Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! 75 - டாக்டர் சுதா சேஷய்யன்- Dinamani

சுடச்சுட

  
  sudha

  பாளையங்கோட்டை என்னும் பெயருக்குப் பற்பல காரணங்களை வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் தந்திருக்கின்றனர்.
   "பாளையம்' என்னும் சொல்லுக்குப் "பாசறைக் கோட்டை' என்று சிலர் விளக்கம் தருகின்றனர். இவ்விளக்கத்தை வைத்து, பழங்காலத்தில் தெற்குப் பாசறை இருந்த இடம் என்றும் இவ்வூருக்குக் காரணம் கூறுகின்றனர். சுமார் 300-400 ஆண்டுகளுக்கு முன்னர், பாளையன் என்பவரால் இங்கொரு கோட்டை கட்டப்பட்டது என்றும், இதுவே பெயர்க் காரணம் என்று உள்ளூர் மக்கள் கருதுவதாகக் கால்டுவெல் பாதிரியார் குறிப்பிடுகிறார்.
   இதனைக் கொண்டு, பழையன் கோட்டை என்னும் பெயரே, பாளையன் கோட்டை என்று மருவியிருக்கலாமோ என்னும் ஐயமெழுப்புகிறார் பேராசிரியர் ந. சஞ்சீவி. துவாரசமுத்திரக் கன்னட அரசர்களில் ஒருவரோ அல்லது அவர்களுக்கும் முந்தைய அரசர்களில் ஒருவரோ இவ்வாறு கோட்டை கட்டியிருக்கக்கூடும் என்னும் கருத்தும் நிலவுகிறது.
   பாளையன் என்று கர்ண பரம்பரைக் கதைகளில் குறிக்கப்படுபவர், கோட்டை கட்டுவதற்காக, முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் மூர்த்தியபுரக் கோயில் மதில்களின் கற்களை எடுத்துப் பயன்படுத்தினார் என்று இந்தக் கதைகள் விரிகின்றன.
   பாளையங்கோட்டையில் முன்னதாகக் கோட்டை கட்டியவர், கான் சாஹிப் என்றழைக்கப்பட்ட மஹம்மது யூசூஃப் கான் என்றொரு கருத்தும் உண்டு. கோட்டை அரண் பகுதிகள் சிலவற்றுக்குக் குழந்தைக் கோட்டை என்றும் பிள்ளைக் கோட்டை என்றும் பெயர்கள் நிலவியுள்ளன. இப்பெயர், "பிள்ளை' என்னும் சாதிப் பெயர் என்றுரைத்து, இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்னர், கான் சாஹிப், பிள்ளை இனத்தவர் ஆவார் என்றும் விவரிக்கப்படுகிறது.
   கிழக்கிந்தியக் கம்பெனியார் வாணிபம் நடத்திய காலத்தில், தங்களின் வாணிபப் பிரதிநிதி ஒருவரைப் பாளையங்கோட்டையில் வைத்திருந்தனர். பண்டகசாலை ஒன்றையும் இங்கே நிறுவியிருந்தனர். 1756 - வாக்கில் பாளையங்கோட்டை எப்படியிருந்தது என்று பிரிட்டிஷ் காலத்தியப் பதிவுகள் சில செப்புகின்றன. கோட்டைக் கொத்தளங்கள் பெரிதும் அழிந்திருந்தன. பீரங்கிகள் இல்லாத எதிரிகளிடமிருந்து, இப்போதும் இக்கோட்டையால் காக்கமுடியும்.
   இத்தகைய சூழலில்தான், வரி வசூலிக்கவும், ஆற்காடு நவாப்பின் சகோதரன் மாஃபுஸ் கான் மற்றும் பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரான் போன்றோரால் ஏற்பட்டிருந்த உள்நாட்டுக் கலவரங்களைச் சீர்படுத்தவும், மதுரை மற்றும் நெல்லைப் பகுதிகளின் நிர்வாகியாகக் கான் சாஹிப் நியமிக்கப்பட்டார். சிதைந்திருந்த பாளையங்கோட்டையைச் சீர்படுத்தி, பிரிட்டிஷ் படைகளுக்கான நிலையமாக இதனை மாற்ற விரும்பிய கான் சாஹிப், கோட்டையைச் செப்பனிட்டிருக்கவேண்டும்.
   1757-58 வாக்கில், மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகள், பிரிட்டிஷாரால் கான் சாஹிப்புக்கு வாடகைக்கு விடப்பட்டதாகத் தெரிகிறது. எனவே, இந்தக் காலகட்டத்தில்தான், பாளையங்கோட்டையைக் கான் சாஹிப் செப்பனிடத் தொடங்கியிருக்கவேண்டும். கான் சாஹிப்புக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே மதுரை-நெல்லை உரிமை பற்றியே உரசல் தொடங்கியதும், தொடர்ந்து இவ்விரிசல் பல்வேறு காரணங்களால் அகலமானதும், 1764 -ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்டதும் பின்னர் நிகழ்ந்த வரலாற்றுத் திருப்பங்கள். எனினும், கான் சாஹிபால் ஆரம்பிக்கப்பட்ட பாளையங்கோட்டை செவ்விதாக்கப் பணி, பிரிட்டிஷாருக்கு நன்மை பயத்தது. 1771 -இல், இக்கோட்டை ஆற்காடு நவாப் வசமிருந்ததாகவும், கோட்டைக்குள் பிரிட்டிஷ் ராணுவப் படை இருந்ததாகவும் சுவார்ட்ஸ் பதிவுகள் தெரிவிக்கின்றன.
   மேற்கூறிய தகவல்கள் அனைத்தையும் திரட்டிப் பார்க்கையில், பாளையங்கோட்டையின் அரண்களைக் கான் சாஹிப் செப்பனிட்டு வலுப்படுத்தியிருக்கக்கூடுமேயன்றி, முதன்முதலாகக் கட்டியிருக்கமுடியாது என்பது புரிகிறது. அப்படியானால், பாளையங்கோட்டை என்பதனை முதலில் கட்டியது யார்?
   வரலாற்றுப் பேரறிஞர் மா.ராசமாணிக்கனார் கூறுவதே, பொருத்தமானதாகப் படுகிறது. மதுரை விசுவநாத நாயக்கரின் படைத் தளபதியாகவும், நெல்லைச் சீமையின் தளவாயாகவும் திகழ்ந்த அரியநாத முதலியார், இங்கொரு கோட்டை கட்டினார். விசுவநாத நாயக்கரோடும் பின்னர் அவருடைய மகன் கிருஷ்ணப்ப நாயக்கரோடும் இணைந்து மதுரை நாயக்க அரசாங்கத்தை அமைத்து, விரிவுபடுத்தி, திறம்பட நிர்வகித்த பெருமை, அரியநாத முதலியாரையே சேரும். பாளையக்கார முறையைத் தென்பாண்டிப் பகுதிகளில் அமைத்தவரும் இவரே ஆவார். தென்பாண்டி நாட்டைக் காப்பதற்கு, இங்கொரு கோட்டையும், நிலையான படைப் பிரிவும் தேவை என்று இவர் கருதியிருக்கக்கூடும். விளைவு. . ? பாளையங்கோட்டை!
   "பாளையம்' என்னும் சொல்லுக்குப் "படை', "சேனை' என்பனவே பொருள்கள். காலப்போக்கில், படைகள் தங்கிய இடங்களும், பாசறைகளும்கூட இப்பெயரால் வழங்கப்பட்டன. போர் வீரர்கள், "பாளையர்கள்' என்று குறிக்கப்பெற்றனர். குறுநில மன்னர்கள் தங்கிய ஊர்களையும் பண்டையத் தமிழர்கள் "பாளையங்கள்' என்றழைத்தனர். பேரரசு என்று ஒன்றிருக்கும்போது, அதன் அரண்களாக, ராணுவ நிலையிடங்களாகக் குறுநில மன்னர்கள் திகழ்ந்திருப்பார்கள், இல்லையா? ஆகவே, குறுநில மன்னரிடங்களும் பாளையங்கள் ஆயின. இந்த மரபை அடியொற்றியே, தென் பாண்டி நாட்டின் அரணிடங்களாகத் திகழவேண்டும் என்று பாளையங்களை அரியநாத முதலியார் அமைத்தார் போலும்!
   1560-70 களில் அரியநாத முதலியார் அமைத்த பாளையங்கோட்டை, பின்னர் வந்த காலங்களில், அவ்வப்போது சீரமைக்கப்பட்டிருக்கக்கூடும். ஆங்கிலேயர் முதன்முதலில் திருநெல்வேலிப் பகுதியை அடைந்தபோது, தென்னிந்தியாவின் பலமிக்க கோட்டையாகப் பாளையங்கோட்டை இருந்திருக்கிறது. நவாப் காலத்திலும், கான் சாஹிப் காலத்திலும் முன்னதாக இருந்த கோட்டை அரணுக்கு வெளிப்புறத்தில், மற்றொரு அரண் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், வெளிக்கோட்டை, உள்கோட்டை என்று இரண்டு அரண்கள் காணப்பட்டுள்ளன. உள்கோட்டையைக் காட்டிலும் உயரம் குறைவாக இருந்தாலும், வெளிக்கோட்டையானது கொத்தளங்கள் அதிகமாகக் கொண்டிருந்தது. இரண்டு அரண்களின் கட்டுமானத்திற்கும் வெட்டுக் கற்கள் மிகுதியும் பயன்படுத்தப்பட்டன.
   கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் சிறைச்சாலையாகவும் பயன்பட்டுள்ள இக்கோட்டை, பின்னர் ஏனோ உருத்தெரியாமல் அழிந்துவிட்டது. அரியநாயகிபுரம், சுத்தமல்லி, பழவூர் மற்றும் மருதூர் அணைக்கட்டுகளில், பாளையங்கோட்டையின் சிதைவுக் கற்கள் பயன்படுத்தப்பட்டனவாம். சுலோச்சன முதலியார் பாலத்திலும்கூட, இக்கற்கள் பயன்படுத்தப்பட்டதாக ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
   (தொடரும்...)
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai