைத்துவிடுகிறது. அதனால் தேவர்களும், பித்ருக்களும், பூவுலக மக்களும் திருப்தி அடைகின்றனர்.
• ஆதலால் நாம் தினமும் செய்யும் நற்செயல்களின் பலன்கள் அனைத்தும் நம்மையே திரும்ப வந்தடைகின்றன.
• சூரியனுக்கு அளவற்ற தேஜஸ்ஸை (ஒளி) அளிக்கும் காயத்ரி மந்திரத்தில் வரும் "பூ:' என்ற சொல் நாம் வசிக்கும் பூமியையும், "புவ:' என்னும் சொல், மறைந்த முன்னோர்களான பித்ருக்கள் இருக்கும் உலகையும், "ஸுவ:' என்ற சொல் தேவர்கள் வாழும் சொர்க்கலோகத்தையும் குறிப்பிடுகின்றன.
கருத்து: நாம் தினமும் புண்ணிய காரியங்களைத் தவறாமல் செய்து வர வேண்டும். அவற்றின் சக்தியால்தான், பருவம் தவறாமல் மழை பொழிகிறது. புண்ணிய காரியங்களைவிட்டு விட்டோமானால், மழை பெய்யாது. தற்காலத்தில் அடிக்கடி மழை பொய்ப்பதற்கு நமது பாவங்களே காரணமாகும்!
- உபநிஷதங்கள்
• மானிட வாழ்க்கை, பல கொடிய கடலினங்கள் வாழும் சமுத்திரத்தைப் போன்றது! ஆசை, காமம், மோகம், மன சபலங்கள் ஆகியவையே சம்சார சாகரத்தில் உள்ள விபரீத, கொடிய விலங்குகள் ஆகும்!! அவை நம்மை அடியோடு அழித்துவிடும்!!!
• கடலைத் தாண்டுவதற்கு எவ்விதம் படகு தேவையோ, அதேபோன்றுதான் மனிதப்பிறவி எனும் சமுத்திரத்தைத் தாண்டுவதற்கும், "ஸ்ரீ ராம நாமம்' என்னும் படகு மிகவும் அவசியம். அது ஒன்றுதான் ஜனனம், மரணம் என்னும் பயங்கரமான அனுபவத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
- துளசிதாசர் "ஸ்ரீ ராம் சரிதமானஸ்'ஸில் அருளியது