சிந்தை மகிழ்விக்கும் சிறுதாவூர்!

செங்கற்பட்டு மாவட்டத்தில் வழிபாடு சிறப்பு மிக்க திருப்போரூர் அருகில் வரலாற்று பெருமையுடன் திகழ்கின்றது சிறுதாவூர்
சிந்தை மகிழ்விக்கும் சிறுதாவூர்!

செங்கற்பட்டு மாவட்டத்தில் வழிபாடு சிறப்பு மிக்க திருப்போரூர் அருகில் வரலாற்று பெருமையுடன் திகழ்கின்றது சிறுதாவூர். இவ்வூரில் காணப்படும் பெருங்கற்கால சின்னங்கள் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு, அதன் மூலம் இவ்வூர் 4000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என அறியப்படுகின்றது. இவ்வூர் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை மத்திய அரசு படியெடுத்து 1933 - 34, ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இன்று சிறுதாவூர் என இவ்வூர் அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் "சிறுதவூரான நரசிங்க மங்கலம்' என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் சிறுதாவூர் அருகில் உள்ள பையனூர் என்ற ஊர் ராஜகேசரி சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
 பூதகிரீசுவரர் கோயில்: "நீர்வளம்' சிறப்புடன் விளங்கும் இவ்வூரில் வடகிழக்கு மூலையில் அருள்மிகு ஆரண வல்லி சமேத பூதகிரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. புராண வரலாற்று தகவல்களின்படி, காசி தலத்தில் பிரம்மா செய்த யாகத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க கலந்து கொண்ட பூதகணங்கள், யாகம் முடிந்து திரும்புகையில் இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனவாம். பூத கணங்கள் வழிபட்டதால் இத்தல இறைவன் பூதகிரீசுவரர் என்றும் பூதேசுவரர் என்றும் போற்றப்படுகிறார்.
 கிழக்கு நோக்கிய திருக்கோயில் தொண்டை மண்டலத்துக்குரிய கஜபிருஷ்ட வடிவத்தில் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் இறைவன் திருமேனி வெண்மையாகக் காட்சி தருவது சிறப்பாகும். "பால்வண்ணநாதர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இறைவி வேதம் என்ற பொருளுடன் வேதவல்லி - ஆரணவல்லி என்று திருநாமம் கொண்டு தென்திசை நோக்கி அருள்புரிகின்றார். இக்கோயிலில் காணப்படும் நந்தியெம்பெருமான் எங்கும் இல்லாத புதுமையுடன் தனது திருமுகத்தை தென்திசை நோக்கி திரும்பியவாறு காட்சியளிக்கின்றார். இதற்கு, உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவபக்தர் ஒருவர் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பூதகிரீசுவரரை வழிபட வந்தபோது, தரிசனம் முடிந்து திரும்பிய பிறகு அவரது உயிரை பறிக்கலாம் என எமதர்மன் காத்திருந்ததாகவும், கோபமுற்ற நந்தியெம்பெருமான் சிவனடியாரைக் காக்கும் பொருட்டு யமதர்மனை நோக்கி தன் தலையை தென் முகம் திருப்பி பார்த்தார் என்றும் ஒரு தலவராறு கூறப்படுகின்றது.
 மிகவும் பழைமையான இத்திருக்கோயிலுக்கு ராஜராஜ சோழன் இரண்டாம் மற்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன், ஆகிய சோழமன்னர்களும், தெலுங்கு சோழனான விஜயகண்ட கோபாலன், பாண்டிய மன்னர்கள் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மற்றும் சம்புவராய மன்னன் ராச நாராயணன் போன்ற மன்னர்கள் இக்கோயிலின் சிறப்பான வழிபாட்டிற்கும் , நந்தாவிளக்கு எரிக்கவும் நில தானம் அளித்த செய்திகளும், அவ்வப்போது, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட செய்திகளும் கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.
 வெங்கடேச பெருமாள் கோயில்: இவ்வூரில் உள்ள பெருமாள் கோயில் மன்னன் பார்த்திவேந்திரவர்மன் காலத்தில் எடுக்கப்பட்டதாகும். இன்று வெங்கடேச பெருமாள் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுக்களில் "திருமேற்றளி நின்றருளின பெருமாள்' என அழைக்கப்படுகிறார். மேலும் இந்த பெருமாள் "பரசுராம விண்ணகர ஆழ்வார்' என அழைத்துப் போற்றப்படுகிறார். பெருமாளுக்கு அமுது படைக்கும் பொழுது இசைக்கருவிகளை (வாத்தியங்கள்) வாசிக்க ஐந்து பேர்களை "பாடசிவன்' சிங்க புள்ளி என்பவர் நியமித்து அவர்களுக்காக நிலம் தானம் அளித்தார். இத்திருக்கோயிலில் விளக்கு எரிக்க தேவநரசிங்கன் என்பவர் ஆடுகள் தானம் அளித்தார். இவ்வாறு, இக்கோயிலில் சிறப்பான வழிபாடுகள் நடந்துவந்ததை அறிய முடிகிறது.
 இத்தகைய தொன்மையான திருக்கோயில்கள் நமது கலை, கலாசார, பண்பாட்டுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. திருக்கோயிலை ஆதாரமாக மையமாக வைத்து வாழும் மக்களின் வாழ்வு ஒழுக்கநெறி மிகுந்த வாழ்வாக அமையும் என இவ்வூர் மக்களைப் பார்த்து, பழகிய போது தெள்ளென தெரிய வந்தது. இவ்வூர் ஆலயங்களையும் நீர்வளம் மிக்க திருக்குளங்களையும், பசுமையான பயிர் வகைகளையும் காண்கையில் சிந்தை குளிர்கின்றது.
 தற்போது பூதகீரிசுவரர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தெய்வ மூர்த்தங்கள் பாலாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வரும் தை மாதத்தில் (பிப்ரவரி 2020) கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பூதகிரீஸ்வரர் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளை அமைப்புடன், சிறுதாவூர் கிராமமக்கள் ஆர்வத்துடன் இந்த இறைப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். நமது பங்களிப்பும் அதில் இருக்கலாமே! பாரம்பரியம் மிக்க இந்த சிவாலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வரலாமே!
 திருப்போரூர் தலத்திலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் சிறுதாவூர் அமைந்துள்ளது. அரசு, தனியார் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளும் உள்ளன.
 தொடர்புக்கு: வி.குமார்- 98404 78789 / 86105 74537.
 - கி.ஸ்ரீதரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com