கற்று பெற்ற சிறப்பு

கற்பன கற்கும் முறையில் கற்று கற்றதைக் கடைபிடித்து ஒழுகி நடைமுறையில் பிறரும் பின்பற்ற கற்பிக்கும் முறையில் கற்பித்து பெறும் சிறப்பு மேலானது; மேன்மையானது;
கற்று பெற்ற சிறப்பு

கற்பன கற்கும் முறையில் கற்று கற்றதைக் கடைபிடித்து ஒழுகி நடைமுறையில் பிறரும் பின்பற்ற கற்பிக்கும் முறையில் கற்பித்து பெறும் சிறப்பு மேலானது; மேன்மையானது; மேதினியில் மேவி நிற்பது. கற்றாரின் ஏவல் ஏதிலாரும் ஏற்கும் வண்ணம் அமையும். அதனாலேயே அவர்கள் அகிலத்தில் புகழோடு விளங்குகிறார்கள். அவ்வாறு புகழ் பெற்ற கற்று கற்பித்த பொற்புடையவர்களில் சிறப்புடையவர்களாக திகழ்கிறார் இகம் புகழும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அவர்களின் அருமை தோழர் முஆத் இப்னு ஜபல் (ரலி) . அவர்கள் பயின்ற பாங்கு மாணவர்களும் கற்பித்த அற்புத அணுகுமுறை ஆசிரியர்களும் பின்பற்றப்பட வேண்டிய முன்னோடி முன்னுதாரணங்கள்.
 மதீனாவாழ் மக்களில் 18 வயதில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் முஆத் இப்னு ஜபல் (ரலி). அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "மு ஆத் இப்னு ஜபல் (ரலி) நம் சமுதாயத்தில் சிறந்த இளைஞர்'' என்று கணித்ததைக் கவனமாக கூறுகிறார் கஅப் இப்னு மாலிக் (கலி) நூல்- அல்மஸ் தரிக் 5192. தேடலில் சிறப்புடையது கல்வி. அறிவதில் ஆர்வம் வேண்டும். கல்வியின் சிறப்புகளை நிறப்பமாக உணர்ந்த உத்தம நபி (ஸல்) அவர்களின் அருமை தோழர்கள் கல்வியைத் தேடி பெற முந்தி முயன்றனர். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு முன்னோடி.
 "குர்ஆன் உலக மக்களுக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை'' என்று குர்ஆனின் 6-90 - ஆவது வசனம் வரையறுக்கிறது. உங்களில் சிறந்தவர் குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவர் என்ற கோமான் நபி (ஸல்) அவர்கள் கோடிட்டு காட்டியதை உரைக்கிறார் உதுமான் பின் அப்பான் (ரலி) நூல்- புகாரி.
 ஒருமுறை முஆத் இப்னு ஜபல் (ரலி) இறைத்தூதர் இனிய நபி (ஸல்) அவர்களிடம் ""அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கற்று கொடுங்கள்'' என்று முற்றிலும் பணிந்து வேண்டினார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் குர்ஆனை ஓதி காட்டி ஓதி கொடுக்குமாறு கூறினார்கள். நூல்- முஸன்னப் இப்னு அபீûஸபா 406. முஆத் இப்னு ஜபல் (ரலி). சங்கை மிகுந்த குர்ஆனைப் பாங்குடன் பணிந்து கற்றார்கள்.
 முஆதே அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை நான் அதிகம் நேசிக்கிறேன் என்று நேசநபி (ஸல்) அவர்கள் பாசமுடன் பகர்ந்ததும் பணிவான தோழர் முஆத் இப்னு ஜபல் (ரலி) பணிந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை அதிகம் அதிகம் நேசித்து கல்வியை யாசிப்பதாக யோசித்து சொன்னார்கள். நூல்- அஹ்மது 22772, அபூதாவூத் 1522. ஆசிரியர் மாணவர் பணிவைப் பகரும் உரையாடல் இது. முஆத் இப்னு ஜபல் (ரலி) அதிக ஆர்வமாய் புத்திகூர்மையோடு கவனித்து விடா முயற்சியுடனும் பொறுமையோடும் கற்றார்கள். வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் குர்ஆனை மனனம் செய்த நான்கு தோழர்களில் முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களும் ஒருவர் என்று அறிவிக்கிறார் அனஸ் இப்னு மாலிக் (ரலி).
 முஆத் இப்னு ஜபல் (ரலி) முழு முயற்சியோடு குர்ஆனைச் சேர்த்து வைப்பதிலும் மார்க்க சட்டங்களைத் தொகுப்பதிலும் நேரத்தைச் செலவிட்டார்கள். பொழுதைப் பயனுள்ளதாக பயன்படுத்தினார்கள். வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தினார்கள். ஒரு சிறு வாய்ப்பைக்கூட நழுவ விடாது விழுமிய நபி (ஸல்) அவர்களிடம் கல்வியைக் கற்றார்கள்.
 இஸ்லாமிய சட்டங்களுக்குச் சரியான விளக்கங்களைப் பெற்றார்கள். உத்தம நபி (ஸல்) அவர்களும் எத்தனை ஐயங்கள் எழுந்தாலும் அத்தனையையும் தயக்கமின்றி கேட்க ஊக்கம் ஊட்டினார்கள். ஒருமுறை சொர்க்கம் புகும் நற்செயலை நவிலுமாறு நந்நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். பாசநபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்விற்கு நேசமாக நற்செயல்களை நவின்றார்கள். இறைவனோடு உள்ள உறவில் உறுதி வேண்டும். மனிதர்களை மதித்து மரியாதையோடு பழக வேண்டும் என்று பகர்ந்தார்கள். நூல்- அஹ்மது 2616, திர்மிதீ 2016.
 முஆத் பின் ஜபல் (ரலி) அறிஞர்கள் அவையில் ஆர்வமுடன் அமர்வார்கள் நூல்- அஹ்மது 237/2. அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை அறிவார்கள். அறிஞர்களின் அனுபவங்களை அறிந்து அதன்வழி பாடம் பயில்வார்கள். அதனால் அறிஞர்களால் மதிக்கப்பட்டார்கள்.
 ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்காவை வென்று மக்களே மக்களை ஆளும் மக்களாட்சியை நிறுவி மதீனாவிற்குத் திரும்பும் பொழுது திருநபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை மக்காவில் தங்கி இஸ்லாமிய கல்வியையும் சட்டங்களையும் கற்பிக்க கட்டளையிட்டார்கள். மார்க்க சட்டத்தைக் கற்று கொள்ள விரும்புவோர் முஆத் இப்னு ஜபலிடம் செல்ல பணித்தார்கள். செம்மல் நபி (ஸல்) அவர்கள் என்று உரைக்கிறார் உமர் (ரலி). கருணை நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) என்று அறிவிக்கிறார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி). முஆத் இப்னு ஜபல் (ரலி) மனிதர்களுக்குத் தேவையான நல்லதையே கற்று கொடுத்தார்கள். மக்களிடம் முகம் மலர பேசி அகம் குளிர பழகி மக்களின் ஐயங்களுக்கு விளக்கமான பதில் கூறி தெளிவுபடுத்துவார்கள் என்று அறிவிக்கிறார் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஹலால் (ஆகுமானது) ஹராம் (ஆகாதது) சட்டங்களைச் சரியாக அறிந்தவர் முஆத்பின் ஜபல் (ரலி) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நூல்- திர்மிதி 3790. மாணவர்கள் கற்கும் முறையையும் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையையும் முஆத் இப்னு ஜபல் (ரலி) கற்ற கற்பித்த வரலாற்றைப் படித்து அறிய வேண்டும்.
 - மு.அ.அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com