ஆதிசாஸ்தாவின் அவதாரங்கள்!

 நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம்.
ஆதிசாஸ்தாவின் அவதாரங்கள்!

 நான்கு யுகங்களுக்கும் அதிபதி சுவாமி ஐயப்பன். இவர் தர்மசாஸ்தாவின் அவதார அம்சம்.
 ஆதிசாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று "கல்யாண வரத சாஸ்தா’ . இவர், பிரம்மனின் புதல்விகளான பூரணை- புஷ்கலை ஆகியோரை மணம் செய்த கதையை புராணங்களில் காணலாம். (பூரணை- புஷ்கலை தேவியர்கள் குறித்து பல்வேறு கதைகள் உண்டு) இந்த அவதாரத்திற்குப்பிறகே, இவர் சுவாமி ஐயப்பனாக அவதரித்து பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்து, அதர்மமே உருவான மகிஷியை அழித்தார். இதுவே, சாஸ்தாவின் கடைசி அவதாரம். ஆதி சாஸ்தாவை பூதநாதர் என்று வழங்குவர். இவரது எட்டு அவதாரங்களும் மகிமை வாய்ந்தவை.
 சம்மோகன சாஸ்தா: நமது வீட்டையும் குடும்பத்தையும் காக்கும் தெய்வமான இவர் இல்லறத்தில் ஒற்றுமையை மலரச் செய்பவர். பூரணை - புஷ்கலையுடன் காட்சி தருகிறார்.
 கல்யாணவரத சாஸ்தா: கோயில்கள் சிலவற்றில் தன் தேவியருடன் காட்சி தரும் இந்த சாஸ்தாவை வழிபட்டால், செவ்வாய் தோஷம் மற்றும் தடைகள் விலகி விரைவில் திருமணம் கைகூடும்.
 வேத சாஸ்தா: இவர் சிம்மத்தின் மீது தேவியருடன் அமர்ந்திருப்பார். வேதத்தை தழைக்கச் செய்பவர். சாஸ்திர அறிவை அருள்வதுடன் அதன்படி நம்மை வழி நடத்தவும் செய்யும் தெய்வ சொரூபமாக இவரைக் கருதுவர். கல்வி, கேள்வி ஞானத்தில் சிறக்க இவரை வழிபட வேண்டும்.
 ஞான சாஸ்தா: கையில் வீணை ஏந்தி, சீடர்கள் அருகில் இருக்க, தட்சிணாமூர்த்தியைப் போன்று கல்லால மரத்தின் கீழ் குரு பீடத்தில் அமர்ந்து கல்வி அறிவை வழங்கும் கோலத்தில் காட்சி தருபவர். இவரை வழிபட்டால் பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
 பிரம்ம சாஸ்தா: தன் பத்தினிகள் இருவருடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருபவர். மலட்டுத் தன்மை நீங்கி குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபட வேண்டும்.
 மகா சாஸ்தா: இவர் நான்கு கரங்களுடன் யானை மீது அமர்ந்து காட்சி தருவார். ராகு கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை நீக்கி அருளும் இந்த மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.
 வீர சாஸ்தா: இவர், ருத்ரமூர்த்தியாக திகழ்பவர். ஆயுதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் குதிரையின் மீது அமர்ந்து தீயவர்களை அழிக்கும் கோலத்தில் காட்சி தருவார். இவரை வணங்கினால் கேதுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
 தர்ம சாஸ்தா: இவரே சபரி மலையில் குக்குடாசனத்தில் அமர்ந்து சுவாமி ஐயப்பனாக அருள்புரிகிறார். கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை வழிபட சகலவிதமான துன்பங்களும் நீங்கி, வாழ்வில் வசந்தம் வீசும் என்பர். முருகப்பெருமானைப் போன்றே சுவாமி ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை: அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், எருமேலி மற்றும் சபரிமலை.
 கிராமப்புரங்களில் ஐயனார் எனப்படும் சாஸ்தா வழிபாடு அதிகம். திருச்சி }பெரம்பலூருக்கு இடையே உள்ள திருத்தலம் திருப்பட்டூர். இங்கு கோயில் கொண்டுள்ள மகா சாஸ்தா, கையில் "திரு உலா ஏடு’ ஏந்தியபடி காட்சி தருகிறார். இவரை, " அரங்கேற்றிய ஐயனார்’ என்பர்.
 நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள ஊர் "ஆஸ்ரமம்’. இங்கு அருள்புரியும் சாஸ்தாவின் திருநாமம் "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’. தலை உச்சியில் கொண்டை, மார்பில் பூணூல், கழுத்தில் பதக்கம், நெற்றியில் விபூதிபட்டையுடன் திகழும் இவர் ஒரு காலை மடக்கி வைத்து அமர்ந்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு சாஸ்தாவை வேண்டி அத்திரி முனிவர் யாகம் செய்ததாகக் கூறுவர்.
 பல திருக்கோலங்களில் சாஸ்தா காட்சி அளித்தாலும் பக்தர்கள் யாத்திரையாக சபரிமலைக்குச் செல்வதையே பெரும் போறாகக் கருதி, சபரிமலை சுவாமி ஐயப்பனைத் தரிசித்து பேறுபெற்று வளமுடன் வாழ்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
 - டி.ஆர். பரிமளரங்கன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com